போதிகாயா முதல் குசிநகர்வரை : சித்தாத்தர் நடந்த பாதைகளில்…. பகுதி இரண்டு

போதிகாயா முதல் குசிநகர்வரை :
சித்தாத்தர் நடந்த பாதைகளில்….

img_0014இம் முறை நம் இந்தியப் பயணத்தில் புத்தர் என்ற கௌதம சித்தாத்தர் நடந்த, வாழ்ந்த இடங்களைப் பார்ப்பதும் அதில் நடந்து திரிவதும் தியானிப்பதும் என முடிவெடுத்தோம். முடிவுகள் எடுப்பது இலகு. ஆனால் அதை நிறைவேற்றுவது என்பது கடினமானது. அதுவும் இந்தியாவில் மிகவும் கடினமானது. இருப்பினும் திட்டங்களைத் தீட்டி பயணத்தை ஆரம்பித்து தவறுகளை விட்டு அதிலிருந்து கற்று நமது நோக்கத்தை நிறைவேற்றினோம். காயாவில் இறங்கி போதிகாயாவில் ஆரம்பித்த நமது பயணம் வரணாசியில் சாரணாத், பட்னா, ராஜகீர், நாலந்தா, வைசாலி எனத் தொடர்ந்து குசிநகரில் முடிவுற்றது. இப் பதிவு இந்த நகரங்கள் தொடர்பான சிறு குறிப்புகளாகும்.

இலங்கையில் புத்தரின் பெயரால் சிங்கள பௌத்த பேரினவாதிக்கம் அதிகாரத்துவ ஆட்டம் போடும் நிலையில் அதனால் ஒடுக்கப்பட்ட ஒருவர் img_0012புத்தர் நடந்த பாதைகளைில் பயணிப்பது என்பது ஒரு முரண்நகைதான். ஆனால் புத்தருக்கும் (சிங்கள) பௌத்த மதத்திற்குமான வேறுபாட்டைப் புரிந்தவர்களுக்கு இது முரண்பாடானதல்ல. புத்தர் தொடர்பான புதியொரு பார்வை முன்வைக்கப்படும் பொழுதுதான் சிங்கள மக்களை சிங்களப் பேரினவாதிகளிடமிருந்து விடுவிக்கலாம் என நம்புகின்றேன். அதற்கான முயற்சியை சிங்கள பௌத்த பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழர்களில் ஒருவரே செய்ய வேண்டியது அவசியமானதாகும்.

லும்பினி

img_9971கௌதம சித்தாத்தர் இன்றைய நேபாளத்திலுள்ள லும்பினியில் பிறந்திருந்தாலும் அவரது வாழ்வின் பெரும் பகுதி இந்தியாவில் பீகாரிலுள்ள பல நகரங்களிலும் உத்தரபிரதேசதத்திலுள்ள சில நகரங்களிலுமே கழிந்துள்ளது.  ஒருவர் வாழ்வில் மிக உயர்ந்த இடத்தை அடைந்தவுடன் அவரது பிறப்பு வளர்ப்பு தொடர்பாக பல புனைவுகள் வெளிவரும். அவ்வாறுதான் சித்தாத்தரின் ஆரம்ப வாழ்வு தொடர்பான கதைகள் புனையப்பட்டனவா என்ற சந்தேகம் எனக்குள்ளது. இவர் அடிப்படையில் ஒரு தேடல் உள்ள மனிதராக இருந்திருக்க வேண்டும். அதுவே தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை பார்க்கவும் அவர்களது கஸ்டமான வாழ்வு தொடர்பான கேள்விகளையும் கேட்கத் தூண்டியிருக்க வேண்டும். ஒருபுறம் சாதி அடிப்படையிலான புறக்கணிப்பு, ஏழ்மை என்பவை இவரது அக்கறைக்குரிய விடயங்களாக இருந்திருக்கலாம். இவர்கள் கடவுள் மற்றும் மதத்தின் பெயரால் மேலும் சுரண்டப்படுவதும் ஒடுக்கப்படுவதும் ஒதுக்கப்படுவதும் இவரால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவும் இருந்திருக்கலாம். மறுபுறம் தன்னிலை சார்ந்து தனது தன்முனைப்பு, ஆசைகள், காமம் மற்றும் உணர்ச்சிகள் என்பவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதுவும் இவரது தேடலுக்குள் இருந்திருக்க வேண்டும். இவை அனைத்துமே சேர்ந்து உண்மையைத் தேடுவதற்கும் தன்னை அறிவதற்கும் இவரைத் தூண்டியிருக்க வேண்டும். இவரது இக் காலங்களை ஆய்வுக்கு உட்படுத்தி மறுவாசிப்பு செய்ய வேண்டும்.  ஏனெனில் மேற்கிற்கு அதாவது சோக்கிரட்டீசிக்கு சமாந்தரமாக கிழக்கின் தத்துவார்த்த பாதையை அமைத்தவர் இவர் என்றால் மிகையல்ல. ஆகவே அவரை பௌத்த மதத்திலிருந்து விடுவித்து கிழக்கின் தத்துவ தந்தையாக உருவாக்க வேண்டும்.

