தூருக்கி: கொன்யா…ரூமி… சுழற்சினுடாக நம்மை அறிதல்

மௌலானா ரூமி… சுழற்சினுடாக நம்மை அறிதல்

img_7643நாம் பாமாக்கலே பாறைகளைப் பார்த்த்துவிட்டு டெனிசிலி வந்து அங்கிருந்து பஸ்சில் ஏழு மணித்தியாலங்கள் பயணம் செய்து கொன்யா (Konya) நகரை வந்தடைந்தோம். இங்கு வந்து இறங்கிய போது குளிர ஆரம்பித்தது. நீண்ட நாட்களுக்குப் பின்பு குளிரை அனுபவிக்கின்றோம். கொன்யாவில் பிரதான பஸ் நிலையம் நகரின் ஒதுக்குப்புறத்தில் உள்ளது. நாம் செல்ல வேண்டிய இடம் மௌலான நகரம். எப்படிப் போவது என ஒரு கடையில் கேட்டபோது அவர்கள் சந்திக்குச் சென்று பஸ் பிடிக்கச் சொன்னார்கள். சந்திக்குச் சென்றால் என்ன பஸ் பிடிப்பது என்று தெரியவில்லை. அருகில் நின்ற இளைஞன் ஒருவனைக் கேட்டபோது சிறிது தூரம் நடந்து குறிப்பிட்ட பஸ் வரும் வரை காத்திருந்து நம்மை அதில் ஏற்றி சாரதியிடமும் சொல்லிவிட்டுச் சென்றான்.

img_7462பஸ் நிலையத்திலிருந்து மௌலானா நிலையத்திற்கு செல்ல அரை மணித்தியாலங்களுக்கு மேல் பிடித்தது. இரவு எட்டரை போல அந்த இடத்தில் இறங்கி நமது தங்குமிடத்தை நோக்கி நடந்தோம். நமக்குப் பின்னால் வந்த ஹிப்பி போன்ற அடையாளத்தைக் கொண்ட மனிதர்கள் நாம் இடத்தை தேடுவதை அறிந்து அவர்களாகவே எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டார்கள். நாம் விலாசத்தை காட்டியபோது அதற்கான வழியைக் காண்பித்தார்கள். அவர்கள் எந்த இடம் என நாம் விசாரித்தபோது தாம் ஈரானிலிருந்து வந்ததாக கூறினார்கள். மேலும் மிஸ்டிக் இசை விழா நடப்பதாகவும் இன்று இரவு ஒன்பது மணிக்கு உள்ளது எனவும் கூறினார்கள். நாம் முடிந்தால் வருகின்றோம் எனக் கூறி நன்றி கூறி விடைபெற்றோம்.

img_7496தங்குமிடத்தில் பொதிகளை வைத்துவிட்டு சாப்பிடுவதற்கு கடை தேடினோம். பல கடைகள் இருந்தன. எல்லாக் கடைகளிலும் இறைச்சி வகைகள் மட்டுமே இருந்தன. நாம் சாப்பிடுவதற்கு ஒன்றும் இருக்கவில்லை. மதியமும் சாப்பிடவில்லை. பசி வயிற்றைப் புடுங்கியது. பல கடைகள் ஏறி இறங்கியபோதும் பருப்பு சூப்பைத் தவிற வேறு ஒரு மரக்கறிச் சாப்பாடுகளும் இருக்கவில்லை. கடைசியாக ஒரு கடையில் ரொட்டியும் தூருக்கி கத்தரிக்காய் கறியும் இருக்க வாங்கி பாணுடன் சாப்பிட்டோம். இசை விழாவிற்கு செல்ல நேரம் ஆகிவிட்டதால் செல்லவில்லை. தங்குமிடத்தில் வந்து களைப்பினால் படுத்தோம்.

img_7488அதிகாலை எழும்பி நல்ல தண்ணீர் வர சந்தோசமாக குளித்துவிட்டு காலைச் சாப்பாடு வாங்குவதற்கு சென்றேன். பல கடைகள் திறக்கவில்லை. ஒரு வட்டமடித்து நடந்து வர பேக்கரி ஒன்று திறந்திருந்தது. அதில் பாணை வாங்கிக் கொண்டு இன்னுமொரு கடையில் வாழைப்பழமும் சொக்கலேட்டும் வாங்கிக் கொண்டு சென்றேன். இருவரும் அவற்றைச் சாப்பிட்டுவிட்டு ரூமியின் கல்லறையைப் பார்க்கச் சென்றோம்.

