இரசியா: மீண்டும் பழமையை நோக்கி…

இரசியப் புரட்சி: விதைகளும் வினைகளும்

IMG_4565இரசியப் புரட்சி தொடர்பாக நூல்கள் ஊடாக நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பல தகவல்களை அறிந்துள்ளோம். இருப்பினும் சோவியத்யூனியன் உடையும் மட்டும் அது நம்மில் ஏற்படுத்திய தாக்கம் நம்பிக்கை அளப்பரியது. ஆகவே சோவியத்துக்களின் வாழ்வை பார்ப்பது ஒரு கனவாக இருந்தது. இன்று சோவியத்துக்கள் இல்லை. இரசியா என்ற கூட்டமைப்பு மட்டுமே உள்ளது. ஒபாமாவில் விருப்பம் இருந்தபோதும் பூட்டினைப் பிடிக்காதபோதும் இரசியாவா?அமெரிக்காவா? என நாம் தெரிவு செய்யும் பொழுது சில காரணங்களுக்காக இரசியாவை தெரிவு செய்வதும் பூட்னை ஆதரிப்பதும் தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. இவ்வாறான சிந்தனை நமக்குள் உருவாவதற்கு சில உளவியல் மற்றும் அரசியல் காரணங்கள் இருக்கலாம். இப்படியான ஒரு நாட்டிற்குப் பயணம் செய்வதும் அங்குள்ள மக்களுடன் உரையாடுவதும் புரட்சி மற்றும் புரட்சிக்குப் பிந்திய நினைவிடங்களைப் பார்ப்பதும் இனம் புரியாத உணர்வைத் தரக்கூடியன. நான் பார்க்கவிரும்பிய எனது தனிப்பட்ட தெரிவுகள் இதை அடிப்படையாக கொண்டவையாவே இருந்தன.

img_4173இரசியாவில் பீட்டர்ஸ்பேக், மாஸ்கோ,  துவா மற்றும் மாஸ்கோவிற்கு அருகிலிருந்த சிறிய கிராமம் ஆகிய நகரங்களுக்கே நாம் சென்றோம். இந்த நகரங்களிலுள்ள சில மனிதர்களையும் இலக்கியப் படைப்பாளர்களின் நினைவில்லங்களையும் மற்றும் சில அரசியல் அருட்காட்சியகங்களையும் பார்வையிட்டோம். முதல் இரண்டு விடயங்கள் தொடர்பாகவும் ஏற்கனவே இரண்டு பதிவுகள் எழுதியுள்ளேன். அதனை இங்கு அழுத்துவதன் மூலம் வாசிக்கலாம்.

IMG_4318நாம் முதலாவதாக சென்ற பீட்டர்ஸ்பேக் நகரம் லெனின்கிராட்டாக ஒரு காலத்தில் நம் மனதில் ஆழமாகப் பதிந்த ஒரு நகரம். இன்று பழைய பீட்டர்ஸ்பேக்காக மட்டும் இருக்கவில்லை. புரட்சிக்கு முந்திய பழைமைகளைப் பேணிப் பாதுகாக்கும் ஒரு இடமாகவும் இருக்கின்றது. பீட்டர்ஸ்பேக் நகரம் வட ஐரோப்பாவின் வெனிஸ் எனக் கூறப்படுமளவிற்கு சிறு நதிகளையும் ஓடைகளையும் தீவுகளையும் கொண்ட நகரம். மன்னர் காலத்து குளிர் கால அரண்மனையும் அதன் முன்னாலுள்ள வெளியும் சதுக்கமும் முக்கியமான ஒரு இடம். இந்த அரண்மனை கத்தரினா அரசியினால் சேர்க்கப்பட்ட கலைத்துவ பொருட்களினதும் ஓவியங்களினதும் அருட்காட்சியமாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான விடயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை முழுமையாகவும் விளக்கமாகவும் பார்ப்பதற்கு ஒரு நாள் போதாது. இருப்பினும் நாம் விரைவாகப் பார்த்துவிட்டு கீழ் தளத்திற்குவர அங்குள்ள உணவகங்களில் அனைவரும் கோக்கோகோலா குடித்துக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டுமிருந்தனர். இங்கிருந்து அரை மணித்தியாலங்களுக்கு மேலாக நிலக் கீழ் புகையிரதத்தில் பயணம் செய்து  நகரத்தின் ஒதுக்குப் புறத்திலிருந்த சோவியத் கால பொருட்களையும் பார்வையிட சென்றோம். ஒன்றிரண்டு பார்வையாளர்களுடன் வெறிச்சோடி இருந்தது இந்த அருட்காட்சியகம்.