போதிகாயா

img_0002

புத்தர் தியானம் செய்த அரச மரம்

கௌதம சித்தாத்தர் தனது வீட்டை விட்டு 29 வயதில் வெளிக்கிட்டு தன் தேடலில் இறுதியாக வந்து சேர்ந்த இடம் நிரஞ்சனா என்ற ஆற்றுக்கு அருகிலிருக்கின்ற உருலா (இன்று போதிகாயா) என்ற ஊர். இவர் போதிகாயாவிற்கு போவதற்கு முதல் பாற்சோறு கொடுத்த சுஜாதா  என்ற பெண் வாழ்ந்த  கிராமம் உள்ளது. மேற்குறிப்பிட்ட ஆற்றின் மறுபக்கமுள்ள இது அவரது பெயரிலையே “சுஜாத்தா” கிராமம் அழைக்கப்படுகின்றது இன்று. இக் கிராமங்கள் அன்று நிச்சயமாக மிக அழகானவையாகவும் வயல்கள், ஆறுகள், காடுகள் என வளங்கள் நிறைந்த கிராமங்களாக இருந்திருக்க வேண்டும். (இன்று ஏழைகள் வாழும் கிராமம்.) இவ்வாறான ஒரு கிராமத்தில் தான் இறுதியாக தனது தேடலை பல வாரங்கள் மேற்கொண்டு தன்னை அறிந்து கொண்டார். யார் ஒருவர் தன்னை அறிந்து கொண்டவர் என உணர்கின்றாரோ அவரையே புத்தர் என அழைக்கின்றனர். கௌதம சித்தாத்தரும் ஒரு புத்தரானார். இன்று இந்த இடத்தில் பல நாடுகளைச் சேர்ந்த பல பௌத்த மத பிரிவுகளின் பிரித் ஓதும் சத்தங்கள் கேட்பதற்கும் அப்பால் ஒரு விதமான அமைதி நிலவுகின்றது. குறிப்பாக அரச மரம் இலங்கையிலிருந்து கொண்டுவந்து மீண்டும் நடப்பட்டதாயினும் அதன் நிழலின் கீழ் இருப்பது தியான நிலையில் இருப்பதை ஊக்குவிக்கின்றது. இரண்டு நாட்கள் சில மணி நேரம் இதன் கீழ் தியானத்தில் இருப்பதற்கு கிடைத்தமை பெரும் பாக்கியமே. மேலும் இந்தியர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து வீட்டுச் சாப்பாடும் கிடைத்தமை நாம் செய்த பாக்கியம் என்பேன். போதிகாய தொடர்பான விரிவான பதிவுக்கு இங்கு அழுத்தவும்.

