ஆறு மாதங்கள்: விதி – பயணம் செய்வது…

ஆறு மாதங்கள்: விதி – பயணம் செய்வது…

%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bfதேவகாந்தன் அவர்களின் “விதி” நாவலை இந்தப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முதல் வாசித்திருந்தேன். அது ஏற்படுத்திய பாதிப்பை உடனையே பதிவு செய்ய வேண்டும் என விரும்பினேன். கைகூடவில்லை. ஆனால் அது ஏற்படுத்திய உணர்வுகளும் கேள்விகளும் என்னுடன் பயணம் செய்து கொண்டிருக்கின்றன. இதை எனது நினைவுகளிலிருந்து பதிவு செய்கின்றேன். தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கின்றேன். பின்வருவதே விதியின் கதை.

இரு பிரதான பாத்திரங்கள். மலையகத்தைச் சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள். சிங்கள இனவாதத் தாக்குதல்களால் இடம்பெயர்ந்து வன்னியில் வாழ்கின்றார்கள். ஆண் தொழிற்சங்க செயற்பாட்டாளர். ஆனால் குடும்பத்தைப் பார்க்க ஒழுங்கான வேலை இல்லை. இவரது வாழ்வு வேலை தேடி அலைவது, மனைவிக்குப் பிறந்த குழந்தை மீதான சந்தேகம், குற்றவுணர்வு போன்றவற்றால் சிதைவுறுகின்றது. துணைவியார் விரும்பாதபோதும் இந்தியாவிற்கு அகதியாக செல்வதுடன் குடிக்கும் அடிமையாகின்றார். துணைவியினது வாழ்வோ நாளாந்தா வாழ்வை கொண்டு செல்வதிலும் துணைவரின் பொறுப்பற்றதனங்களாலும் அலைக்கழைக்கப்படுகின்றது. இறுதியாக துணைவரின் அழைப்பை ஏற்று விருப்பமில்லாமல் ஆனால் அவருடன் வாழ்கின்ற விருப்பத்துடன் தமிழகம் செல்கின்றார். அங்கு அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் இதன் விளைவுகளால் துணைவரின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களுடனும் நாவல் நிறைவு பெறுகின்றது. இந்த நாவல் ஆணின் பார்வையில் எழுதப்பட்டிருந்தாலும் ஒரு ஆணின் கனவும் இலட்சியமும் அதற்கான செயற்பாடுகளும் ஒரு பெண்ணின் வாழ்வை மட்டுமல்ல அவர்களது கனவுகளையும் எவ்வாறு அழிக்கின்றது என்பதைக் கூறாமல் கூறுகின்றது.

விதி கதையைக் கொண்டு செல்வதில் பல பாத்திரங்கள் வந்து போனாலும் இந்த இரண்டு பாத்திரங்களை மட்டுமே மையப் பாத்திரங்களாக கொண்டு மிக அழகாக கதையை நகர்த்திச் செல்கின்றார் தேவகாந்தன். மனித உணர்வுகளை அதன் ஆழத்திற்குச் சென்று வெளிப்படுத்துவதில் வல்லவர் இவர். இவரது படைப்புகளில் மனிதர்கள் கறுப்பு வெள்ளை என இரு குணங்கள் மட்டுமே கொண்ட எதிர் எதிர் மனிதர்கள் அல்ல. அதுவே இவரது படைப்பின் பலமும் மற்றும் படைப்பில் வாழும் மனிதர்கள் வாசகர்களை நெருங்குவதற்கும் காரணமாக இருக்கலாம். இப் படைப்பில் வாழ்கின்ற மனிதர்களின் வாழ்க்கைக்கு காரணம் தமிழர்கள் சதாரணமாக நம்புகின்ற, ஏற்கனவே யாரே “எழுதிய “தலை” விதி” அல்ல சமூக விதிகளே காரணம் என நிறுவியிருப்பார். இம் முடிவில் ஒரு வகையான பிரச்சாரத்தனம் இருந்தாலும் எனக்குள் பல கேள்விகளை உருவாக்கியதுடன் நமது கடந்த கால வாழ்வையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அது தொடர்பாக உரையாடுவதற்கு முதல் தேவகாந்தன் தொடர்பாக சில வரிகள்.

