அங்கோர்: சிறிய சுற்றில் ஒரு பயணம் – 3

அங்கோர் கோயில்களை பார்ப்பதற்காக இரண்டாம் நாள் சிறிய சுற்றிலும் நான்காம் நாள் தூர இடங்களுக்கும் பயணம் செய்த பதிவு இது.

img_1898இரண்டாம் நாள் துவிச்சக்கர வண்டியில் மிதித்துக் கொண்டு வடக்கு நோக்கி பயணமானோம். இன்று நாம் சிறிய சுற்றில் பயணிப்பதாக முடிவு செய்தோம். போகும் வழியில் ஒரு பேக்கரியில் (வெதுப்பகம்) பாண் வாங்கி சாப்பிட்டுவிட்டு மதிய சாப்பாட்டிற்கும் சேமித்துக் கொண்டு பயணத்தை தொடர்ந்தோம். வழி முழுவது இருந்த உயர்ந்த அடர்ந்த மரங்கள் நிழல் தந்து வெய்யிலின் அகோரத்தைக் குறைத்தன. உண்மையில் இவை காடுகள். சில கி.மீ அப்பால் முதலில் வருவது அங்கோர் வாட் (Angkor Wat) கோயில். இதைப் பார்ப்பதற்கு கடைசி நாளை ஒதுக்கியிருந்தோம். ஆகவே இதைப் பார்க்காமல் கடந்து மேற்குப் பக்கமாகத் திரும்பி மீண்டும் வடக்கு நோக்கி பயணமானோம். சில க.மீ சென்ற பின் தெற்கு வாசல் ஒன்று வரும்.  இவ்வாறு நான்கு பக்கங்களிலும் உள்ள வாசல்கள் 10 கி.மீ சதுரப்பரப்பளவை உள்ளடக்கியுள்ளன.  இதனையே பிரதான அங்கோர் தொம் (Angkor Thom) எனக் கூறுகின்றார்கள்.

img_1877அங்கோர் தொம் (Angkor Thom) வாசலில் ோபுரம் உள்ளது. அதன் உச்சியில் நான்கு முகங்கள் கொண்ட சிற்பங்கள் உள்ளன. இந்த முகங்கள் புத்தரையும் அரசரையும் பிரதிபலிப்பதாக கருதப்படுகின்றது. இந்த வாசலின் முன்னால் ஒரு பாலம் உள்ளது.  அதன் இரு பகுதிகளிலும் தேவர்களும் அசுர்களும் பாம்பினைக் கொண்டு பாற்கடலை கடையும் சிற்பங்கள் இருக்கின்றன.  பாலத்தின் இரு புறமும் அகழிகள் அல்லது நீர் நிலைகள். இந்த வாசலில் மட்டும் தான் இச் சிலைகள் ஒரளவு உடையாமல் இருக்கின்றன. மற்றப் பக்கங்களிலுள்ள வாசல்களில் எல்லாம் உடைந்து காணப்படுகின்றன.  இவற்றைப் 12ம் நூற்றாண்டில் கட்டியவர் ஏழவாது ஜெயவர்மன். இங்கிருந்து மேலும் ஒரு கி.மீ தூரம் செல்ல போயோன் (Bayon) என்ற கோயில் வருகின்றது.

பேயோன்(Bayon)