சார்ணாத்

img_0191

புத்தர் முதன் முதலாக உரை நிகழ்த்திய இடம்

போதிகாயாவிலிருந்து (பீகார்) ஒரு நாள் முழுக்க உள்ளுர் பேருந்தில் பயணம் செய்து மாலை 5 மணியளவில் வரணாசியை (உத்தர பிரதேசம்) அடைந்தோம்.  (250 கீ.மீ தூரத்திற்கு இது அதிகளவு நேரமே.) ஐந்து மணித்தியாலங்களில் சென்றுவிடும் எனக் கூறியதால் மதியம் சாப்பிடவில்லை. இந்தியாவில் பகல் பொழுதில் பஸ்சில் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்குப் பயணம் செய்வது நம் பொறுமைக்கான சோதனை என்பேன். அதுவும் ஒரு மாநிலத்திலிருந்து இன்னுமொரு மாநிலத்திற்கு செல்வதோ சோதனை மேல் சோதனையாகும். வரணாசியிலிருந்து சார்ணாத்திற்கு ஆட்டோவில் பயணம் செய்தோம்.  நம்முடன் தீபெத் மாணவி ஒருவரும் பயணம் செய்தார். இவரது பூர்வீகம் தீபெத்தாக இருந்தபோதும் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். ஆயுள்வேத வைத்தியம் கற்கின்றார்.

img_0109

சீடர்கள்

புத்தர் தன்னை அறிந்தபின் உண்மையை உணர்ந்த பின் தனது முதலாவது உரை ஆற்றிய இடம் சார்ணாத் என்ற கிராமம். இங்கு போதிகாயாவில் பிரிந்து சென்ற தனது பழைய நண்பர்களை மீள சந்தித்ததுடன் தனது முதலாவது சீடரையும் பெற்றுக்கொண்டார். இந்த இடத்திலையே தம்மபதத்தின் “நான்கு உண்மைகளைப்” பற்றியும் விளக்கியுள்ளார் .  இவற்றை நினைவுகூறும் விதமாக அரசர் அசோகர் நினைவு தூபிகள் சிலவற்றை இங்கு கட்டியுள்ளார். மேலும் இந்தியாவின் தேசிய சின்னமான நான்கு சிங்கங்களின் முகங்கள் கொண்ட தூபியும் இங்குதான் கட்டப்பட்டது. அகழ்வாரச்சி பணிகள் தொடர்கின்றன.

img_0107

சீடர்கள்

சார்ணாத்திலிருந்து வரணாசிக்கு காலையில் வந்து பட்னாவிற்கான புகையிரதத்தை காலை 11 மணிக்கு எடுக்க இருந்தோம். ஆனால் அது மூன்று மணித்தியாலங்கள் பிந்தியே வந்தது. அதுவரையும் நாம் காத்திருந்ததை ஒரு பதிவாக எழுதலாம். பட்னாவிற்கு இருட்டியபின் வந்து சேர்ந்து தங்குவதற்கான ஒரு இடத்தை நடந்து திரிந்து கண்டுபிடித்தோம். இன்றும் காலையில் சாப்பிட்டபின் பகல் முழுவதும் சாப்பிடவில்லை. இரவுணவுடன் நித்திரைக்குச் சென்று காலை பட்னாவிலிருந்து ராஜ்கீரையும் நாலந்தாவையும் நோக்கி பயணமானோம்.

ராஜ்கீர்

img_0478

வேணு வான்

சார்ணாத்திலிருந்து புத்தர் சென்ற இடம் ராஜ்கீர். இது போதியாவிலிருந்து 100 கீ.மீ தூரத்திலும் பட்னாவிலிருந்து 150 கீ.மீ தூரத்திலுமுள்ளது. இங்கு இவருக்குப் பிடித்தமான தியானம் செய்வதற்கான குகைகள் உள்ளதுடன்  பல உரைகளை நிகழ்த்திய இடமாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் அந்த நாட்டு அரசர் பீம்சார் புத்தர் தங்குவதற்கு வழங்கிய “வேணு வான்” என்ற அழகிய இடமும் உள்ளது. நடுவில் குளம், சுற்றிவர மரங்கள் நிறைந்த சோலையாக இவை காட்சியளிக்கின்றன. இக் குளத்திலையே புத்தர்  குளித்ததாக கூறப்படுகின்றது. இந்த இடங்களில் எல்லாம் பல மனிதர்கள் நடந்து திரிந்தபோதும் இருந்தபோதும் ஒருவிதமான சக்தி இயங்குவதை உணரக்கூடியதாக உள்ளது. மீண்டும் செல்ல வேண்டிய ஒரு இடம்.

