கம்போடியா : கற்றது என்ன?

கம்போடியா : படுகொலை – கற்றது என்ன?

img_2012ஒரு நாட்டிற்கு தரைமார்க்கமாக செல்வது என்பது விமானப் பயணத்தினுடாக செல்வதைவிட அதிக அனுபவங்களைத் தரவல்லது. முதன் முதலாக 2001ம் ஆண்டு இந்தியாவின் கோரப்பூர் எல்லையினுடாக நேபாளத்திற்கு சென்றது முதல், அமெரிக்க கனேடிய எல்லை மற்றும் மேற்கைரோப்பிய நாடுகளின் எல்லைகள் பலவற்றைக் கடந்தமை பல அனுபவங்களைத் தந்தது. இந்த முறைப் பயணத்தில் ஸ்பெயினிலிருந்து மொரக்கோவிற்கும் கிரிஸிலிருந்து துருக்கிக்கும் பின்லாந்திலிருந்து இரசியாவிற்கும் தாய்லாந்திலிருந்து கம்போடியாவிற்கும் கம்போடியாவிலிருந்து வியட்நாமிக்கும் சென்றமை பல அனுபவங்களைத் தந்தன. இப் பதிவு கம்போடியாவிற்கு சென்றது தொடர்பாகவும் அந்த நாட்டில்  பெற்ற சில அனுபவங்களையும் கொண்டிருக்கும்.

img_2013ஆரம்பத்தில் கம்போடியா விசா தொடர்பான பல சந்தேகங்கள் மயக்கங்கள் இருந்தன. ஆனால் இறுதியாக நாட்டிற்குள் நூழையும் பொழுது எல்லையில் விசாவைப் பிரச்சனைகள் இல்லாமல் பெறலாம் என உறுதி செய்து கொண்டோம். இதற்கு நமது தேடல்களுக்கும் அப்பால் ஜானதாசினதும் அவரது நண்பரினதும் அறிவுரைகளும் பங்களித்தன. (நன்றி பல.) இருப்பினும் பயண முகவர்கள் இதை சிக்கலாக்கி பணம் பறிப்பார்கள் என்பதையும் அறிந்து கொண்டோம். நாம் தாய்லாந்திலிருந்து கம்போடியாவின் பியோபொட் (poi pet) நகரின் எல்லைக்குப் பலருடன் இணைந்து பயண முகவர் ஒருவரின் வாகனத்தில் பயணமானோம். வாகனம் நம்மை எல்லையில் விடாது இன்னுமொரு பயண முகவரின் அலுவலகத்தில் இறக்கிவிட்டது. நாம் ஏற்கனவே வாசித்திருந்தபடியால் இவர்களின் விளையாட்டை அறிந்திருந்தோம்.img_2016 வாகனத்தில் வந்தவர்களை ஒவ்வொருவர்களாக அழைத்து விசா எடுப்பது கஸ்டம் எங்களிடம் கடவுச்சீட்டைத் தாருங்கள் நாம் விரைவாக எடுத்துத் தருகின்றோம் என உறுதி வழங்கினார்கள். இதற்கு விசாவிற்கான பணத்தை விட அதிகமான பணத்தை தரும்படியும் கேட்டார்கள். நம்முடன் வந்த பெரும்பாலான ஐரோப்பியர்கள் அவர்களின் கதையைக் கேட்டு பணத்தைக் கட்டினார்கள். ஒருவருடன் நாம் ஏற்கனவே இதுதொடர்பாக உரையாடியபோதும் அவர் அவர்களுடன் கதைத்த பின் மாறிவிட்டார். ஆகவே நாம் நாமாகவே சென்று எல்லையில் எடுக்கின்றோம் எம்மை எல்லையில் இறக்கிவிட்டால் போதும் என்றோம்.  அவர்களுக்கு விருப்பமில்லை இருப்பினும் நாம் மற்றவர்களை குழப்பிவிடுவோம் என்பதாலும் தேவையில்லைாத பிரச்சனைகளை வளர்க்க விரும்பாததாலும் நம்மை எல்லையில் இறக்கவிட்டார்கள்.