%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8dதேவகாந்தன் அவர்களை கனடா வந்த பின் அறிந்திருந்தபோதும் அவரது படைப்புகளை வாசித்திருக்கவில்லை. முதலி்ல் வாசித்தது தேவகாந்தனின் கனவுச் சிறை (இங்கு அழுத்தினால் அது தொடர்பான எனது பதிவை வாசிக்கலாம்). இதை வாசித்துவிட்டு பிரமித்துப் போனேன். இரஞ்சகுமாரின் ஈழத்து மண்வாசனை மிகுந்த கதைகளை வாசித்தபின் அதேபோன்ற மண்வாசனை உணர்வை ஏற்படுத்திய நாவல் இது. (இது தொடர்பாக எழுதிய  இரண்டாவது பதிவு. விதி நாவலை அருண்ொழிவர்மன் இரவல் தந்திருந்தார். நன்றி)  இப்பொழுது தேவகாந்தனின் புதிய நூல்களும் வந்துவிட்டன. இப் பயணத்தின் முடிவில் அவரது நூல்களை(யும்) வாசிக்க ஆரம்பிப்பதே எனது புதிய பயணமாகும். இப்பொழுது விதி என்ற படைப்பு என்னில் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாக பார்ப்போம்.

kanavuchchiraiஅரசியல் செயற்பாட்டில் ஈடுபடுவது என்பது “தலை விதி” அல்ல சமூக விதிகளின் நிர்ப்பந்தம். தேர்வு நமதானபோதும் அதற்கான காரணம் சமூக விதிகளே. அதேநேரம் நமது தேர்வுகள் மற்றவர்களின் வாழ்வை மேம்படுத்த பங்களிக்கலாமே தவிர அழிக்க அலைக்கழிக்கப் பயன்படுத்தக் கூடாது. ஆனால் தூரதிர்ஸ்டவசமாக இவ்வாறான சமூக விதிகளை மாற்றுவதற்கான அரசியலை தேர்த்தெடுத்தவர்களினது குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. குடும்பத்தில் ஒரு அங்கத்தவர் தேர்ந்தெடுத்தாராயின் மற்றவர்கள் விரும்பியோ விரும்பாமலோ அதில் பங்கெடுக்கின்றார்கள். அல்லது அதனால் பாதிக்கப்படுகின்றார்கள்.  இறுதியாக அவர் வாழும் சமூகமே பாதிக்கப்படுகின்றது. ஆகவேதான் இவ்வாறான பொதுவாழ்வை தேர்ந்தெடுப்பவர்களுக்கு அதிக பொறுப்புணர்வு, நிதானம், பன்முகப் பார்வைகள் எனப் பல ஆற்றல்கள் தேவைப்படுகின்றன. இவை இல்லாதபோது குறிப்பிட்டவரது குடும்பம் மட்டுமல்ல எந்த சமூகத்தின் விதிகளை மாற்ற முற்பட்டாரோ அந்த சமூகமே அழிவை நோக்கி செல்வது தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது.

விதி நாவலை வாசித்திக் கொண்டு போனபோது பல வேறுபாடுகள் இருந்தபோதும் அந்த இரு பாத்திரங்களாக எனது அப்பாவும் அம்மாவும் தான் என் மனக் கண்முன் நடமாடினார்கள். எனது குடும்ப வரலாற்றை ஏற்கனவே அறிந்தவர்கள் வாசித்தவர்கள் பின்வரும் இணைப்புகளையும் பந்தியையும் கடந்து செல்லலாம்.