img_4658பீட்டர்பேர்க் நகரத்தில் இரண்டு பெரிய தீவுகளும் ஒரு சிறிய தீவும் உள்ளன. இச் சிறிய தீவில்தான் இரசியாவின் கடைசி அரசர் இரண்டாம் நிக்கலசினதும் அவரது குடும்பத்தின் உடல்களும் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்திலிருந்து எடுத்து 1990ம் ஆண்டின் பின்பு புதைக்கப்பட்டிருக்கின்றன. இவை தங்கத்தினால் செய்யப்பட்ட ஒரு தேவாலையத்திற்குள் சமாதியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதைப் பார்ப்பதற்கு மக்கள் மிக நீண்ட வரிசையில் பல மணிநேரமாக (ஒரளவு) பணம் கொடுத்துக் காத்திருக்கின்றனர். நாம் இதைப் பார்ப்பதற்குப் பதிலாக இந்தச்  சிறிய தீவில் இருகிருக்கின்ற பழைய சிறையைப் பார்க்க விரும்பினோம். இந்தச் சிறைகளில் புரட்சிக்கு முன்பு புரட்சியை உருவாக்க முனைந்தவர்களைச் சிறைபிடித்து வைத்திருக்கின்றார்கள். புரட்சியின் பின் எதிர் புரட்சியாளர்கள் சிலரை சிறை வைத்திருக்கின்றார்கள். ஆனால் 1930ம் ஆண்டிலிருந்து இது ஒரு அருங்காட்சியகமாக சோவியத் அரசால் மாற்றப்பட்டு இன்றுவரை பேணிப் பாதுகாக்கப்படுகின்றது. இதற்கு இன்னுமொரு காரணம் ஸ்டாலின் அதிகாரத்திலிருந்தபோது என்ன செய்தார் என்பதை மீளக் நினைவு கூறுவதற்காகவும் இருக்கலாம்.

img_4726இந்த அருட்காட்சியகங்கள் ஒவ்வொன்றையும் பார்ப்பதற்கு தனித் தனி அனுமதி சீட்டுகளுக்கு ஒரு விலையும் அனைணத்தையும் பார்ப்பதற்கு ஒரு விலையும் போட்டிருந்தார்கள். நாம் சிறைச் சாலையை மட்டும் பார்ப்பதற்கான அனுமதிச் சீட்டை வாங்கிக் கொண்டு சென்றோம். போகும் வழியில் கடந்த கால தண்டனை மற்றும் சித்திரவதை செய்கின்ற காட்சியகம் ஒன்றிருந்தது. அதில் ஒரு மனிதர் குற்றவாளிகளை வெட்டுகின்ற கத்தி ஒன்றையும் வைத்துக் கொண்டு நின்றார். அருகில் குற்றவாளி கழுத்தை ஒரு வட்டத்திற்குள் கொடுத்து தன்னை வெட்ட தயார் நிலையில் இருப்பதற்கான உபகரணமும் இருந்தது. நாம் இதை வெளியில் நின்று பார்த்து விட்டுச் சென்றோம்.