img_2816நாம் தாய்லாந்து குடியகழ்வு அலுவலகத்தினுடாக சென்று கம்போடியாவின் குடிவரவு அலுவலகத்திற்கு நடந்து சென்றோம். இந்த இடையிலும் ஒரு இடம் உள்ளது. கம்போடிய குடிவரவு அதிகாரிகள் போல உடையணித்து ஏமாற்றும் இடம். நாம் இதில் அகப்படவில்லை. ஆனால் நம்முடன் பயணம் செய்த சிலர் அகப்பட்டு மேலதிக பணத்தை விரயம் செய்தார்கள். நாம் உரிய இடத்தில்  விசாவைப் பெற்றுக் கொண்டோம். கம்போடிய அதிகாரிகள் மிகவும் பண்புடன் உபசரித்து உதவியும் செய்தார்கள். தாய்லாந்து 100 ரூபாய்களை மட்டும் அதிகமாக (இலஞ்சம்) கேட்டு நம்மை அனுப்பிவிட்டார்கள்.  இன்னும் சிறிது தூரம் நடந்து செல்ல அனுமதி முத்திரை குத்தி நாட்டினுள்ளே விட்டார்கள்.

img_2878விசா எடுப்பதில் நாம் ஏமாறவில்லை. ஆனால் எங்கோ ஒரு இடத்தில் நாம் ஏமாறவேண்டும். நாம் நின்ற இடம் போய் போட் (poi pet). இங்கிருந்து வேறு பயணிகளுடன் இணைந்து வாடகை வாகனத்தில் பயணம் செய்வதே வசதியானதும் மலிவானதும் என அறிந்திருந்தோம். ஆகவே சில பயணிகளிடம் கேட்க அவர்கள் முன்வரவில்லை. இதற்கு மாறாக இந்த இடத்திலிருந்து உல்லாசப் பயணிகளுக்கான ஒரு இடத்திற்கு இலவசமாக வாகனம் செல்கின்றது. அங்கிருந்து பயணம் செய்யலாம் எனக் கூறி அனைவரையும் ஏற்றினார்கள். இப்படி ஒரு வாகனத்தில் ஏற வேண்டாம் மாட்டுப்படுவீர்கள் என ஏற்கனவே வாசித்திருந்தாலும் வேறு வழியில்லாம் ஏறினோம். அனைவரையும் யாருமற்ற ஆனால் உல்லாசப் பயணிகளுக்கான கட்டிடம் என எழுதப்பட்ட இடத்தில் இறக்கிவிட்டார்கள். இங்கிருந்துimg_2392 பயணிப்பதாயின் வாடகை வாகனம்தான் உள்ளது. அதுவும் அவர்கள் கூறும் விலைதான். அல்லது மாலை ஐந்து மணியளவில் ஒரு பஸ் வரலாம் என அறிந்தோம். இது சியாம் ரெப்பைச் (Siem Reap) செல்ல எப்படியும் ஒன்பது மணியாகும். அந்த நேரம் சென்று இடம் எடுப்பது கஸ்டம். ஆகவே குரோசியா நாட்டு சக பயணியகளுடன் உரையாடி அவர்களுடன் வாடகை வாகனத்தில் சியாம் ரெப்பை நோக்கி மூன்று மணித்தியாலங்கள் பயணம் செய்தோம். சியாம் ரெப் நகரத்திற்கு செல்வதற்கான முக்கிய நோக்கம் அங்கோர் வாட் கோயில்களைப் பார்ப்பதே. கம்போடியா சென்று இதனைப் பார்க்காவிட்டால் அது பெரும் குறை எனக் கூறப்படும். இது தொடர்பாக விரிவான பதிவை விரைவில் எதிர்பாருங்கள். இப்பொழுது அதைத் தவிர்த்து நான் அறிய விரும்பிய கம்போடியா தொடர்பான பதிவு இது.