நாலந்தா

img_0340நாலந்தா ராஜ்கீருக்கும் பட்னாவிற்கும் இடையில் உள்ளது. நாம் சென்ற பாதைகளின் இரு மருங்கிலும் சடைத்து வளர்ந்த மரங்கள் நிழல் பரப்பியிருந்தன. புத்தருக்கும் ஜென் மதத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவரான மாவீரருக்குமான முக்கியமான இடம் நாலந்தா. இங்குதான் இவர்கள் தமது அறிவுசார் தேடல்களை நடாத்தினார்கள். பல வாதப் பிரதிவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. புத்தரின் முக்கியமான இரு சீடர்கள் பிறந்த இடம் மட்டுமல்ல அவர்கள் சிடர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டதும் மரணித்த இடமுமாகும். நாலந்தா தொடர்பாக விரிவான பதிவை வாசிக்க இங்கு அழுத்தவும்.

img_0450காலை உணவை பட்னாவில் சாப்பிட்டு விட்டு ஆரம்பித்த பயணத்தில் இரவு எட்டு மணிக்கே மீண்டும் சாப்பிட முடிந்தது. இடையில் தண்ணீரும் இரண்டு வாழைப்பழங்கள் மட்டுமே சாப்பிட்ோம்.  இரவு உணவை முடித்துக் கொண்டு சைவாலியை நோக்கி பயணித்து இரவு பத்து மணியளவில் வந்து சேர்ந்தோம். நமது அதிர்ஸ்டம் அந்த நேரத்தில் தங்குமிடத்தை பதிவு செய்ய முடிந்தது. ராஜ்கீரிலிருந்து வைசாலி வரை மாமர தோட்டங்கள் நிறைந்து காணப்பட்டன. இதனால்தான் புத்தரின் காலத்திலையே பலர் புத்தர் தங்குவதற்காகவும் உண்பதற்காகவும் மாமர தோட்டங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.

வைசாலி
img_0549வைசாலி பட்னாவிலிருந்து வட திசையில் ஐம்பது கீ.மீ தூரத்திலுள்ளது. புத்தருக்கு மிகவும் பிடித்தமான நகர்.  பல தளங்களில் முக்கியமான ஊர். மாமரத் தோட்டங்கள் அன்றும் (காணப்பட்டதாக கூறப்படுகின்றது) இன்றும் நிறைந்து காணப்படும் அழகிய இடம்.

உலகத்தின் முதலாவது குடியரசு என அறியப்பட்ட இடம்.  (ஆனால் நாம் மேற்குலம் நமக்கு சொல்லித்தந்த ஏதென்சையே இப்பொழுது கூறுகின்றோம். நமது வரலாறுகளை தவறவிட்டுவிடுகின்றோம்). img_0527அதன் கொள்கைகளினாலும் அழகிய நிலப்பரப்பினாலும் புத்தருக்குப் பிடித்த அரசும் இடமுமாகும். தன்னுடைய சங்கத்திற்கும் அதன் பல கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டார். பெண்களையும் பிக்குனிகளாக முதன் முதலாக ஏற்றுக் கொண்ட இடம். முக்கியமாக உயர் வர்க்கத்தைச் சேர்ந்த அமரபாலி என்ற பாலியல் தொழிலாளியின் அழைப்பை ஏற்று உணவு உண்ண சென்ற இடம். பின்பு இப் பெண் புத்தரின் சீடரானார். இதற்கான நினைவிடம் ஒன்றை மிக அழகாக கட்டி பராமரிக்கின்றார்கள். புத்தரின் மிக நெருங்கிய சீடர் ஆனந்தாவிற்கும் அசோகர் தூபி ஒன்றை இங்கு கட்டியுள்ளார்.

