அங்கோர்: கம்பூச்சியாவின் அடையாளம் -1

img_2440அங்கோர்: கம்பூச்சியாவின் அடையாளம்

அங்கோர் ஒரு கோயில் அல்ல பல கோயில்களின் கூடாரம்

அங்குர் வாட் (Angkor Wat) தொடர்பான அறிமுகம் எப்படி எப்பொழுது கிடைத்தது என நினைவில்லை. இக் காலங்களில் இவ்வாறான பழங்கால விடயங்கள் மட்டுமல்ல புதிய விடையங்களையும் அறிந்து கொள்வது என்பது மிக இலகுவானது. ஆனால் அது தரும் தகவல்கள் எந்தளவு உண்மையானது என்பது எப்பொழுதுமே கேள்விக்கிடமானது. அப்படித்தான் அங்கோர் வாட் தொடர்பாக கிடைத்த தகவல்களும் இருந்தன. உதாரணமாக இது சேர சோழ பாண்டியர்கள் கட்டியது. தமிழர்களின் புகழ், ஆட்சி, அதிகாரம் என்பன தூர கிழக்கு ஆசியா வரை பரந்துள்ளது என வாசித்த நினைவும் உள்ளது. ஆனால் நமது பயணத்தின் போது அறிந்த வாசித்த தகவல்கள் இது முழுக்க முழுக்க கம்போடிய (அல்லது கம்பூச்சிய) கேமர் மக்களின் கட்டிடக் கலையின் வெளிப்பாடுகள் எனக் கூறுகின்றன. அதேநேரம் அங்கோர் இராச்சியம் அல்லது கம்போடிய பிரசேதங்களின்  மீது இந்திய மற்றும் சீன ஆகியவற்றின் ஆதிக்கம் கி.மு இருந்தே ஆயிரம் வருடங்களாக தொடர்ந்துள்ளன. ஆகவே இவற்றின் கலவையாகவும் இவை இருக்கலாம் எனக் கருத இடமுண்டு என்கின்றனர்.  இவை ஆய்வுக்குரிய விடமாகும்.

img_1900அங்கோர் இராச்சியத்தின் ஆரம்பம் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து 15ம் நூற்றாண்டு வரை தொடர்கின்றது. ஒன்பதாம் நூற்றாண்டில் இரண்டாவது ஜெயவர்மனால் (790-835) ஒன்றினைக்கப்பட்ட கேமர் இராஜ்ஜியம் மூன்றாவது ஜெயவர்மன் (835-877), முதலாவது இந்திரவர்மன் (877-886), முதலாவது யசோவர்மன் (889-915), முதலாவது ஹர்சவர்மன் (915-923), நான்காவது ஜெயவர்மன் (928-944), ராஜேந்திரவர்மன் (944-968), ஐந்தாவது ஜெயவர்மன் (968-1000), ஜெயவீரவர்மன் (1002-1010), முதலாவது சூரியவர்மன் (1002-1049), இரண்டாவது உதயடித்தியவர்மன் (1050-1066), இரண்டாவது சூரியவர்மன் (1113-1150), இரண்டாவது யசோவர்மன் (1150-1165), ஏழாவது ஜெயவர்மன் (1181-1220), இரண்டாவது இந்திரவர்மன் (1220-1243), எட்டாவது ஜெயவர்மன் (1243-1295), சிரிந்திரவர்மன் (1295-1307) எனத் தொடர்ந்து 15ம் நூற்றாண்டில் நிறைவுபெற்றது. இதன்பின்பு இவை கைவிடப்பட்டன. அல்லது சிதறி சிறிய சிற்றரசுகளாக இயங்கி தமக்குள் சண்டைபிடித்து அயல் img_2222நாடுகளின் ஆதிக்கத்திற்குள் சென்றன. மேற்குறிப்பிட்ட காலங்களில் ஆட்சி செய்த அரசர்களின் பெயர்கள் தமிழ் பெயர்களைப்போல இருக்கின்றமை ஆச்சரியமானது. இங்கிருக்கும் சில எழுத்துக்கள் தென்னிந்திய பாண்டியர் காலத்து எழுத்துகளை ஒத்தனவாக இருக்கின்றன எனவும் சில இடங்களில் சமஸ்கிரத எழுத்துகளும் உள்ளதாக குறிப்பிடுகின்றார்கள். ஆனால் இவர்களுக்கான மொழி இக் காலங்களில் உருவாகி வளர்ந்ததற்கான சான்றுகளும் உள்ளன என்கின்றனர். இதற்கப்பால் இந்து மதம், சைவம் மற்றும் இறுதியாக பௌத்தம் என்பன இந்தியாவிலிருந்து வர்த்தகர்களால் வந்திருக்கலாம் என்கின்றனர்.  மேலும் அரசர்களின் நம்பிக்கைகளுக்கும் ஏற்ப ஒவ்வொரு காலகட்டங்களில் ஒவ்வொரு மதங்கள் முக்கியத்துவம் பெற்றன. பத்தாம் நூற்றாண்டில் சோழர் படைபெயடுப்பு நடந்ததாக சில தகவல்கள் கூறுகின்றன. இவை இந்த வரலாறுகள் தொடர்பாக மேலும் அறியும் ஆவலை ஏற்படுத்தின. ஆனால் இந்தப் பதிவு அங்கோர் வாட் என்ற கோயில்களைப் பற்றியது மட்டுமே.