அப்பா அம்மாவின் வாழ்வை இங்கு அழுத்துவதன் மூலம் வாசிக்கலாம். புரட்சிவாதியாக ஆரம்பித்த அவர் வாழ்வு தொழிற்சங்க வாதியாக தொடர்ந்து இறுதியில் (பிழைப்புவாத) அரசியல்வாதியாக முடிவுற்றது. ஆனால் தொடர்புகள் வாய்ப்புகள் இருந்தபோதும் இந்தியாவிற்கு அகதியாகவோ மேற்குலகிற்குப் புலம்பெயரவோ ஒருபோதும் முயற்சித்ததில்லை. மேலும் “விதி” யைப் போல் தனது மனைவியை அநாதரவாக சாக விடாமல் தான் மரணித்து (கொலை செய்யப்பட்டு) தனது மனைவி பிள்ளைகளை பாதுகாப்பான வசதியான வாழ்வுக்கு வழிசெய்தார். அதனால்தான் எமது புலம் பெயர்வுக்கு நாம் கொடுத்த விலை அவரது மரணம் என்பேன். இல்லையேல் நமக்கும் புலம் பெயர்தலுக்கும் எட்டாப் பொருத்தமாக இருந்திருக்கும். அதியசங்கள் நடைபெற்றாலே ஒழிய…. (அப்பாவின் மரணம் ொடர்பாக எழுதிய பதிவு இது)

அம்மா அப்பாவுடனான இருபத்தைந்து வருட வாழ்வில் இலங்கையில் மட்டும் ஆறு நகரங்களில்   35 இடங்களில் வசித்தார்.  இறுதிவரை இலங்கையில் சொந்த வீடு ஒன்றில் வாழ விரும்பியது அவரது கனவாகவே இருக்கின்றது. தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தவிர்க்கமுடியாமல் அப்பாவின் அரசியல் செயற்பாடுகளுக்கு பங்காளியானார். (இது ொடர்பான இரண்டு பதிவுகளை வாசிக்க இங்கே அழுத்தவும்) இவ்வாறான வாழ்வுக்கு விதி நாவல் சொல்வதுபோல கடவுள் விதித்த விதியல்ல காரணம் சமூக விதிகளே காரணம். இதிலிருந்து நாம் மீள்வதற்கு பொறுப்புணர்வுடன் நாம் ஒவ்வொருவரும் நடந்து வந்த பாதைகளை மீளப் பார்ப்பதுடன் நம்மையும் நமது வாழ்வையும் அகம் நோக்கிப் பார்க்க வேண்டும் என்பதே இந்த நாவல் எனக்கு உணர்த்தியது எனலாம்.

அப்பாவின் காலம் முடிந்து எனது காலம் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் அரசியிலில் ஈடுபட்டது சமூக நிர்ப்பந்தம். சூழலே காரணம். பிற்காலங்களில் புரிந்துணர்வினடிப்படையில் இருக்கின்ற அரசியல் கட்சிகளில் இயக்கங்களில் நம்பிக்கையிழந்த நான் புதிய கட்சி ஒன்றே விடிவுக்கு வழி என்று எண்ணியிருந்தேன். படிப்பு முடிந்தவுடன் அதுவே கனவாக இருந்தது. ஆனால் தூரதிர்ஸ்டவசமாக அப்பொழுதுதான் அப்பாவின் கொலை நடந்து நமது எதிர்கால வாழ்வை கேள்விக்குறியாக்கியது. சொந்த வீடின்றி வருமானமின்றி இலங்கையில் எங்கும் வாழ முடியாத நிலையில் அப்பாவின் மரணம் நம்மை புலம் பெயர வைத்தது. அந்த நேரத்தில் நானும் காதலித்தேன். எளிமையான பதிவுத் திருமணம். துணைவியாருக்கு திருமணம் தொடர்பான கனவுகள் இருந்திருக்கலாம். எனக்கும் இருந்தது. ஆனால் அவை நமது வருமானத்திற்கும் அன்றைய சூழலுக்கும் சாத்தியமாகவில்லை. அதேநேரம் புலம் பெயர்ந்தபின் அரசியல் கட்சி ஒன்றில் மனம் ஒன்றித்துப் பணியாற்றினேன். அப்பா அம்மாவின் வாழ்க்கைகள் தந்த படிப்பினையால்  துணைவியாரின் தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்தில் அக்கறையாக இருந்தேன். அவர் கல்வி கற்று தனது வாழ்வை பார்த்துக் கொள்ளுமளவிற்கு ஒரு தொழில் செய்ய வேண்டுமென விரும்பினேன். அவரும் என்னை நம்பிப் பலனில்லை என்பதை என்னுடன் வாழ ஆரம்பித்த சிறிது காலத்திலையே உணர்ந்து கொண்டார். இரண்டு வேலைகள் செய்து பின் வேலையும் கல்வியும் என இரண்டு தளங்களில் செயற்பட்டு தனக்கான துறையில் கால் பதித்தார். ஆனால் நமது பெற்றோர் விட்ட ஒரு தவறை நாம் செய்யவில்லை. நாம் இன்னுமொரு பொறுப்பையும் எடுக்கவில்லை. அல்லது அடுத்த தவறையும் விடவில்லை. ஆம். குழந்தைகள் பெறவில்லை. (அல்லது வாய்க்கவில்லை).