img_2863கம்போடியாவில் இந்தியாவினதும் சீனாவினதும் ஆதிக்கம் இரண்டாயிரமாம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உள்ளது.  இதனால் இந்து மதம், சைவம், பௌத்தம் தாவோயிசம் மற்றும் கன்பூசியம் என்பன முக்கிய தாக்கம் செலுத்தியிருக்கின்றன. இதை அங்கோர்க்கு முந்திய காலம் என்கின்றனர். ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து 15ம் நூற்றாண்டு வரை கம்போடியாவினை ஒன்றுபடுத்தி மட்டுமல்ல அயலிலுள்ள பிரதேசங்களையும் கைப்பற்றி பல அரசர்கள் ஆண்டுள்ளனர். இது அங்கோர் காலம் எனவும் இவர்களின் எழுச்சி மிக்க காலமாகவும் குறிப்பிடப்படுகின்றது. அதேநேரம் பத்தாம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் ஆட்சி செய்த சோழர்களும் இவர்களை ஆண்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதன்பின் இரு நூற்றாண்டுகள் தாய்லாந்து மற்றும் வியட்நாம் சார்பான சிறு சிறு அரசர்கள் தமக்குள் சண்டைபிடித்தமையால் கம்போடியா சிதறுண்டு போயிருந்தது. இது இவர்களின் இருண்ட காலமாக கருதப்படுகின்றது. 1863ம் ஆண்டிலிருந்து நூறு ஆண்டுகள் பிரஞ்சின் காலனித்துவ ஆக்கிரமிப்பு ஆட்சி நடைபெற்றது. img_2839இவர்களின் வெளியேற்றத்துடன் 1953ம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்து  மீண்டும் ஒன்றுபட்ட கம்போடிய இராஜ்ஜியம் நிலைநாட்டப்பட்டது.  1970ம் ஆண்டிலிருந்து 75ம் ஆண்டுவரை கம்போடிய குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது. 1950களில் பிரஞ்சு காலனித்துவ ஆட்சிக்கும் பின்பு அமெரிக்க மேற்குல சார்ப்பு ஆட்சிக்கும் எதிராக பொல்பொட்டினால் உருவாக்கப்பட்ட கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சி “சிகப்பு கேமர்” (Khmer Rouge) என்ற பெயரில் விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்தது. கேமர் என்பது கம்போடியாவின் பிரதான ஆதிக்குடிகள். இவர்களே பெரும்பான்மையினர். இதே காலங்களில் கம்யூனிச (வட) வியநட்நாம் மீதான அமெரிக்காவின் போர் கம்போடியாவிலும் உள்ளாநட்டுப் போரை உருவாக்கியது. இக் காலங்களில் இரண்டாம் உலகப் போரில் போட்ட குண்டுகளைவிட அதிகமான குண்டுகளை (வியட்நாமில் மட்டுமல்ல) கம்போடியாவிலும் அமெரிக்கா போட்டதாக குறிப்பிடுகின்றார்கள்.

img_2952பொல்பொட்டின் இயக்கம் 1975ம் ஆண்டு மக்களின் ஆதரவுடன் அதிகாரவர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்று ஜனநாயக கம்பூச்சியாவை உருவாக்கினர். இவர்கள் வெற்றிப் பெருமிதத்துடன் தலை நகர் பொனம் பென் (Phnom Penh ) நோக்கி வருகின்றனர். மக்கள் ஆனந்தமாகவும் ஆர்வமாகவும் அவர்களை வரவேற்கின்றனர். ஆனால் அன்று இரவே நிலைமை தலைகீழாக மாறுகின்றது. ஜனநாயம் பெயரில் மட்டுமே இருந்தது.