400px-karta_angkorwatகம்போடியாவின் சியாம் ரெப் (Siem Reap)  என்ற நகருக்குச் செல்வதற்கான முக்கிய நோக்கம் அங்கோர் வாட் (Angkor Wat) என்ற பழங்கால கட்டிடக் கலையை பார்ப்பதற்காகவே இருக்கும். இக் கோயில்களை மூன்று வழிகளில் பார்க்கலாம். சிறிய சுற்று. மாபெரும் சுற்று. மற்றும் தூர இடங்கள். ஒருவர் சியான் ரெப்பிலிருந்து (Siem Reap)  சிறிய சுற்றில் தனது பயணத்தை ஆரம்பித்தால் முதலில் வருவது அங்கோர் வாட் (Angkor Wat) கோயிலாகும். அங்கோர் வாட்டிலிருந்து நேராக வடக்கு நோக்கி செல்ல தெற்கு வாசல் வரும். இவ்வாறு நான்கு பக்கங்களிலும் உள்ள வாசல்கள் 10 கி.மீ சதுரப்பரப்பளவை உள்ளடக்கியுள்ளன.  இதனை பிரதான அங்கோர் தொம் எனக் கூறுகின்றார்கள்..  இந்த வாசலிலிருந்து மேலும் ஒரு கி.மீ தூரம் பயணம் செய்தால் பேயோன்(Bayon) என்ற கோயில் உள்ளது. இதனைக் கடந்து சிறிது தூரம் வடக்கே செல்ல மேற்குப்புறத்தில் பாபுயோன் (Bapuon) என்ற கோயிலும் அதற்கு அருகாமையில் அதன் வட பகுதியில் பீமேனகாஸ் (Phimeanakas) என்ற கோயிலும் உள்ளது. இதற்கு அருகில் அரண்மனையும் இருந்ததற்கான சான்றுகளும் உள்ளன..  இவற்றுக்கு முன்னாலுள்ள (வடக்கு தெற்காக செல்லும்) வீதியின் மறுபக்கத்தில் (கிழக்கில்) சிறிய கோவில்கள் உள்ளன. மேலும் இங்கிருந்து இவற்றிக்கிடையால் ஒரு பாதை கிழக்கு நோக்கி செல்கின்றது. img002இப் பாதையில் ஒரு கி.மீ பயணிக்கும் பொழுது கிழக்கு வாசல் வருகின்றது. இந்த வாசலைக் கடந்து மேலும் சிறிது கி.மீ தூரம் செல்ல டா கேஓ (Ta Keo) என்ற கோயில் உள்ளது.  பின் அந்த வீதி தெற்கு நோக்கி சென்று  மீண்டும் கிழக்கு நோக்கி பயணிக்கின்றது. அந்த திருப்பத்தில் டா புரோகம் (Ta Prohm) என்ற கோயில் உள்ளது. இப்பாதையில் நேராக கிழக்கு நோக்கி சென்றால் டி(T) சந்தி இருகின்றது. இச் சந்தியில் தெற்கு நோக்கி திரும்ப அதன் மேற்குப் பக்கத்தில் பான்டியே கேடய் (Banteay Kdei) என்ற கோயிலும் அதற்கு முன்னால் பழங்கால கேணியையும் (Sras Srang) உள்ளது. தொடர்ந்து தெற்கு நோக்கி செல்ல பிரசாட் கிரவன் (Prasat Kravan) என்ற கோயில் உள்ளது. இவற்றைப் பார்த்துவிட்டால் சிறிய சுற்று முடிந்துவிடும்.  இச் சிறிய சுற்றிலுள்ள கோவில்கள் அனைத்தையும் முதல் நாள் பார்க்காதவர்கள் மூன்று நாள் அனுமதிச் சீட்டு வாங்கியிருந்தால் அடுத்த இரண்டு நாற்களும் பார்க்கலாம். இப்பொழுது பெரிய சுற்று என்னவெனப் பார்ப்போம்.