நாம் தூருக்கிக்கு செல்ல முடிவெடுத்த பின் போகத் தீர்மானித்த முக்கியமான இடம் கொன்யா. இங்குதான் மௌலானா ரூமி வாழ்ந்து இறந்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் (30.09.1207) ஆப்கானிஸ்தானில் இவர் பிறந்தார். தனது தந்தைக்கு ஏற்பட்ட நெருக்கடியால் அங்கிருந்து இடம் பெயர்ந்து தூருக்கிக்கியில் வாழ்ந்தார். ரூமி பற்றிய அறிமுகம் ஓசோவின் உரைகளினுடாகவே எனக்கு முதலில்கிடைத்தது. இவர் மீது மதிப்பையும் காதலையும் உருவாக்கியவர் ஓசோ.

img_7497தனது தந்தைக்கு நண்பர்கள் கல்லறை கட்டுவதற்கு முயற்சித்தபோது “வானமே பெரிய கல்லறை. (Tomb) அதைவிட பெரிய கல்லறை வேண்டுமா?” எனக் கேட்டு ரூமி தடுத்துள்ளார். ஆனால் அப்படிக் கேட்டுத் தடுத்த அவருக்கு கொன்யாவில் ஒரு கல்லறையைக் கட்டியுள்ளார்கள். இது இன்று முஸ்லிம்களின் முக்கியமான ஆன்மீக தளமாக கருதப்படுகின்றது.. ரூமியினது மட்டுமல்ல அவரது மகன் மற்றும் பலரினதும் கல்லரைகள் ஒரே இடத்தில் காணப்படுகின்றன. அனைத்து நெருக்கமாக வைத்துள்ளார்கள். அழகியலே இல்லை. மேலும் பல விதமான தொல்பொருட்களையும் இங்கு காட்சிக்கு வைத்துள்ளார்கள். இவற்றைப் பார்ப்பதற்கு பணம் அறவிடப்படுவதில்லை வெளியேறும் இடத்தில் ரூமியின் கல்லறையைப் பார்த்தவாறு தொழுவதற்கு இரண்டு இடங்கள் உள்ளன. முன்னுக்கு ஆண்களுக்கும் பின்னுக்குப் பெண்களுக்கும் ஒதுக்கியுள்ளார்கள். நாம் அதைக் கடந்து வெளியே வந்தோம். இங்கிருந்து ரூமியின் பெயரில் நடாத்தப்படும் மௌலான கலாச்சார நிலையத்திற்கு நடந்து சென்றோம். போகும் வழியில் தூருக்கியின் பழங்கால வாழ்வு முறைகளையும் அவர்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்ட போர்களையும் காட்சிப்படுத்தி வைத்துள்ளார்கள். இவற்றை அழகான மண்டபம் ஒன்றைக் கட்டி அதில் வைத்துள்ளதுடன் இம் மண்டபத்தை மரணித்தவர்களுக்கான நினைவாலையமாகவும் பயன்படுத்துகின்றார்கள். இவற்றைப் பார்த்துவிட்டு மதியம் சாப்பாடு தேடும் படலத்தை ஆரம்பித்தோம். அதற்கு முதலில் தொலைபேசிக்கு ஒரு சிம் காட்டை வாங்கிக் கொண்டோம்.

img_7550சிம் காட்டின் பங்களிப்புடன் செயற்படும் கூகுள்தான் இப்பொழுது நமது வழிகாட்டி. அதைப் பயன்படுத்தி ஊர்சுற்றிப் புராண கை நூலின் (lonely planet) இணையத் தளத்தின் உதவியுடன் ஒரு கடையை அறிந்து கொண்டு அதை நோக்கி நடந்தோம். போகும் வழியில் ஒரு வயதானவர் நான்கு தேநீர் கோப்பைகளுடன் அழகாக நடந்து வந்தார் . அவரைப் படம் ஒன்றும் எடுத்துவிட்டு அவர் வேலை செய்யும் கடையில் மாதுளம்பழ சாறு தேநீரை ஒன்றை வாங்கி அருந்தினோம். மிக நறுமணத்தைப் பரப்பும் சூடான தேநீர். அந் நறுமணத்தை உள்வாங்கியபடி அருந்தினோம். ஏழைக் கடைக்காரார் நன்றாக உபசரித்தார். இங்கிருந்து சாப்பாட்டுக் கடையை விசாரித்துக் கொண்டு நடந்தோம்.