img_1901பேயோன்(Bayon) கோயிலை 12ம் 13ம் நூற்றாண்டுகளில் ஏழவாது மற்றும் எட்டாவது ஜெயவர்மன் கட்டினர். இக் கோயில் அங்கோர் வாட்டுடன் ஒப்பிடும் பொழுது ஒரளவு சிதைவடைந்திருந்தாலும் ஏறிப் பார்க்க கூடியது. நான்கு பக்கமும் வாசல்கள் உள்ள சுற்றுமதில். நடுவில் சதுர வடிவமான மூன்று தளங்களில் அமைந்த கட்டிடம். இத் தளங்களின் மீது முகவடிவிலான கோபுரங்களும் சிங்கத்தின் சிலைகளும் உள்ளன.. இக் கோயிலின் பிரதானமான பிரபல்யமான சிறப்பம்சம் நான்கு பக்கமும் புத்தரின் முகங்களை சிலைகளாக கொண்ட 54 (இன்று 37) கோபுரங்களாகும். அதாவது 216 முகங்கள் உள்ளன. img_1903இம் முகங்கள் அரசனின் முகத்தைப் பிரதிபலிப்பதாகவும் கூறுகின்றார்கள். மேலும் இக் கோயிலில் 11000 ஆயிரம் சிலைகள் இருக்கின்றன. உட்சுற்று மதில் சுவர்களில் காணப்படும் பல்வேறு சிற்பங்களும் முக்கியத்துமானவையான விளங்குகின்றன. இவை போர்களையும் மக்களின் வாழ்வையும் இயற்கையையும் பிரதிபலிப்பனவாக உள்ளன. இக் கட்டிடக் கலையின் அமைப்பும் அதன் அர்த்தங்களும் அறிவதற்கு மிகவும் சிக்கலானவை என்கின்றனர். அகவே சுற்றிப் பார்ப்பதற்கு இரண்டு மணித்தியாலங்களாவது தேவை. அறிவதற்கோ நீண்ட நாட்கள் தேவை.

img_2138இக் கோயிலிருந்து சிறிது வடக்கு நோக்கி செம் மண் பாதையில் சென்று பின் கிழக்கு நோக்கி இருபுறமும் மரங்கள் நிறைந்த  பாதையில் ஒரு கி.மீ பயணிக்கும் பொழுது கிழக்கு வாசல் வருகின்றது. இந்த வாசலில் கோபுரம் இருந்தபோதும் வீதியின் இரு பக்கங்களும் இருக்கின்ற அசுரர்களும் தேவர்களும் சிதைந்து போயுள்ளார்கள். இந்த வாசலைக் கடந்து மேலும் சிறிது கி.மீ தூரம் செல்ல டா கேஓ (Ta Keo) என்ற கோயில் வருகின்றது.

டா கேஓ (Ta Keo)

img_2153டா கேஓ (Ta Keo)  கோயிலை 10ம்11ம் நூற்றாண்டுகளில் ஐந்தாவது ஜெயவர்மனும் ஜெயவீரவர்மனும் கட்டியதாக கூறுகின்றார்கள். மேல் தளத்தில் ஐந்து கோபுரங்களை மட்டும் கொண்ட இக் கோயிலை மலைக் கோயில் என்கின்றார்கள்.  இவை மௌன்ட் மேருவின் ஐந்து மலை உச்சிகளை பிரதிபலிக்கின்றதாகவும் குறிப்பிடுகின்றார்கள். இரண்டு சுற்று மதில்களைக் கொண்டதுடன் நடுவில் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டிடம் உள்ளது. சரிவு குறைவான ஒரளவு நிலைக்குத்தான இதன் படிக்கட்டுகளில் ஏறி மேலே செல்வது சவாலானது. இப் படிக்கட்டுகளின் அடியில் நந்திகள் குந்தியிருக்கின்றன. இவற்றைப் பார்த்த பின் தெற்கு நோக்கி சென்று  மீண்டும் கிழக்கு நோக்கி ஒரு க.மீ தூரம் பயணித்தோம். அந்த திருப்பத்தில் டா புரோகம் (Ta Prohm) என்ற கோயில் உள்ளது.

டா புரோம் (Ta Prohm)