big-circuitஇரண்டாம் நாள் பெரிய சுற்றையும் அங்கோவர் வாட் அல்லது அங்கோர் தொம்மிலிருந்து ஆரம்பிக்கலாம். முதல் நாள் சிறிய சுற்றில் தவறவிட்ட அல்லது கவனமாக பார்க்க வேண்டிய கோவில்களிலிருந்து ஆரம்பிக்கலாம். விட்ட குறைகளை முடித்துக் கொண்டு அங்கோர் தொம்மின் வடக்கு வாசல் வழியாக வெளியேறி சிறிது தூரம் செல்ல பிரேயா கான் (Preah Khan) என்ற கோயிலை அல்லது பல்கலைகக்கழம் உள்ளது. இங்கிருந்து மேலும் கிழக்கு நோக்கி செல்ல நியாக் போன் (Neak Poan) என்ற கேணிக்கு உள்ளே இருக்கின்ற கோயில் உள்ளது. தொடர்ந்து கிழக்கு நோக்கி பயணித்து தெற்கு நோக்கி திரும்ப டா சோம் (Ta Som) என்ற கோயில் உள்ளது.  தெற்கு நோக்கிப் பயணிக்க கிழக்கு மெபோன் (East Mebon) கோயிலும் அதன் பின் சிறிது தூரத்தில் பிரி ருப் (Pre Rup) கோயிலும் உள்ளது. இவற்றைப் பார்த்துக் கொண்டு நேரமில்லையெனில் டி(T) சந்தியில் தெற்கு நோக்கி திரும்பி சியாம் ரெப்பை அடையலாம். நேரமிருந்தால் களைப்பில்லையெனில் மாலை 5.30 மணிக்கு முதல் நேற்றும் இன்றும் விட்ட குறைகளைப் பார்க்கலாம். ஏனெனில் ஒரே தரத்தில் பார்க்க முடியதாவாறு சிறு சிறு விடயங்கள் நிறைந்து காணப்படுவதுடன் பிரமாண்டமான கோயில்களாகவும் இருக்கின்றன.

angkor-wat-small-circuit2மூன்றாம் நாள் சியாம் ரெப்பிலிருந்து 37 மற்றும் 50 கி.மீ தூரத்திலுள்ள பாண்டே சிரே (Banteay Srey) காபாய் ஸ்பியன் (Kbai Spean) மற்றும் போனம் குலன் (Phnom Kulen) என்ற கோயில்களுக்கும் செல்லலாம்.  மேலும் நேரமிருந்தால் அங்கோர் வாட்டிலிருந்து சில கி.மீ கள் மேற்கிலுள்ள மேற்கு பாரே (West Baray) என்ற மிகப் பெரிய நன்ணீர் திட்ட சேமிப்பின் நடுவில் மேற்கு மேபோன் (West Mebon) என்ற கோயிலுக்கு செல்லலாம். இதைவிட சியாம் ரெப்பிற்கு கிழக்காக 13 கி.மீ தூரத்தில் பாக்ஒங் (Bakong) என்ற இன்னுமொரு கோயில்களில் கூடம் உள்ளது.

img_1480இதுவரை அங்கோர் வாட் ஒரே ஒரு பெரிய கோயில் என்று மட்டுமே எண்ணியிருந்தேன். ஆனால் நேரில் பார்த்தபின் இது பல கோயில்களின் ஒரு கூடாராம் போல இருக்கின்றது. எத்தனை வித விதமான கலை வேலைப்பாடுகள் கொண்ட கோயில்கள். இதற்குப் பின்னால் இருந்த மனித உழைப்பே எப்பொழுதும் என் எண்ணங்களில் ஓடிக் கொண்டிருந்தது. இன்று அரசர்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் இக் கோயில்களில் எத்தனை தொழிலாளர்களின் உழைப்பும் துறைசார் நிபுணர்களின் ஆற்றல்களும் உள்வாங்கப்பட்டிருக்கும். ஆனால் அவர்களின் பெயர்கள் இன்றில்லை. இவர்களின் ஆற்றல்களில் உருவான இக் கோயில்களின் கலை வேலைப்பாடுகளும் கட்டிடக் கலைகளும் முக்கியத்துவமுடையவை. அந்தவகையில் இதற்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் தொடர்பான சில தகவல்களைப் பார்ப்பதும் பயனுள்ளது.