img_7559நாம் சாப்பிட்ட கடையில் சாப்பாடுகள் பாரம்பரிய முறைப்படி வித்தியாசமாக செய்கின்றார்கள் என அறிந்தோம். தூருக்கி முறையில் தயாரிக்கப்பட்ட கத்திரிக்காய் கறி, மிளகாய்க் கறி என்பவற்றுடன் சோறும் பாணும் வாங்கி சாப்பிட்டோம். வித்தியாசமான சாப்பாடு. பின்பு அங்குள்ள கடைகளை ஒரு சுற்றுச் சுற்றி வந்து விட்டு உடல் அலுப்பாக இருந்ததால் குட்டிச் தூக்கம் போட்டோம். மாலை எழும்பி மௌலான நிலையத்தை நோக்கி நடந்தோம். நிகழ்வு முடிய இரவு பதினொரு மணியாகிவிடும் என்பதால் போகும் வழியில் தூருக்கி பீட்சா ஒன்றை வாங்கி சாப்பிட்டோம்.

img_7620இன்று சனிக்கிழமை. ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை ஏழு மணிக்கு ரூமி அவர்கள் தன்னைக் கண்டவைதற்காக உருவாக்கிய வழி முறையான சூழலும் சடங்கை (sufi whirling dervish) நடத்துகின்றார்கள். இதைப் பார்ப்பதற்கும் பணம் அறவிடப்படுவதில்லை. இவர்கள் வழமையான மதச் சடங்குகளைப் பின்பற்றுகின்றவர்கள் அல்ல. மாறாக சுழற்சி நடனத்தினுடாக தம்மை பரிசோதனைக்கு உட்படுத்தி தமது மையத்தை மட்டுமல்ல பிரபஞ்சத்தின் மையத்தையும் உணர்வதற்கு அறிவதற்கும் முயற்சிப்பதற்கான வழிமுறையைப் பரிசோதிப்பவர்கள்.  பிரபஞ்சத்தின் ஒவ்வொன்றும் தானும் சுழன்று ஏதோ ஒன்றை மையமாகக் கொண்டும் சூழல்கின்றது. நம் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவும் இவ்வாறுதான் சூழல்கின்றன. நாம் பிரக்ஞையின்றி வாழ்வதால் இவற்றைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றோம். இவ்வாறான சூழற்சியை பிரக்ஞையுடன் செய்யும் பொழுது நமது மையத்தை மட்டுமல்ல பிரபஞ்சத்தின் மையத்தையும் நாம் உணர்ந்து புரிந்து அறிந்து கொள்ளலாம். இதுவே  இந்தச் செய்கையின் பயன்பாடு. எனது முதல் அரங்க அளிக்கையான கங்குவிலும் இந்த நடனத்தைச் சேர்த்திருந்தேன். ஆனால் தூரதிர்ஸ்டவசமாக அது புரிந்துகொள்ளப்படவில்லை என்பது வருத்தமானதே. அதற்கான பொறுப்பை நான் தான் எடுக்க வேண்டும்.

img_7628மௌலான என்பது குருவின் குரு. ஜாலால்டின் என்ற பெயர் கொண்ட இவருக்கு மௌலான என்ற பெயரும் ரம் என்ற நகரத்திலிருந்து வந்ததால் ரூமி என்ற பெயரும் நிலைத்துவிட்டன. மேற்குறிப்பிட்ட சூழற்சி நடனத்தை குழந்தைகளிடம் இருந்தே இவர் கற்றுக்கொண்டார். இதனை தனது சீடர்களுக்கு அறிமுகப்படுத்த முதல் தானே 36 மணித்தியாலங்களுக்கு மேலாக சூழன்று அதன் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டார். அதனுடாக தான் கண்டடைந்த அனுபவத்தை உறுதி செய்த பின்பே தனது சீடர்களுக்கும் வழிகாட்டினார். இவர் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றியபோதும் கடவுளை நம்பியபோதும் சுபியிசத்திற்குப் புதிய பாதையை உருவாக்கி கொடுத்தவர் எனலாம். எனக்கு கடவுள் மற்றும் மத நம்பிக்கைகள் இல்லாதபோதும் இவரது இந்த வழிமுறையும் இவரது சில குறிப்புகளுமே இவர் மீதான மதிப்பை உருவாக்கியது. நான் விரும்பி செய்கின்ற தியான முறைகளில் சூழற்சி தியான முறையும் ஒன்றாகும். இவ்வாறு செய்பவர்களை sufi whirling dervish எனக் கூறுவார்கள். ஒன்றை அனுபவத்தைால் நாம் அறியும் பொழுது கிடைக்கும் அறிவு அளப்பரியது. இந்த நடனமும் அவ்வாறான ஒன்று. ஆனால் தூரதிர்ஸ்டவசமாக இந்த நடனத்தின் நோக்கத்திற்கும் அப்பால் இன்று இது வெறும் ஒரு கலாசார சடங்காக மட்டும் பயன்படுத்தப்படுதைப் பார்க்கும் பொழுது கவலையே ஏற்படுகின்றது.