img_2237டா புரோம் (Ta Prohm) கோயிலை 12ம் நூற்றாண்டில் ஏழாவது ஜெயவர்மன் கட்ட 13ம் நூற்றாண்டில் இரண்டாவது இந்திரவர்மன் பெரிதாக்கி கட்டினார். பெரிய மதில் சுற்றியிருக்கு மூன்று உட்சுற்றுச் சுவர்களைக் கொண்ட  இதனை அரச மடம் எனவும் கூறுகின்றனர். வெளி மதிலின் வாசலில் சிதைத்த கோபுரம் உள்ளது. கடந்து செல்ல இரண்டு பக்கமும் சிறு குளங்கள் இருக்க நடுவில் தேவதாசிகள் நடனமாடுவதற்கான முத்தம். இக் கோவில் மிகவும் சிதைவடைந்த நிலையில் கட்டிடங்களின் மேல் மிகவும் உயரமான தடித்த மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இவற்றின் வேர்கள் இக் கட்டிடங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. முதல் இரண்டு கோவில்களையும் தவிர்த்து மற்ற கோயில்கள் எல்லாவற்றிலும் இவ்வாறு பெரும் மரங்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. இதனால் உருவான புதிய வடிவங்களும் அவற்றின் இருப்பும் முக்கியத்துவத்தைப் பெறுவதுடன் அனைவரினது கவனத்தையும் ஈர்க்கின்றன. ஒருவகையில் இந்த மரங்களே இக் கட்டிடங்களின் தூண்களாகவும் இருக்கின்றன. ஆனால் மரங்கள் மரணிக்கும் பொழுது அல்லது பலமான காற்றுகளால் விழும் பொழுது கட்டிடங்களும் சிதைவடைகின்றன. இருப்பினும் இதனை மரங்களின் கோயில் என்கின்றார்கள். மர வேர்களுக்குள் மறைந்திருக்கும் புத்தர் அதிசயமாகப் பார்க்கப்படுகின்றார்.

img_2359இப்பாதையில் நேராக சென்றால் நேற்று நாம் பெரிய சுற்றுக்காக தெற்கிலிருந்து வந்து கிழக்கு நோக்கித் திரும்பிய டி(T) சந்தி வருகின்றது. நாம் அங்கு செல்லாமல் மீண்டும் வந்த பாதையில் தங்குமிடம் திரும்பினோம். இன்று தூவிச்சக்கர வண்டியில் மிதித்து நீண்ட தூரம் பயணம் செய்தால் களைத்துப் போய் சிறிய சுற்றை மாலை ஐந்து  மணிக்கு முன்பாகவே முடித்துக் கொண்டோம். காலையிலிருந்து பாணுடனும் இளநீருடனும் இருப்பதால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை. உடல் மட்டுமல்ல மூளையும் களைத்துவிட்டது. இன்று நாம் ஏற்கனவே தங்கியிருந்த இடத்திலிருந்து இன்னுமொரு மலிவான தங்குமிடத்திற்கும் மாறிக் கொண்டோம். பின் இன்னுமொரு இந்திய உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றோம். சியாம் ரெப் அழகான கொண்டாட்டமான நகரம். மூன்றாம் நாள் பொழுதை இங்கு கழித்தோம்.

அங்கோர் வாட் (Angkor Wat)