கட்சியின் மீது தனி நபர்கள் மீதும் என் மீதும் நம்பிக்கையிழந்தபின் “என்னைத் தேடி” “நான் யார்” என்பதை அறிவதற்கும் “தவறு எங்கே” என்பதையும் எனக்குள்ளும் சமூகத்திற்குள்ளும் தேட ஆரம்பித்தேன். இதற்காக 2000ம் ஆண்டிலிருந்து எனது கனவை நனவாக்க மீண்டும் புதிய பாதையில் பயணிக்கின்றேன். சில நேரங்களில் கூட்டாகப் பயணம் செய்வோம். ஆனால் பல நேரங்களில் எனது பயிற்சிகளுக்காக நான் தனியாகப் பயணம் செய்தேன். அப்பொழுதெல்லாம் துணைவர் எல்லாப் பொறுப்புகளையும் தானே எடுத்துக் கொண்டு தன் வாழ்வைப் பார்த்தார். அம்மா கஸ்டப்பட்டதைப் போல துணைவியார் கஸ்டப்படவில்லை. இதுவே நான் விரும்பியது. இதனை சாத்தியமாக்கியது அவரது முயற்சியும் கடும் உழைப்பும் மட்டுமே. அந்த வகையில் வாழ்வில் ஒரு திருப்தி.

ஆனால் காலம் எல்லோரையும் எப்பொழுதும் ஒரே மாதிரி வாழ விடுவதில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஒரே துறையில் வேலை செய்தவருக்கு அந்த வேலையை தொடர்ந்தும் செய்யப்பிடிக்கவில்லை. என்னுடனான இருபத்தைந்து வருட வாழ்வும் இனிமையானதல்ல. ஆகவே புதிய துறையையும் வாழ்வையும் கண்டுபிடிக்க பயணிப்பதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார். இதுவரை தான் சேர்த்த பணத்தை இதற்காக ஒதுக்கினார். வேலையை விட முடிவெடுத்தார். இம் முறை எனது பங்களிப்பு. இவரது பயணத்திற்கு பங்களிப்பு செய்வது. அதுவும் அவரது பணத்தில் நான் துணையாக செல்வது மட்டுமே செய்ய வேண்டியது. இவ்வாறு கூறுவதால் நான் ஆணாதிக்கமற்ற ஒருவன் என வாசிப்பர்கள் உணரலாம். ஆனால் அது உண்மையல்ல. என்னதான் பெண்ணிலைவாதியாக இருந்தாலும் ஆணாதிக்க எண்ணங்கள் எங்கிருந்த எப்படி வரும் என்பதை நாம் அறியோம். விழிப்புணர்வுடன் இல்லாதவரை அதற்கு நாம் பலியாக வேண்டியதுதான். இதன் விளைவுகள் பல.