img_4728சிறைச் சாலையைப் பார்ப்பதற்க்கும் குறிப்பிட்ட மனிதர்கள் வந்திருந்தார்கள். இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடத்தில் இரு தளங்களிலும் பல அறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு சிறையிலும் யார் யார் இருந்தார்கள் என்ற விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். புரட்சிக்கு முன்பு அதற்கான அடித்தளத்தையிட்ட லெனினின் அண்ணன் இருந்த சிறை, மற்றும் மார்க்சிம் கோர்க்கி, ரொட்ஸ்கி எனப் பலர் இருந்த சிறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒரு கட்டில், மேசை, விளக்கு, முகம் கழுவ ஒரு தண்ணீர்ப் பாத்திரம், மலசலம் கழிக்க ஒரு உபகரணம் என்பற்றை வைத்துள்ளார்கள். இந்த அறைகளின் ஒரு பக்கத்தில் உயரத்தில் ஒரே ஒரு ஜன்னல் மட்டுமே உள்ளது. கைதிகளுக்கு  வழங்கப்பட்ட ஆடைகளையும் காட்சிக்கு வைத்திருந்தார்கள். மேலும் ஒவ்வொரு தளங்களிலும் ஒரு அறையை சித்திரவதைகளுக்கும் கடுமையான தண்டனைகளுக்கும் என ஒதுக்கியுள்ளார்கள். img_4705இங்கு வெளிச்சம் இல்லை. ஜன்னல் இல்லை. கட்டில் இல்லை. அறையை சூடேற்ற முடியாது. குளிர் காலங்களில் குளிரில் இருக்க வேண்டும். ஆடைகளும் குளிரைத் தாங்காது. பல பெண்களும் இளைஞர்களும் தம் இளம் வயதில் புரட்சிக்கான வேலைகளைச் செய்து பிடிபட்டு இச் சிறைகளிலையே பல காரணங்களினால் இறந்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் முடியாட்சிக்கு எதிராக செயற்பட்ட மற்றும் அரசரைக் கொலை செய்ய முயற்சித்த “பயங்கரவாதிகள்” என்றே மன்னர் கால ஆட்சியாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். சிலர் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதில் சிலர் சிறந்த கல்வியாளர்களாகவும் மாற்றம் பெற்றுள்ளனர். டொரட்சி மற்றும் கோர்க்கியைப் போன்றவர்கள் இறுதிவரை புரட்சியாளர்களாக இருந்துள்ளார்கள். ரொட்ஸ்கவோஸ்கியும் இங்குள்ள சிறை ஒன்றில் மன்னர் ஆட்சிக்கு எதிராக சதி செய்ததாக தண்டனை பெற்று இருந்துள்ளார். ஆனால் அந்த சிறைச் சாலை இப்பொழுது உடைக்கப்பட்டுள்ளது.

img_4729இந்தச் சிறையிலிருந்து நாம் வெளியே வந்தபோது மனம் கனத்தது. இப்படி உலகம் பூராவும் எத்தனை மனிதர்கள் மானுட விடுதலை வேண்டி தம் வாழ்வை உயிரை அர்ப்பணம் செய்துள்ளார்கள். ஆனால் பல காரணங்களினால் இறுதிகளில் எந்தப் பயனுமில்லாமல் வீணாகிவிட்டனவோ என்ற ஏக்கம் துக்கம் மட்டுமே எனக்குள் மிஞ்சிநின்றது.

இலங்கையில் வெளிக்கடை , மகசீன் சிறைகளும் பூசா முகாம்களும்  எப்பொழுது அருட்காட்சியகமாக மாற்றப்படும்? இயக்கங்களின் சிறைகளிலிருந்தவர்களை எப்படி எப்பொழுது நினைவு கொள்ளப் போகின்றோம்? அரசாங்கங்களால் இயக்கங்களால் கட்சிகளால் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவு இல்லைங்களை எப்பொழுது திறக்கப்போகின்றோம்?

img_4737இந்த நகரங்களிலுள்ள தேவாலையங்கள் மிகப் பழமையானவை. நீண்ட கால வரலாற்றைக் கொண்டவை. புரட்சியின் பின் இவை இடித்து அழிக்கப்படவில்லை. மாறாக இவையும் அருட்காட்சியகங்களாக மாற்றப்பட்டன. சோவியத் உடைவின் பின்பு இவற்றில் பல மீண்டும் தேவாலயங்களாகப் புனரமைக்கப்பட சில மட்டும் அருட்காட்சியகமாக தொடர்ந்தும் செயற்படுகின்றன. இருப்பினும் அதன் ஒரு பகுதியில் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. பெரும்பாலான மக்கள் சோவியத் கால மக்கள் மட்டுமல்ல புதிய தலைமுறையினரும் இக் கோவில்களுக்கு வழிபட செல்வதும் அவற்றைக் கண்டவுடன் கையினால் குறுஸ் போடுவது சதாரணமாகக் காணக்கூடிய நிகழ்வுகள். இவை என் மனதின் ஒரு மூலையில் துக்கத்தையும் பல கேள்விகளையும் ஏற்படுத்தின.

img_4759சோவியத் காலங்களில் மதங்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும் பழம் கோவில்களை உடைக்காது அருட்காட்சியமாக  மட்டுமே மாற்றியிருக்கின்றார்கள் என்பதில் பெருமைப்பட்டேன். பல தேவாலயங்கள் அவ்வாறு பேணிப்பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆனால் ஷேளி தகவல்களை சேகரித்து உலகிலையே மிக உயரமான தேவாலையத்தை 1930ம் ஆண்டு ஸ்டாலின் குண்டு வைத்து தகர்த்ததாக கூறி எனது நம்பிக்கையை தகர்த்தார். 2000ம் ஆண்டுகளின் பின்பு பல கோவில்கள் பல மில்லியன் டொலர்களில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன. இக் கோயிலும் புனரமைக்கப்பட்டுள்ளது. இது இன்றைய அரசின் அரசியல் நிலைப்பாட்டையும் நோக்கத்தையும் வெளிப்படுத்துகின்றது எனலாம்.