img_2454நான்காம் நாள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பதால் டுக்டுக்கை வாடகைக்குப் பிடித்தோம். அதிகாலை ஐந்து மணிக்குப் பயணத்தை ஆரம்பித்தோம். குளிர் காற்று நம் உடல்களைத் தடவிச் சென்றது. கோயில் வாசலில் சூடான தேநீரை வாங்கிக் குடித்து உடம்பைச் சூடாக்கினோம். அங்கோர் வாட் (Angkor Wat) நீரினால் (அல்லது அகழியினால்) சுழப்பட்டிருக்கின்றது. (இதற்கான காரணத்தை வீடியோவில் பார்க்கலாம்). மேற்குப் பக்கமாக உள்ள ஒரே ஒரு பாலத்தினுடாக நடந்து வாசலை அடைந்தோம். இந்த வழியின் இரு பக்கங்களிலும் பாம்பின் சிலைகள் இருக்கின்றன.  உள்ளே சென்று அங்கோர் வாட் (Angkor Wat) கோயிலின் முன்னால் உள்ள கேணியின் அருகில் நின்று சூரிய உதயம் பார்ப்பது  மிக அழகு. இதனை பூமியில் இருக்கும் சொர்க்கம் என்றும் குறிப்பிடுகின்றார்கள். இக் கோயில் 12ம் நூற்றாண்டில் கட்டியவர் இரண்டாவது சூரியவர்மன். img_2595 இதன் பின்பு சில அரசர்களால் புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மற்ற கோவில்களை விட சிதைவடையாமல் ஒரளவு நல்ல நிலையில் இருப்பதும் இதுவாகும்.  1300 * 1500 மீட்டர் சுற்றளவைக் கொண்ட மதிலினுள் மூன்று தளங்களில் கட்டப்பட்ட விஸ்ணுவிற்கான கோயிலாகும். பிற்காலங்களில் இது தேரவாத பௌத்தமத கோயிலாக மாற்றப்பட புத்தர் சிலைகள் வைக்கப்பட்டன. இது கிட்டதட்ட கைலாச மலையைப்போல வடிவமைக்கப்பட்டுள்ளது.  இக் கோயிலின் மூன்றாவது தளத்தில் ஏறிப் பார்ப்பது நல்லதொரு அனுபவம். நான்கு சுற்றுச் சுவர்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு உட்சுற்றுச் சுவர்களிலும் img_2534இராமாயணம் மாகாபாரத கதைகளும் மற்றும் கம்போடிய மக்களின் நாளாந்த வாழ்வும் ஓவியங்களாக செதுக்கப்பட்டுள்ளன. உள்ளே உள்ள மூன்று சுற்றுச் சுவர்களும் நடுவால் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவின் நடுவிலும் வெளி இருக்க சுற்றிவர துண்களுடன் சுவர்களில் சிற்பங்களும் காணப்படுகின்றன.  மையத்திலும் சுற்றி உள்ள நான்கு முலைகளிலும் கோபுரங்கள் உள்ளன. இதைவிட வெளி மதிலின் முலைகளிலும் கோபுரங்கள் காணப்படுகின்றன. அங்கோர் வாட் கேமருக்களின் தேசிய அடையாளமாக பயன்படுத்தப்படுவதுடன் அவர்களின் பெருமையாகவும் கருதப்படுகின்றது. இதைச் சுற்றி ஒழுங்காகப் பார்க்க வேண்டுமாயின் மூன்று நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் தேவை.

பான்டி சீரே (Banteay Srey)

img_2795அங்கோர் வாட் கோயிலை பார்த்துவிட்டு 37 கிமீ தூரத்திலுள்ள பான்டி சீரே (Banteay Srey) என்ற கோயிலுக்குச் சென்றோம். இதனைப் 10ம் நூற்றாண்டில் ராஜேந்திரவர்மன் கட்டியுள்ளார். அனைத்து அங்கோர் கோவில்களும் அரசர்களால் கட்டப்பட்டவை. ஆனால் இது மட்டுமே அரசரின் ஆலோசகர் (குரு) யஜன்வராக என்பவரால் கட்டப்பட்டது. இவை ஒரே தளத்திலுள்ள சிவாவின் சின்னஞ் சிறிய கோயில்கள் பல. ஆனால் இதன் கட்டிடக்கலையும் செதுக்கப்பட்ட சிற்பங்களும் வியந்து பேசப்படுவதுடன் மற்றக் கோயில்களைவிட தனித்துவமாக விளங்குவதாகவும் கூறுகின்றனர். img_2750ஏரிகளும் வயல்களும் மரங்களும் சுற்றியிருக்க செம்பாட்டு மண் மீது இருக்கும் இக் கோயில் அழகாக காட்சி தருகின்றது. ஊரிலுள்ள சிறிய கோயில்களுக்கு சிறுவயதில் சென்ற நினைவுகளை கிளர்த்தியது.

இங்கிருந்து இன்னுமொரு பத்துக் கி.மீ தூரத்தில் நீர்விழ்ச்சியுடன் இணைந்த கோயில் (Kbai Spean) உள்ளது. அதற்கு நாம் கொடுத்த பணத்துடன் செல்லலாம். ஆனால் நாம் முன்கூட்டியே அதைக் கூறவில்லை. அதனால் தவறவிட்டுவிட்டோம். ஆகவே மீண்டும் வரும் வழியில்  கம்போடியா கண்ணிவெடி அருற்காட்சியகத்தைப் பாரத்தோம். (இப் பதிவை இங்கு வாசிக்கலாம்). பின் வடக்கு வாசலினுடாகப் பயணித்து அங்கோர் தொம் (Angkor Thom) வளவிற்குள் தவறவிட்ட அரண்மனை இருந்த இடத்தையும் பாபுகோன் (Baphuon) என்ற கோயிலையும் பார்த்தோம்.