img_0540பரந்த வெளியில் அசோகர் காலத்து நினைவுச் சின்னங்கள். சுற்றிவர அகழ்வாரச்சியால் கண்டுபிடி்க்கப்பட்ட கட்டிட அடித்தளங்கள். அசோகர் கட்டிய சிங்கத்தின் சின்னம் அந்தப் பரந்த வெளியின் நடுவில் உயர்ந்து நிற்க அதன் அருகில் சிறிய மலைக் குன்று. மலைக் குன்றில் ஒரு அரச மரம். சுற்றி வர சூரியன் சுட்டடெரித்தபோதும் மர நிழலில் குளிர்மையோ குளிர்மை. இதமான காற்று வீச அங்கு நிற்பது ஒரு இனம் புரியாத உணர்வைத் தந்தது. மீண்டும் ஒரு தரம் சென்று நீண்ட நேரங்கள் இங்கு உட்காந்திருக்க வேண்டும் என உணர்ந்த இடம்.

img_0502

புத்தரின சாம்பல் புதைக்கப்பட்ட இடம்

மூன்று மாதங்களின் பின் குசிநககரில் மரணிக்கப்போவதை (மாகாபரிநிவாரணம்) புத்தர் அறிவித்த இடம். மேலும் அவருடைய சாம்பலின் எட்டில் ஒரு பகுதி இங்கு இருப்பதற்கான ஆதாரங்கள் உண்டு எனக் கூறப்படுகின்றது. அதற்கான ஒரு தூபியும் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு பல முக்கியத்துவங்களை கொண்ட இடம் வைசாலி.

குசிநகர்

img_0561

புத்தர் மரணித்த இடம்

குசிநகர் வைசாலியிலிருந்து வட மேற்கில் கொரப்பூருக்கு கிழக்காக உள்ளது. வைசாலியலிருந்து மதியமளவில் ஆரம்பித்த நம் பயணம் இரவு எட்டு மணியிளவில் குசி நகரில் நிறைவுற்றது.

புத்தர் தனது கடைசி உரையை நிகழ்ச்சிய இடமும் கடைசி சீடரை ஏற்ற இடமும் இதுவாகும். இங்குதான் அவர் மரணித்ததுடன் (மாகாபரிநிர்வாணம்) அவரது உடல் எரிக்கப்பட்டு அதன் சாம்பலும் புதைக்கப்பட்டது. இச் சாம்பல் எட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு எட்டு இடங்களில் புதைக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. இந்த சாம்பலின் மீது அன்று அங்கு வாழ்ந்த “மல்லாஸ்” என்ற பழங்குடி மக்கள் தூபி ஒன்றைக் கட்டியுள்ளனர். இருநூறு வருடங்களின் பின்பு அசோகர் அந்த தூபியை மீள வடிவமைத்துப் புனரமைப்பு செய்துள்ளார். இதைவிட புத்தரின் உடல் எரிக்கப்பட்ட இடத்திலும் ஒரு தூபி உள்ளது. இது மேற்குறிப்பிட்ட பிரதான தூபியிலிருந்து ஒன்டரைப் கீ.மீ தூரத்திலுள்ளது. அதன் பெயர் ராமபகர் ஸ்துபா.

img_0615

புத்தரின் உடல் எரிக்கப்பட்ட இடம்

இப்படிப் பல முக்கிய நிகழ்வுகள் நடந்த இடம் குசிநகர். மிகவும் நன்றாகப் பராமரிக்கின்றார்கள். இந்த இடத்தில் இருந்து தியானம் செய்வது என்பது மிகவும் அதிர்ஸ்டமானது. ஒருவிதமான சக்தி இன்றும் இங்கு இருப்பதை உணரக்கூடியதாக இருந்தது. நாம் அதிகாலையில் எழும்பி குளித்துவிட்டு சாப்பிடாமலே இந்த இடத்திற்குச் சென்றோம். பல நாட்டு யாத்திரிகர்கள் அந்த அதிகாலையிலையே அங்கு வந்து ஒவ்வொரு மூலைகளில் குந்தியிருந்து தமது மொழிகளில் சத்தமாக ஓத ஆரம்பித்தார்கள். நாம் இந்த சத்தங்களின் மத்தியிலும் அந்த இடத்தில் கண்களை முடி அமைதியாக தியானத்தில் இருந்தோம். நீண்ட நேரம் இவ்வாறு தியான நிலையில் இருக்க விரும்பிய போதும் நமது பயண ஏற்பாடுகள் இடம் தரவில்லை. இது மனதிற்கு கவலையாக இருந்தது.