கம்போடியாவின் தலைநகரான பொனம் பென்னில் (Phnom Penh) வாழ்ந்த அனைத்து மக்களையும் இரவோடு இரவாக கிராமங்களை நோக்கி செல்லுமாறு “சிகப்பு கேமர்” படையினர் பணிக்கின்றனர். “சிகப்பு கேமர்” போராளிகள் சதாரண மக்கள் விரோதபடையினராக மாறினர். கம்போடிய மக்கள் புதிய அதிகார வர்க்கத்தை எதிர்நோக்கி செல்கின்றனர்.

img_2967கம்போடியாவில் பொல் பொட் ஆட்சியின் போது பொனம் பென் நகரிலுள்ள தூல் சேவி (Tuol Sleng) உயர்தரப் பாடசாலையில் கைது செய்யப்பட்ட 17000 பேர்களையும் அடைத்து சித்திரவதை செய்கின்றனர். இது S-21சிறைச்சாலை என அறியப்பட்டது. இக் கைதிகள் அனைவரும்  செங்கோய் எக்(Choeung Ek)  என்ற சீன மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு  மிக மோசமான வழிகளில் படு கொலை செய்யப்பட்டனர்.  இந்த  இரு நினைவிடங்களையும் பார்க்கச் சென்றோம்.  இந்த சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களை வாசித்தது மட்டுமல்ல நேரடியாகவும் கேட்டோம். மிகவும் உணர்ச்சிகரமான இடம். இவற்றைவிட போர்காலங்களில் பயன்படுத்தப்பட்ட கன்னிவெடிகளின் அருட்காட்சியகத்திற்கும் சென்றோம்.

img_2974குழந்தைகள் ஆகக் குறைந்தது 14 வயது வரை கல்வி கற்கவும் விளையாடவும் உரிமை உடையவர்கள். இது இவர்களுக்கு வழங்கப்படும் சலுகையல்ல அடிப்படை உரிமை. ஆனால் கல்லூரிகளை முடிப்பதோ. கற்பதோ அவசியமில்லை உணவு உற்பத்தியே பிரதானமானது எனக் கூறி சிறுவர்கள் கட்டாய வேலைக்கு பொல்பொட்டின் ஆட்சியினால் நிர்பந்திக்கப்பட்டார்கள். இது மிகவும் தவறான ஒரு செயற்பாடு. ஒரு விவாதத்திற்கு இதை சரி என கொண்டாலும் இவ்வாறு வேலை வாங்கப்பட்ட சிறுவர்களின் உடல் உள நலத்திலாவது அக்கறை கொண்டிருக்க வேண்டுமல்லவா? அதுவும் இல்லை. காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை வேலை. சிலர் மேலும் அதிகமான நேரங்கள் வேலை செய்துள்ளனர். இரு வேளைகள் மட்டும் கஞ்சி. பல நேரங்களில் அதில் சோறு இருக்காது. இது என்ன கொம்யூனசம்? கொம்யூனசத்தின் பெயரால் நடந்த அரஜாகம் இது என்றால் தவறல்ல. இவர்கள் கொம்யூனிசத்தை தவறாக மட்டுமல்ல தட்டையாகவும் புரிந்து கொண்டவர்கள். இவர்களால் தான் இன்று கொம்யூசின இயக்கங்கள் சீரழிவை நோக்கி செல்லவது மட்டுமல்ல மக்கள் நம்பிக்கையையும் இழக்கின்றார்கள்.

img_2997பொல்பொட்டியின் ஆட்சிக் காலத்தில் இது மட்டும் நடைபெறவில்லை. பலர் புதிய ஆட்சி வந்துவிட்டது சமூகத்திற்கு தாம் பங்களிப்போம் என வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளார்கள். கல்விகற்றவர்கள் ஆபத்தானவர்கள் என முடிவு செய்து சித்திரவதை செய்து கொன்றுள்ளார்கள்.  இப்படி ஆயிரம் ஆயிரம் கொலைகள். இவற்றைப் பார்த்தபோது நமது போராட்ட அனுபவங்களுக்கும் நெருக்கமாக இருந்ததை உணர்ந்தேன்.