பாபுயோன் (Bapuon)

img_2911பாபுயோன் (Bapuon) பதினோராம் நூற்றாண்டின் மத்தியில் (1060) இரண்டாவது உதயவர்மனால் கட்டப்பட்டது. நீண்ட அகண்ட பரப்பெல்லைகளைக் கொண்டுள்ளதுடன் நீளமான வாசலையும் (நடை பாதையை) கொண்டுள்ளது.  மூன்று தளங்களைக் கொண்டுள்ள இக் கோயிலின் ஒரு பக்க அடித்தளம் புத்தர் படுத்திருப்பது போன்று அதன் சுவரையே ஒரு சிற்பமாக்கியிருக்கின்றார்கள். img_2943 அதாவது கட்டிடத்தின்  அடிக்கட்டுமானம் பார்ப்பதற்கு அப்படி உள்ளது. மிகச் சிறந்த கட்டிடக் கலைக்கான எடுத்துக் காட்டாக இது உள்ளது என்கின்றனர். இது பலமுறை சிதைக்கப்பட்டது கவனிப்பாரற்றுக் கிடந்தபோது அகழ்வாராச்சியாளர்கள் இதனை மீளக் கட்டியுள்ளமை அதன் சிறப்பாகும். மூன்று தளங்கள் கொண்ட இக் கோயிலின் ஒவ்வொரு தளங்களுக்கும் ஏறிப் பார்ப்பது அவசியமானதாகும்.

பீமேனகாஸ் (Phimeanakas)

img_2898பாபுயோன் (Bapuon) கோயிலுக்கு வடக்குப் பக்கத்தில் உள்ளது பீமேனகாஸ் (Phimeanakas) என்ற கோயில் உள்ளது. அதனருகில் அரண்மனை இருந்ததற்கான சான்றுகளும் உள்ளன..  இக் கோயில் சிதைவடைந்திருப்பதால் இதற்குள் செல்வதற்கும் மேலே ஏறுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுற்றி நடந்து பார்க்கலாம். இவற்றைப் பத்தாம் நூற்றாண்டில் ஐந்தாவது ஜெயவர்மனும் அதனைத் தொடர்ந்து முதலாவது உதயவர்மன் மற்றும் சூரியவர்மன் ஆகியோர் கட்டியதாக கூறுகின்றனர். மூன்று தளங்களும் உச்சியில் கோபுரங்களும் உள்ளன. நான்கு பக்கமும் வாசல்களும் உச்சிக்கு செல்வதற்கான படிக்கட்டுகளும் காணப்படுகின்றன. படிக்கட்டுகளின் இருபுறமும் ஒவ்வொரு தளங்களிலும் சிங்க சிலைகள் இருக்கின்றன.

img_1997இவற்றைப் பார்த்துவிட்டு  மேற்கு வாசலினுடாக பயணித்து மேற்கு பாரே (West Baray) என்ற நன்ணீர் திட்டத்திற்கு சென்றோம்.  இதன் நடுவில் மேற்கு மேபோன் (West Mebon) என்ற கோயில் உள்ளது. படகில் சென்று பார்க்க வேண்டும். ஏற்கனவே நேரமாகிவிட்டதால் இதையும் தவறவிட்டோம்.