பயணத்தின் ஆரம்பதில் சண்டை பிடிப்பதில்லை என முடிவெடுத்திருந்தேன். ஆனால் மன்னிக்க வேண்டும். அதை சாத்தியப்படுத்த முடியவில்லை. (சுயவிமர்சனம் இங்கு அழுத்தவும்) 25 வருட காலம் ஒன்றாக வாழ்கின்றோம். ஆனால் 24 மணி நேரமும் ஒரு வருடத்திற்கு ஒன்றாக தொடர்ச்சியாக வாழ்வது என்பது மிகவும் சவாலான ஒன்று. நமது தன்முனைப்புகள், வர்க்க சிந்தனைகள், அரசியல் நிலைப்பாடுகள், தாழ்வுச் சிக்கல்கள், உயர்வுச் சிக்கல்கள், மற்றும் பயண ஒழுங்குகள், முடிவுகள் என்பவற்றால் ஏற்படும் முரண்பாடுகள் சண்டைகள். இவை சிலவேளைகளில் நமது பயணத்தின் முடிவில் நம் உறவைப் பிரித்துவிடலாம். அல்லது இன்னும் ஆழமானதாக்கி உறுதியாக்கலாம். இதைத் தெரிந்து கொள்ள மேலும் ஆறு மாதங்கள் அனைவரும் காத்திருக்க வேண்டும்.

சில நேரங்களில் யோசிப்பேன் எம்மைப் போன்றவர்கள் காதலிப்பதும் கலியாணம் செய்வதும் தவறோ என. காமம் தவிக்க முடியாதது. காதல் எப்பொழுது எப்படி எத்தனை தரம் வரும் எனத் தெரியாது. ஆனால் கலியாணம் திருமணம் மற்றும் குழந்தைகள் தவிர்க்கலாம். என்னையோ அல்லது  எனது அப்பா போன்றவர்களைத்  திருமணம் செய்யாதிருந்தால் இப் பெண்கள் வேறு யாருடனும் நன்றாக வசதியாக நிம்மதியாக சிலநேரம் வாழ்ந்திருக்கலாம் என் யோசிப்பேன். அதேநேரம் விமர்சையாக ஆடம்பரமாக திருமணம் செய்யாமல் விடுவது, குழந்தை பெறாமல் விடுவது, வேலையை விட முடிவெடுப்பது அல்லது தற்காலிக வேலைகளை செய்வது எல்லாம் ஒரு தேர்வு. வாழ்வு முறை. எல்லோராலும் இதை செய்ய முடியாது. இதற்குப் பல காரணங்கள் கூறுவார்கள். ஆனால் தேடல் முக்கியமானது அவசியமானதும் என உணர்ந்து கொண்டால் இவை எல்லாம் தடைகளே அல்ல.

பல நண்பர்களுக்கு எமது வாழக்கை ஏற்கனவே தெரிந்த விடயம். ஆனால் மீள இங்கு ஏன் பதிவு செய்கின்றேன் என்றால்  தேவகாந்தனின் விதி நாவல் நம்மை மீள பார்க்க சொல்கின்றது. சுயவிமர்சனம் செய்யத் துண்டுகின்றது. நாம் எவ்வாறான தவறுகளை விடுகின்றோம் என உணர்த்துகின்றது. இத் தவறுகளை எல்லாம் அப்பா செய்திருக்கின்றார். அப்பாவின் வாழ்விலிருந்து நான் கற்றுக் ொண்டாலும் மீண்டும் அதே தவறுகளை நான் செய்கின்றேன். இவற்றிலிருந்து விடுபடுவது எவ்வாறு? நமது ஆணாதிக்க சிந்தனைகள் தன்முனைப்புகள் நாமறியாமலே நம்மை ஆட்கொள்கின்றன. நம்முடன் வாழ்பவரை பாதிக்கின்றன. எமது கனவுகளுகளை நனவாக்க நமது வாழ்வை அர்ப்பணிக்கலாம். ஆனால் இக் கனவுகளுடன் எந்த சம்பந்தமுமில்லாத அதைப் பற்றிய ஆர்வமற்ற இன்னுமொரு மனிதரை நம்மைக் காதலித்தார் கலியாணம் செய்தார் என்ற ஒரு காரணத்திற்காக பலியிடலாமா? அவர்களது கனவுகள் இலட்சியங்கள் என்னாவது? இந்த நாவல் இதையும் கேள்வி கேட்க ஊந்துகின்றது. ஆகவேதான் எனது கனவை ஒரு வருடம் தள்ளிவைத்துவிட்டு பயணிக்கின்றேன்.