நாம் ஆதிக்க சாதி வர்க்க இன சிந்தனைகளின் எதிர்பாளர்களே ஒழிய. இந்த சிந்தனைகளை கொண்டுள்ள மக்கள் எதிரிகளல்ல. அழிக்க அல்லது மாற்றப்பட வேண்டியது இந்த சிந்தனைகளே ஒழிய இந்த மக்களை அல்ல. ஆனால் இவர்கள் என்ன செய்தார்கள். உயர் மற்றும் மத்திய வர்க்கங்களைச் சேர்ந்தவர்களையும் கற்றவர்களையும் கொன்றார்கள். எதிர்காலத்தில் இவர்களின் வாரிசுகள் தமக்கு எதிராக செயற்படக் கூடாது என்பதற்காக இவர்களின் ஒரு வயதுக்  குழந்தைகளைக்கூட மரத்தில் அடித்துக் கொன்றிருக்கின்றார்கள். என்ன கொடூரம்.

img_3003இவரின் அடாவடித்தனங்களையும் வியட்னாம் மீதான ஆக்கிரமிப்பையும் பொறுக்காத வியட்நாமிய கம்யூனிச அரசு இந்த இயக்கத்திலிருந்து பிரிந்தவர்களைக் ஒன்றினைத்து “சிகப்பு கேம்ரு” இயக்கத்தினரை அடித்து காடுகளுக்குள் விரட்டிவிட்டு கம்பூச்சிய மக்கள் குடியரசு ஆட்சியை 1979ம் ஆண்டு அமைத்தது. ஆனால் மேற்குலம் காட்டிலிருந்து ஆட்சி செய்த பொல்பொட்டின் ஆட்சியை அங்கிகரித்தது மட்டுமல்ல. பத்து வருடங்களுக்கு மேலாக ஐ.நாவில் பிரதிநித்துவம் இருப்பதற்கும் ஆதரித்துள்ளது. மறுபுறம் வியட்நாமின் ஆதரவுடன் உருவான புதிய அரசை அங்கிகரிக்கவில்லை. இதுதான் இவர்களின் ஜனநாயம். மனித உரிமை பாதுகாப்பு. இதற்கு ஒரே காரணம் (நேர்மையான) கொம்யூனிச தலைவர்களான வியட்னாமிய அரசின் செயற்பாடுகளை எதிர்ப்பதே என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

அமெரிக்க ஐரோப்பிய அரசுகளின் கம்யூனிச நாடுகளுக்கு எதிரான திட்டமிட்ட பிரச்சாரத்தையும் செயற்பாடுகளையும் நாம் அறிவோம். ஆனால் இது எந்தவகையிலும் கம்யூனிச அல்லது சோசலிச நாடுகளில் நடந்த அதன் தலைவர்கள் மேற்கொண்ட மக்கள் வீரோத செயற்பாடுகளை கண்மூடித்தனமாக நாம் ஆதரிப்பதற்கு வழிவகுக்கக் கூடாது.

நாம் (அதிகார சக்திகளின்) பக்க சார்பின்றி மக்கள் நலனிலிருந்து விடயங்களை அனுகும் பொழுதுதான் சரியான பார்வையையும் நடைமுறையையும் முன்னெடுக்கலாம். அல்லது மக்கள் வீரோத செயற்பாடுகளில் நம்மையும் அறியாமல் ஈடுபட்டு அதனை நியாயப்படுத்துமளவிற்கு சென்றுவிடுவோம். இதனால்தான் இரசியாவும் சீனாவும் தமக்கு ஆதரவான நாடுகளை உருவாக்கியது மட்டுமல்லாமல் இவர்களுக்கு இடையில் சண்டைகளையும் உருவாக்கியதுடன் பங்களித்துமுள்ளனர். இவ்வாறான வரலாறுகளை அறிவது இவர்களின் “கம்யூனிச சிந்தனைகளை” கேள்விக்கு உட்படுத்துகின்றது. முன்மாதிரியாக செயற்படவேண்டிய இந்த அரசுகளும் கட்சிகளும் தாமே ஒரு வர்க்கமாக உருவாகி முதலாளித்துவ அரசுகளை விட மோசமாக செயற்பட்டுவருகின்றன.