img_1426இக் கோயில்களைக் கட்ட பிரதானமாக மூன்று வகையான கற்களை பயன்படுத்தியுள்ளனர். அவையாவன செங்கல் (Brick ) மணற்கல் (Sandstone) மற்றும் செம்மைக் கல் (கூகிலின் மொழி பெயர்ப்பு – laterite). பல வகையான அளவுகள் கொண்ட செங்கற்களைப் பயன்டுத்தியுள்ளனர். ஆகப் பெரியதும் பழமையானதுமான கல்லின் அளவு 30*15*7 செ.மீ ஆகும். இது பயன்படுத்துவதற்கு இலகுவானது என்பதால் ஆரம்ப காலங்களில் இதையே அதிகம் பயன்படுத்தியுள்ளனர். மணற்கல் அதன் பாரத்தினால் பயன்படுத்த கஸ்டமானது மட்டுமல்ல விலை கூடியதுமாம். ஆகவே முக்கியமான கோயில்களுக்கு மட்டுமே இதனைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் மிக நூணுக்கமான சிற்பங்களை செதுக்க சிறந்தது இது என்கின்றனர்.  செம்மைக் கல் வித்தியாசமான ஒரு கல். பெரும்பாலும் கிழக்காசிய நாடுகளில் நிலத்தினடியிலிருக்கும் இது இரும்பும் அலுமினியமும் கலந்த களியாகும். இது பயன்படுத்துவதற்கு இலகுவானது. ஆனால் வெளியில் எடுத்தவுடன் வளியுடனும் சூரிய வெப்பத்துடனும் தாக்கமுற்று இறுகிவிடுவதுடன் நீண்ட காலங்கள் உறுதியாக நிற்க கூடியதாகும். ஆகவே அடித்தள கட்டுமானங்களுக்கே இதைப் பெரிதும் பயன்படுத்தியுள்ளனர். இறுதிக்கட்ட வேலைகளுக்குப் பயனற்றது என்கின்றனர். இக் கோயில்களில் காணப்படும் சிறப்பான அம்சம் என்னவெனில் இக் கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி அல்லது பொருத்தி புவியிர்ப்புவிசைக்கு ஏற்ப விழாது மிக உயர்ந்த கோபுரங்கள் கட்டடிமையாகும். இதற்கு ஆதாரமாக இன்றும் சில கோபுரங்கள் காணப்படுகின்றன.

img_1540மேற்குறிப்பிட்ட  கற்கள் இக் கோயில்களை கட்ட மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அரண்மனைகளையும் மக்கள் வாழ்ந்த குடிசைகளையும் மரங்களினால் மட்டுமே அன்று கட்டியுள்ளார்கள். ஆகவேதான் அவை அழிந்து போக கற்களால் கட்டிய கோயில்கள் அழியாமல் இருக்கின்றன.  இதற்கு இன்னுமொரு காரணம் அரசரைப் பாதுகாக்கும் இக் கோயில்கள் உறுதியானதாக இருப்பதையே அரசர்கள் விரும்பியுள்ளனர். இக் கோயில்கள் வெறுமனே கடவுள் வாழ்வதற்கான இடங்கள் மட்டுமே. மாறாக பொது மக்கள் வணங்கும் இடங்களோ சடங்குகள் சம்பிரதாயங்களை நிறைவேற்றும் இடங்களோ அல்ல என்கின்றார்கள். ஆகவேதான் பெரியான கோயில்களாக இருந்தபோதும் மிகச் சிறிய அறைகளை அல்லது கடவுளின் இருப்பிடங்களைக் கொண்டவையாக இருக்கின்றன. மக்கள் கூட்டமாக நின்று வணங்குவதற்கான வசதிகள் இல்லை. index

இன்று கம்போடியாவின் அடையாளம்

அங்கோர்!

இது கோயில் அல்ல.

அவர்கள் உற்பத்தி செய்யும் பியர்.

இதன் இரண்டாவது பகுதியில் இக் கோயில்களை சுற்றிப் பார்த்த நமது அனுபவத்தைப் பகிர முயற்சிக்கின்றேன்.

உசாத்துணைகள் – Ancient Angkor by Michael Freeman & Claude Jacques

Lonely Planet – 2014 Travel Guide

Angkor Tour Guide book

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s