பயணம் என்பது மனிதர்களின் ஆரம்ப காலங்களிலிருந்தே ஆரம்பிக்கின்றது. உணவிற்காக அலைய ஆரம்பித்த மனிதர்கள் இன்று பல காரணங்களுக்காக அலைகின்றார்கள். பயணிக்கின்றார்கள். ஏழைகளுக்குப் பயணம் என்பது தவிர்க்க முடியாததாகின்றது. ஒவ்வொரு காலத்திலும் எங்கு வேலை இருக்கின்றதோ அந்த இடத்தை நோக்கி பயணிக்க வேண்டும். பணக்காரர்களுக்கும் பயணம் என்பது பணம் சம்மாதிப்பதற்கான ஒன்று. இதற்கிடைப்பட்ட வர்க்க சமூகங்கள் அறிவுத் தேடலுக்காக உழைப்பிற்காக சுக வாழ்விற்காக உல்லாசப் பயணங்களுக்காக எனப் பல காரணங்களுக்காகப் பயணிக்கின்றார்கள். சிலர் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும் தம்மை அறிவதற்கான பயணத்தையும் மேற்கொள்கின்றார்கள். இருப்பினும் பயணம் செய்வதும் ஒரு வர்க்க நிலைப்பாடே. ஆனால் ஒவ்வொருவரும் பயணம் செய்வதை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு நோக்கம் இருக்கின்றது. இந்த நோக்கமே குறிப்பிட்ட பயணத்திற்கான நியாயத்தைக் கற்பிக்கின்றது. ஆனால் அனைவருக்கும் பயணம் முக்கியமானதும் தவிர்க்கமுடியாததுமாகும். வாழ்வின் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சிறிய பயணம் ஒன்றையாவது மேற்கொண்டிருப்போம்.

thealchemistஇறுதியாக 2002ம் ஆண்டு இரண்டாம் முறை இந்தியாவிற்கு புனேக்கு தியானப் பயிற்சிகளில் ஈடுபட தனியாகச் சென்றேன். அங்கு கடந்த முறை சந்தித்த ஒருவரை மீளவும் சந்தித்தேன். அவர் ஒரு பீட்சா கடை வைத்திருக்கின்றார். மாலை ஆறு மணியிலிருந்து இரவு 11 மணிவரை மட்டுமே அதில் வேலை செய்வார். இது தனக்குப் போதும் என வாழ்பவர். அவர் எனக்கு ஒரு நூலை அறிமுகம் செய்தார். அது போலோ கேய்லோ (Paulo Coelho)வினது The Alchemist என்ற நாவல். இந்த நாவல் பல விடயங்களை நமக்கு உணர்த்தும். இதை மிக எளிமையாக கூறுவதாயின் பயணத்தின் முக்கியத்துவத்தை கூறும் அதேவேளை நம்மை அறிவதற்கு நாம் எங்கும் சுற்றத் தேவையில்லை. அது நமக்குள்ளையே நாம் இருக்கின்ற இடத்திலையே இருக்கின்றது என்பதையும் மிக அழகாக கூறுகின்றது. img_0583இந்தப் புரிதல் இவரினுடாகவும் ஓசோவினுடாகவும் எனக்குள் ஆழமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக உணர்கின்றேன். ஆகவேதான் பயணம் செய்வதை தவிர்க்க விரும்புகின்றேன். இதுவே சிலவேளைகளில் எனது கடைசிப் பயணமாகவும் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு பயணங்களும் புதிய அனுபவத்தை அறிவை தந்தபடி இருக்கின்றன. இனி என்ன என்பதை இப் பயணத்தின் இறுதியில் முடிவு செய்யலாம். இன்னும் ஆறு மாதங்கள் காத்திருங்கள். ….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s