img_0538குறிப்பாக போதிகாயா, வைசாலி மற்றும் குசிநகரில் பல நாட்டு மக்களும் வந்து தமது மொழிகளில் சத்தமாக வழிபடுவதை நிறுத்த வேண்டும். இவ்வாறான வழிபாட்டு முறைகளை அவர்கள் இந்த இடங்களிலுள்ள தமது கோவில்களில் செய்வதே பொருத்தமானதாகும். மேற்குறிப்பிட்ட இடங்களில் ஆகக் குறைந்தது புத்தர் கடைசியாக கூறிய விபாசனா தியான முறையான “நமது மூச்சை நாமே கவனிப்பதை” மட்டும் அனைவரும் பின்பற்றுவது கௌதம சித்தாத்த புத்தருக்கு செய்கின்ற மரியாதை மட்டுமல்ல அதை செய்கின்றவர்களுக்கும் நன்மையளிப்பதாகும். மேலும் இது இந்த இடங்களின் அமைதியைப் பேணிப்பாதுகாக்கும். அல்லது பேரிரைச்சல் கொண்ட இடங்களாகவே இவை இருக்கும்.

img_0569மேற்குறிப்பிட்ட போதிகாய முதல் குசிநகர் வரையான நினைவிடங்களில் எல்லாம் புத்தரின் காலத்தின் பின் இருநூறு வருடங்கள் கழித்து அரசாண்ட அசோகர் புத்தரின் நினைவாக கட்டிய நினைவுச் சின்னங்கள் தூபிகள் காணப்படுகின்றன. இவை கூட பல முறை அழிக்கப்பட்டும் கைவிடப்பட்டும் காணாமல் போய் மீண்டும் அகழ்வாராச்சிகள் மூலம் மீள கண்டு பிடிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இந்த இடங்களில் எல்லாம் அருட்பொருற் காட்சியகங்களும் உள்ளது. இங்கு பௌத்த மதத்துடன் தொடர்புடைய கி.மு 2ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 12ம் நூற்றாண்டுவரையான சிலைகள், உபகரணங்கள், மட்பாண்டங்கள் மற்றும் கட்டிடங்களின் சுவர்கள் என்பவற்றைப் பேணிப் பாதுகாக்கின்றார்கள்.

img_1072புத்தர் நடந்த பாதைகளில் பயணித்த இக் காலங்களில் ராகுல் சங்கிருத்தியானும் ஹேமன் ஹேசிசும் எழுதிய  புத்தரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை வாங்கி வாசித்தேன். இவை புத்தர் தொடர்பான ஒரு புதிய பார்வையைத் தந்தன. ஹேமனின் வரலாறு Lat temptation of Jesus திரைப்படம் போல மேற்குலகின் பார்வையில் இருந்தது. சங்கிருத்தியானின் பார்வை மேற்கும் கிழக்கும் கலந்த சமூக ஆன்மீக கண்ணோட்டமாக இருந்தது. இந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று பார்த்ததும் இந்த நூல்களை வாசித்ததும் புத்தரின் வாழ்க்கை வராற்றை மீள எனது பார்வையில் எழுதத் தோன்றியது. புத்தர் கடவுள் அல்ல. இவர் ஆசியாவின் சோக்கிரட்டிஸ். மீள் வாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியவர். நமது (கிழக்கின்) வரலாற்றின் முதல் தத்துவஞானி. காலனித்துவ சிந்தனையிலிருந்து நாம் விடுபட வேண்டுமாயின் அதன் முதல் நிபந்தனை புத்தரின் சிந்தனையின்  அடிப்படையில் செயற்பட ஆரம்பிப்பதாகும் என்றால் தவறல்ல. ஆகக் குறைந்தது நமது (கிழக்கின்) தத்துவார்த்த வரலாற்றை அறிவதாகும். இதன் அர்த்தம் மேற்கைப் புறக்கணிப்பதல்ல. மாறாக இரண்டையும் எவ்வாறு மனித நலனுக்கும் மேற்பாட்டிற்கும் பயன்படுத்துவது என்பதை அறிவதாகும். இது எந்த வகையிலும் கௌதம சித்தாத்தரின் சிந்தனைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூறுவதல்ல. ஏனெனில் அவரின் சிந்தனைகளில் பல கேள்விகள் உள்ளன. அவர் ஒரு புரட்சியாளரா? அல்லது நடுநிலையாளரா என்ற கேள்வியுமுள்ளது. இது தொடர்பாக விரிவான ஆய்வு ஒன்றை செய்வதனுடாகவே அறியலாம். ஆனால் நமது சிந்தனைகளின் தத்துவங்களின் வரலாற்றில் புறக்கணிக்க முடியாதவர்.