2016-09-28-4இன்று ரூமியின் 809வது பிறந்த நாள். கடந்த பத்து நாட்களாக இவரது பிறந்த நாளை கொண்டாடும் மிஸ்டிக் இசை (konya international mystic music festival)  நிகழ்வுகள் மௌலான நிலையத்தில் நடைபெறுகின்றன. இதற்காக உலகத்தின் பல பாகங்களிலுமுள்ள இசை வல்லுனர்களை வரவழைத்து வருடா வருடம் இலவசமாக நடாத்துகின்றனர். ஒவ்வொரு நாளும் இரவு ஒன்பது மணிக்கு இசை நிகழ்வு ஆரம்பமாகின்றது. இன்று இரவு ஒன்பது மணிக்கு ஈரான் மற்றும் இந்திய இசை மேதைகள் இணைந்து அளிக்கை ஒன்றை செய்கின்றார்கள். நாம் சுபி நடனம் முடிய இதையும் இருந்து பார்த்தோம். ஆகா என்ன இசை. இசை உபரகணங்களை என்ன மாதிரி பயன்படுத்துகின்றார்கள். நல்ல இசை நமக்குள் அமைதியையும் ஆனந்தத்தையும் தரவேண்டும் என நினைக்கின்றேன். அதை இந்த இசை தந்தது. இசையை இரசிப்பதற்கு இசை பற்றிய அறிவு அவசியமில்லை என்பதை இன்னுமொரு முறை புரிந்து கொண்டேன்.

2016-09-28-5இந்த அரங்கத்தில் காலை சந்தித்த ஒரு பெண்ணை மீண்டும் சந்தித்தோம். இவர் ஸ்டன்புல்லில் ஒரு பல்கலைக்கழகத்தில் மொழியியலும் இலக்கியமும் கற்பிக்கின்றார். நாம் பெரும்பாலும் பயணித்த நாடுகள் ஆங்கிலம் ஒரு சொல்லும் தெரியாத ஒரு உலகம். நமக்கு அவர்கள் மொழி தெரியாதபோதும் சமாளித்து வாழ்கின்றோம். அவர்களும் உதவுகின்றார்கள். இது ஒரு வித்தியாசமான அனுபவமே. ஆனால் நாம் சந்தித்த பெண் ஆங்கிலம் ஒரளவு தெரிந்தவர். இவரைப் போன்றவர்கள் இருப்பது நமக்கு மேலதிகமான உதவி. அவருடன் நடந்து வந்து மௌலான கல்லறையின் அருகில் பிரிந்தோம். ஸ்டன்புல் வந்தால் சந்திக்கும் படி அழைப்பு விடுத்தார். அவருடன் ஒரு படத்தைப் பிடித்துக் கொண்டு இரவு பதினொரு மணிக்கு எதாவது சாப்பிடலாமா எனக் கடைகளைத் தேடினோம். எல்லாக் கடைகளும் பூட்டியிருந்தன. திறந்திருந்த கடைகளிலும் நாம் சாப்பிட ஒன்றும் இருக்கவில்லை. ஒரே ஒரு கடையில் ரொட்டியும் பருப்பு சூப்பும் இருந்தது. அதைச் சாப்பிட்டுவிட்டு தங்குமிடம் சென்று மகிழ்ச்சியுடன் நித்திரைகொண்டோம்.

img_7640அடுத்த நாள் நகரைச் சுற்றிப் பார்த்துவிட்டு மதிய சாப்பாட்டிற்கு இந்திய உணவகம் இருக்கின்றதா என கூகுளில் தேடினோம். இரண்டு உணவகங்களைக் காட்டியது. அந்த உணவகங்களைத் தேடி ஒரு மணித்தியாலங்களுக்கு மேலாக நடந்து சென்றோம். ஆனால் அங்கு தூருக்கிய மாமிச உணவு வகைகள் மட்டுமே இருந்தன. வேறு வழியில்லாமல் lonely planet இணையத் தளத்தின் உதவியுடன் ஒரு உணவகத்திற்கு சாப்பிட சென்றோம். தூருக்கிய மரக்கறி உணவு வகைகள் இருந்தமை நாம் செய்த பாக்கியம். இரவு பாக்கிஸ்தானிலிருந்து வந்திருந்து இசைக் குழுவொன்றின் சுபி இசை நிகழ்வை இரசிக்கச் சென்றோம். எதிர்வரும் நாட்களிலும் பல நல்ல இசை நிகழ்வுகளும் சுபி சுழற்சி நடனம் இறுதி நாளிலும் நடைபெற இருக்கின்றன. அனைத்தும் இலவசம். நமது அடுத்த பயணத்தை ஏற்கனவே திட்டமிட்டுவிட்டதால் கவலையுடன் இந்த நகரை விட்டுப் புறப்படுகின்றோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s