இறுதியாக இங்குள்ள அனைத்து கோவில்களும் ஆரம்பத்தில் இந்து அல்லது சைவ மத அடிப்படையில் கட்டப்பட்டவை. மூலஸ்தானங்களில் பல லிங்கங்கள் இருந்துள்ளன. ஏதோ ஒரு லிங்கத்தின் அடியின் யாரோ ஒருவர் வைரங்களை கண்டெடுத்ததாகவும் அதன் பின்னர் அனைத்து லிங்கங்களும் தோண்டப்பட்டு காணாமல் போனதாகவும் கூறப்படுகின்றது. ஆகவே இப்பொழுது லிங்கங்கள் இருந்த இடங்களில் அதன் அடித்தளங்கள் (யோனிகள்) மட்டுமே உள்ளன. அல்லது அவற்றின் மேல் புத்தர் சிலைகள் இருக்கின்றன.img_1427 ஒவ்வொரு காலங்களிலும் ஆட்சி செய்த அரசரின் நம்பிக்கைகளுக்கு ஏற்ப கோவில்கள் இந்து, சைவ அல்லது பௌத்த கோவில்களாக உருவாகியுள்ளன. அங்கோர் இராஜ்ஜியத்தின் அழிவின் போது இந்து கோவில்களாக இருந்து இப்பொழுது அனைத்தும் பௌத்த கோவில்களாக மாறிவிட்டன. எல்லாக் கோவில்களிலும் பிரம்மா, விஸ்ணு, சிவா ஆகியோருக்கான கோபுரங்கள் இருந்தபோதும் மூலஸ்தானத்தில் புத்தரே பிரதானமாக இருக்கின்றார். கோவில்களின் சுவர்களில் எல்லாம் கேமரு மக்களின் நாளாந்த வாழ்வு மட்டுமல்ல அரசர்களின் போர்களும் இராமாயாண மாகா பாரத கதைகளும் சிற்பங்களாக செதுக்கப்பட்டும் ஓவியங்களாக வரையப்பட்டுமுள்ளன. எல்லாக் கோவில்களிலும் அதன் கிழக்குப் பக்கத்தில் ஒன்று அல்லது இரண்டு  நூலகங்கள் இருந்துள்ளமை முக்கியமானது. இங்கு பல சாஸ்திர வேத நூல்கள் சுவடிகள் இருந்ததாக கருதப்படுகின்றது. img002 இன்று இக் கோயில்கள் சிதைவுகளின் பின்னரும் சிறப்பாக விளங்குவதற்கு காரணம் தொல்பொருள் அகழ்வராச்சியாளர்களே என்றால் மிகையல்ல. அவர்களின் கடுமையான உழைப்பு இதன் சிறப்பை நாம் காண்பதற்கு வழிவகுக்கின்றது. இதேவேளை இந்த அரசர்களின் நோக்கங்கள், இதற்காக சுரண்டப்பட்ட உழைப்புகள், தொழிலாளர்களின் இழப்புகள் என்பன தொடர்பான அறிய சமூக பொருளாதார அரசியல் ஆய்வுகள் செய்வதன் மூலமே அறியலாம். இதற்கு கம்போடிய பூர்விக குடிகளான கேமர்களின் வரலாறு மற்றும் வாழ்வு தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும். அல்லது இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளை கற்க வேண்டும். இது இன்னுமொரு செயற்பாடாகும்.

அறிவு என்பது ஐரோப்பியர்கள் மட்டும் கண்டுபிடித்த ஒருவிடயமுமல்ல அவர்களுக்கு சொந்தமானதுமல்ல. அது ஆசியாவிற்கும் சொந்தமானதாகும். அதற்கான பல சான்றுகளில் ஒன்றாக விளங்குவதே அங்கோர் கோயில்கள் எனலாம். இக் கட்டிடக் கலையின் நுற்பங்களைப் பார்த்து வியந்து பேசுவதை பின்வரும் காணொளியில் பார்க்கலாம் கேட்கலாம்.

அங்கோர்: பெரிய சுற்றில் ஒரு பயணம்

அங்கோர்: கம்பூச்சியாவின் அடையாளம்

அங்கோர் கோயில்களின் படங்களை பின்வரும் இணைப்பில் பார்க்கலாம்.

நண்பர்களின் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி பல.
அனைவருக்கும் புது வருட வாழ்த்துகள்.

புதுவருடம் புதிய வாழ்வை அனைவருக்கும் தரட்டும்…
அதற்காக உழைப்போமாக…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s