img_9960

அநாகரிக தர்மபாலாவின் சிலை

நாம் சென்ற மேற்குறிப்பிட்ட அனைத்து இடங்களுக்கும் (சிறிலங்கா அரசின் உதவியுடன்?) சிங்கள பௌத்த மக்களின் வருகை அதிகளவில் காணப்படுகின்றன. பெரும்பாலும் இவர்கள் மத்திய அல்லது கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவே காணப்படுகின்றார்கள். மேலும் ஒவ்வொரு இடத்திலும் பல பௌத்த நாடுகளின் கோயில்களும் மடங்களும் இருந்தபோதும் சிறிலங்கா பௌத்த பிக்குகளின் ஆதிக்கம் வெளிப்படையாக தெரிகின்றது. இங்கு வாழ்கின்ற இந்தியர்களுக்கு சிங்கள மொழியை மிக நன்றாக கற்பிக்கின்றார்கள். அவர்கள் எங்களுடன் சிங்களத்தில் கதைக்கும் பொழுது கேட்பதற்கு ஆசையாக இருந்தாலும் அதன் பின்னால் உள்ள நோக்கம் எரிச்சலையே ஏற்படுத்துகின்றது.

img_0592கௌதம சித்தாத்தர் நடந்த பாதைகளில் நாம் போகாத சில இடங்களும் உள்ளன. அவை இன்று அதிகளவு முக்கியத்துவத்தைப் பெறவில்லை. முதலாவது இடம் லும்பினி. இங்கு கடந்த முறை நேபாளம் போகும் பொழுது போவதற்கு முயற்சித்தோம். அப்பொழுது நண்பர் ஒருவர் கூறினார் அந்த இடத்தில் ஒன்றுமில்லையென. ஆகவே அப்பொழுது செல்லவில்லை. இம் முறை எம்மிடம் இந்தியாவிற்குள் நூழைவதற்கு ஒரு வழி விசா மட்டுமே இருந்தமையால் சாத்தியப்படவில்லை. இரண்டாவது இடம் கிழக்கு சம்பரன். தனது வீட்டிலிருந்து வெளிக்கிட்ட புத்தர் இங்குதான் முதன் முதலாக தங்கி தனது முதல் குருவிடம் கற்றார். இந்த இடத்திலுள்ள ஆறு முன்பு அனோமா ஆறு என்று அழைக்கப்பட்டது. இன்று ஹாபோரா ஆறு என அழைக்கப்படுகின்றது. மூன்றாவது இடம் மேற்கு சம்பரன். இதுவே சித்தாத்தரின் தந்தை வாழ்ந்த அரண்மனை இருந்த இடம். சித்தாத்தர் தனது அரச பதிவியைத் துறந்து தலைக்கு மொட்டை போட்ட இடமாகும். நான்காவது இடம் காயா. சித்தாத்தர் தன்னை அறிவதற்கு முதல் அலைந்து திரிந்து தியானம் செய்த இடங்களில் ஒன்று. இங்கு இவர் தியானம் செய்தாக கூறப்படுகின்ற குகைகள் காணப்படுகின்றன. சராவாஸ்தி என்ற ஊரில் புத்தர் 24 மழைக்காலங்களில் தொடர்ச்சியாக தனது தியான வகுப்புகளையும் உரைகளையும் நடாத்தியுள்ளார். மேலும்  வைசாலிக்கும் குசிநகருக்கும் இடையில் இருக்கின்ற ஒரு ஊர் பாவாநகர். குசிநகருக்கான பயணத்தின்போது இந்த ஊரிலுள்ள தனது சீடர் ஒருவரின் அழைப்பை ஏற்று உணவு உண்ணச் சென்றுள்ளார். இவர் சாப்பிட்ட இந்த உணவும் இவரது இறப்புக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