நான் இப்பொழுதும் கம்யூனிச சமுதாயத்தை உருவாக்குவது தொடர்பாக கனவு காண்பவன். ஆனால் அது இவ்வாறான வழிமுறைகளால் அல்ல. ஆரோக்கியமான வழிகளால் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், சுரண்டப்படும் மக்களுக்கும் சாதிய அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்களுக்கும் மற்றும் சகலருக்கும் வசதியான பல வாய்ப்புகளை நிறைந்த வாழ்வை உறுதி செய்வதாகும். ஒவ்வொருவரினதும் தெரிவுக்கு ஏற்ப வாழ்வதற்கான வசதிகள். அனைத்துக் குழந்தைகளும் கம்யூனின் அரசின் குழந்தைகள். அவர்கள் விரும்பியதை விரும்பிய நேரத்தில் கற்பதற்கான வாய்ப்புகள். மிகவும் ஆற்றலும் அனுபவமும் அறிவும் கொண்ட வழிகாட்டும் ஆசிரியர்கள். உயர்வான சமூகம் தொடர்பான கனவு காணச் செய்வதும் அவர்களது படைப்பாற்றல்களை வெளிக் கொண்டும் வரக்கூடிய முன்னோடிகள். அதிகாரத்தை கைப்பற்றுவதனுடாகவே இதனை சாத்தியப்படுத்தலாம் என்பதில் சந்தேகமோ மாற்றுக் கருத்தோ இல்லை. ஆனால் எப்படியானவர்கள் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதில் அதிகம் அவதானமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும். இன்று இவ்வாறான நம்பிக்கைகளைத் தரக்கூடிய ஒரு தலைமையயும் தலைவர்களையும் அறிய முடியவில்லை.img_3031

நாம் தொன்னுறுகளில் பார்த்த முக்கியமான ஆவணப்படம் படுகொலை வயல் ( The killing fields) இதனைப் பார்த்தபின்பும் நாம் கற்கவில்லை. மக்களின் மனங்களை எண்ணங்களை மாற்றாது கட்டாயப்படுத்தி முன்னெடுக்கப்படும் எந்த செய்பாடுகளும் நல்ல விளைவுகளைத் தராது. விடுதலையையும் பெற்றுத் தராது என்பதை அறிந்தோம். தூரதிர்ஸ்டவசமாக இறுதியாக ஈழவிடுதலைப் போராட்டத்திலும் அதைத்தான் மீளக் கற்றுக் கொண்டோம். நாம் வரலாற்றைக் கற்கவில்லை. ஆகவே வரலாறு நம்மை விடுதலை செய்யவில்லை.

1979ம் ஆண்டிலிருந்து வியட்நாம் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த கம்போடிய மக்கள் கட்சியே இன்றுவரை ஆட்சி செய்கின்றது. ஆனால்  மீண்டும் கம்போடிய இராஜ்சியம் என்ற பழைய பெயரிலையே இன்று அழைக்கப்படுகின்றது. புதிய தலைமுறை கடந்த காலத்தை மறந்து விட்டதாக கூறப்படுகின்றது. அல்லது அவர்களுக்கு அதில் அக்கறையில்லை என்கின்றார்கள். நாம் கண்ட மக்கள் எல்லா நாடுகளையும் போல ஓடி ஓடி உழைக்கின்றார்கள். இவ்வளவு கால இழப்பின் பெறுமதி என்ன?

பெரிய வித்தியாசமில்லை. வழமையான வாழ்வு.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s