img_4879சோவியத் காலங்களில் மக்கள் மனம் திறக்க முடியாதவர்களாக இருந்துள்ளார்கள். பெரும்பாலான வீடுகளில் தங்கள் சொத்துக்கள் தொடர்பாக மௌனமாக இருக்கும்படி பெரியவர்கள் குழந்தைகளைக் கட்டுப்படுத்தியதாக கூறுவார்கள். பொய் சொல்ல நிர்ப்பந்தித்ததாகவும் கூறுவார்கள். சொத்துக்கள் மற்றும் பல தனிநபர் தொடர்பான விடயங்களை உரையாடும் பொழுது பக்கத்து சுவரினால் வெளியே கேட்க முடியாதளவு இரகசியமாக உரையாடி உள்ளார்கள். ஒரு கோழி இருக்க வேண்டிய இடத்தில் இரண்டு கோழிகள் இருந்தால் அல்லது அயல் வீட்டில் அசாதாரணமாக ஏதாவது நடந்தால் இத் தகவல் உடனடியாக குறிப்பிட்ட இடங்களுக்கு அறிவிக்கப்படும். இதற்காக இவர்கள் பெறும் தண்டணை அதிகமானது எனக் கூறுகின்றனர். ஆகவேதான் கடந்த எழுபது வருடங்களில் இரகசிய தன்மை பேணுபவர்களாக அதிகம் உரையாடாதவர்களாக வளர்ந்துள்ளார்கள். இவ்வாறு வளர்ந்தமை இவர்களை நிறைய பாதித்துள்ளது எனலாம். மேலும் இவ்வாறு வாழ்ந்தமை இவர்கள் மெளனிகளாகவும் இறுக்கமான முகம் கொண்டவர்களாகவும் இருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இப் பார்வை சில நேரம் ஒரு பக்க பார்வையாக இருக்கலாம். இது தொடர்பாக சகல வர்க்கங்களிலும் கருத்துக் கணிப்பை செய்யும் பொழுது பல வகையான தகவல்கள் வெளிவரலாம். ஆனால் சோவியத் காலம் இரும்புத்திரை மட்டும் கொண்டதல்ல ஒரு பக்கம் இருண்ட காலமாகவும் இருந்துள்ளதாகவே தெரிகின்றது.

IMG_4550குருச்சோவ் காலத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டு நல்லதொரு காலம் உருவாகும் என நம்பியுள்ளனர். ஆனால் அது நடைபெறவில்லை. இப்பொழுது தெரிவுகள் பல மக்களுக்கு உண்டு. ஆனால் மீண்டும் ஏழ்மை அதிகரித்து பெரும் பணக்காரர்கள் திடிரென முளைத்துள்ளார்கள். இவர்கள் அதிகமாக வரி கட்டவேண்டும். இவ்வாறு வரி கட்டுவதை இவர்கள் விரும்புவதில்லை. இதற்குக் காரணம் இரஸ்சியாவின் என்பது வீதமான  தொழிற்துறை அரச தொழிலாகும்.  இவர்களுக்கு அநாவசியமாக தமது வரிகள் செல்கின்றன எனக் குறை கூறுகின்றார்கள். கடந்த சோவியத் காலம் இவர்களுக்கு ஏதைக் கற்பித்தது என்பது கேள்வியே. அதேநேரம் லெனின் மீது இன்னும் மக்களுக்கு மதிப்பு உள்ளது. இதற்கு கடந்த காலங்களில் சிறுவயதிலிருந்து லெனின் தொடர்பான கருத்துக்களை விதைத்தது ஒரு காரணமாக இருக்கலாம். சின்னக் கால லெனின் முத்திரையுடன் சிறுவர்களையும். அவரது இளமைக் கால முத்திரையுடன் இளைஞர்களையும் பெரியவர்களுக்கு வளர்ந்த லெனினின் முத்திரையையும் வழங்கி அவர்களை முழுமையான கம்யூனிஸ்ட் ஆக்கி வந்துள்ளார்கள். அதாவது கடந்த எழுபது வருடங்களில் இயேசு இருந்த இடத்தை லெனின் பிரதியீடு செய்துள்ளார். img_5357இதன் காரணமாக லெனினுக்கு இன்னும் செல்வாக்கு உள்ளது. இச் செல்வாக்கின் மூலமாக வாக்குகளுகளைப் பெறுவதற்காக இன்னும் லெனின் சிலைகளைப் பாதுகாக்கின்றனர் என்ற கருத்தும் நிலவுகின்றது. அதேவேளை லெனினும் ஸ்டாலினும் கிரம்ளின் வீதிகளில் (ஜோக்கர்களாக ) நடமாட இயேசு மீண்டும் மக்கள் மனங்களில் குடியேறியுள்ளார் என்பதை ஒவ்வொரு கிராமங்களிலும் எழுந்துள்ள ஆலயங்கள் நிறுபிக்கின்றன.