img_0055புத்தர் நடந்த பாதைகளின் இடங்கள் உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இருக்கின்றன. பெரும்பான்மையானவை பீகார் மாநிலத்திலையே உள்ளன. இப் பாதைகளில் பயணிப்பதற்கு இரண்டு இடங்களிலிருந்து ஆரம்பிக்கலாம். இந்தியாவிலிருந்து ஆரம்பித்தால் வரணாசி அல்லது கோரப்பூரிலிருந்து ஆரம்பிக்கலாம். இதற்கு நேபாளத்திற்கு போய் வர இரு வழி இந்திய வீசா தேவை. அல்லது இந்தப் பயணத்தை நேபாளித்திலுள்ள லும்பினியிலிருந்து ஆரம்பித்தால் கோரப்பூர் வந்து குசிநகர், வைசாலி, நாலந்தா, ராஜ்கீர், போதிகாயா, காயா சென்று கடைசியாக வரணாசிக்கு அருகிலுள்ள சார்ணாத்தில் முடிக்கலாம். indexஅல்லது வரணாசியில் சார்ணாத்தில் ஆரம்பித்து காயா. போதிகாயா என மற்றப் பக்கத்தால் ஆரம்பித்து லும்பினியில் முடிப்பதும் வசதியானது. முடிந்தவரை புகையிரதத்தை முன்கூட்டியே பதிவு செய்தால் பயணம் இலகுவாக அமையும். பஸ்சில் பயணம் செய்யும் பொழுது உத்தர பிரதேச மற்றும் பீகார் மாநிலங்களை கடப்பதற்கு மீக நீண்ட நேரம் எடுக்கும். வாகனங்கள் மாநில சுங்கப் பரிசோதனைக்காக அசைய முடியாதவாறு நெருக்கமாக பல மைகல்களுக்கு நீண்டு இருக்கும். இது தொடர்பான பயண ஆலோசனைகள் தேவையாயின் தொடர்பு கொள்ளவும். அல்லது மேற்குறிப்பிட்ட இடங்களிலும் இந்திய புகையிரத நிலையங்களிலும் சிறப்பாக செயற்படுகின்ற உல்லாசப் பயணத்துறை அலுவலகங்கள் உள்ளன. இதில் பணியாற்றுகின்றவர்கள் பல்வேறு தகவல்கள் தொடர்பான வழங்கி நல்ல பங்களிப்புகளை செய்கின்றனர். அதிசயம். ஆனால் உண்மை.

img_0583புத்தரின் வாழ்க்கை வரலாற்றை இந்த பயண அனுபவங்களின் அடிப்படையிலும் மற்றும் பல ஆய்வுகள் செய்து எழுதலாம் என்றிருக்கின்றேன். மேலும் நமது ஒரு வருடப் பயண அனுபவத்தையும் விரிவாக எழுதவும் உள்ளேன். இம் முறை இவற்றை நானே வெளியீடுவதற்கு பொருளாதார வசதிகள் இ்ல்லை. இப் பதிவுகள் முக்கியமாவை வெளியிடுவது அவசியமானவை எனக் கருதும் பதிப்பகங்கள் தொடர்பு கொள்ளுங்கள். முதல் முன்னுரிமை இலங்கையிலுள்ள பதிப்பகங்களுக்கே வழங்கப்படும். தமிழகப் பதிப்பகங்களும் தொடர்பு கொள்ளலாம். ஆனால் இவர்களுக்கு ஒரு நிபந்தனை உண்டு. தமிழகத்திலும் இலங்கையிலும் ஒரே நேரத்தில் இரண்டு பதிப்புகளை வெளியிட உடன்பட வேண்டும். ஏனெனில் இலங்கையில் பிறந்தவனாக இலங்கையின் தமிழ் பதிப்புத்துறையை வளர்ப்பதற்குப் பங்களிப்பது எனது பொறுப்பாகும்.

இப் பயணத்தை சாத்தியமாக்கி பங்களித்த shirleyக்கு நன்றி கூறுவது எனது பொறுப்பாகும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s