img_5309பீட்டர்ஸ்பேர்க்கிலுள்ள இரசிய அரசியல் வரலாற்று அருட்காட்சியகத்திற்கு சென்றோம். பீட்டர், நிக்கலஸ் என்ற அரசர்களிலிருந்து லெனின் ஸ்டாலின் ஊடாக இன்றைய பூட்டின் வரை பல தகவல்கள் இருந்தன. லெனினின் அலுவலகம் என ஒன்றை வைத்திருந்தார்கள். பெரும்பாலும் இரசிய மொழியில் மட்டுமே தகவல்கள் இருந்தன. ஒன்றரை மணித்தியாலங்கள் மட்டுமே இருந்ததால் ஆறுதலாகப் பார்க்க முடியவில்லை. இருப்பினும் இது ஒருவகையில் பழைய அரசர்களின் புகழ் பாடியும் அவர்களை நியாயப்படுத்தியும் ஸ்டாலினுக்கு எதிரான பார்வையை ஏற்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்ததாகவே இத் தகவல்களை வாசித்தபோது உணர்ந்தேன்.

img_5331கிரம்ளினில் லெனின் உடல் இன்னும் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆச்சரியப்படும் வகையில் இவரைப் பார்ப்பதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்துநிற்கின்றனர். இதைப் பார்க்க பணம் அறவிடப்படுவதில்லை.  இந்த உடலை இவ்வாறு பாதுகாத்து வைக்க வேண்டுமா என்பது விவாதத்திற்கு உரியது. சோவியத் காலங்களில் லெனின் உடலுக்கு அருகில் இருந்த ஸ்டாலினின் உடல் இப்பொழுது வெளியே புதைக்கப்பட்டு அந்த இடத்தில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. பல இளைஞர்கள் அவருக்கு அருகில் நின்று தமது விரல்களில் வெற்றியின் அடையாளத்தைக் காண்பித்தவாறு படங்களைப் பிடித்தனர்.

img_5329இன்றைய இரசியாவை பார்க்கும் பொழுது இதற்காகவா இத்தனை மரணங்கள் இழப்புகள் நடைபெற்றன என நினைக்கும் பொழுது எதிர்காலம் தொடர்பாக அவநம்பிக்கையே நிலவுகின்றது. பிற நாடுகளில் வாழும் மரவுவாத மார்க்சிய மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தலைவர்கள் ஒரு தரம் என்றாலும் இந்த நாடுகளுக்கு விஜயம் செய்து இந்த மக்களின் நிலையைப் பார்த்து தமது நிலைப்பாடுகளை மறுபரிசீலனை மற்றும் சுயவிமர்சனத்திற்கு உட்படுத்துவதே பொருத்தமானது. எனது பார்வை மேலோட்டமானதுதான். ஆய்வினடிப்படையில் முன்வைக்கப்பட்டதல்ல. ஆனால் ஆய்வு செய்யும் பொழுது இப் பார்வை சார்ந்தே முடிவுகள் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை. சர்வதேச முதலாளித்துவ ஊடகங்களின் எதிர்ப் பிரச்சாரங்களுக்கு அப்பாலும் இரசிய சீன அரசுகள் என்ன செய்தன எப்படி மக்களை வழி நடத்துகின்றார்கள் என்பது கேள்விக்கும் விமர்சனத்திற்கும் உரியதே. இரசிய மக்களிடம் இனவாதப் போக்கும் உள்ளது. அதேநேரம் அவர்களிடம் இலகிய திறந்த மனமும் அன்பு செய்யும் உள்ளமும் உள்ளது என்பதற்கு நமது அனுபவங்கள் சான்று. இதனை பயணம் தொடர்பான விரிவான பதிவில் பதிவு செய்கின்றேன்.

img_4749

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s