தூருக்கி: சிதைவுறும் கற்பிதங்கள்

img_7079கிரேக்கத்தின் தீவுகளின் ஒன்றான லெவோஸில்(Lesvos) இருந்து தூருக்கி நோக்கி சிறிய கப்பலில் பயணமானோம். இந்தத் தீவும் பயணம் செய்த கடலும் கடந்த வருடம் ஆயிரக்கணக்கில் வந்த சீரிய அகதிகளையும் கடலில் மாண்ட குழந்தைகளையும் நினைவுபடுத்தின. கப்பலை மோதிய அலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முகங்களாக தோன்றின. இப்பொழுது அகதிகள் கட்டுப்படுத்தப்பட்டதால் பெருமளவில் அகதிகள் வருவதில்லை என அறிந்தோம்.

img_7127மாலை ஆறு மணிக்கு லெவோஸிலின் மிதிலினி(Mitilini) நகரிலிருந்து இரண்டு கப்பல்கள் வெளிக்கிட்டன. ஒரு கப்பல் ஆறு ஈரோக்கள். மற்றக் கப்பல் 10 ஈரோக்கள். நமது கப்பல் இரவு ஏழரை மணிக்கு தூருக்கியின் அவ்வலக்(Ayvalik) கரையை அடைந்தது.  இன்று இரவிற்கு நாம் தங்குவதற்கு எந்த ஒரு இடத்தையும் பதிவு செய்யவில்லை. இங்கு வந்தபின் பஸ் இருந்தால் அதை எடுத்து இரவிரவாகப் பயணம் செய்வோம் அல்லது ஒரு விடுதியைக் கண்டுபிடித்து தங்குவோம் என முடிவு செய்திருந்தோம். தூருக்கியின் எல்லைப் பரிசோதகர்கள் எந்தக் கஸ்டங்களையும் தராமல் நம்மை வெளியில் அனுப்பினர். நாம் ஏற்கனவே தூருக்கிக்கான விசாவை இணையத்தினுடாக விண்ணப்பித்துப் பெற்றிருந்தோம். வெளியே வந்தவுடன் வழமைபோல பிரச்சனைகளை எதிர்கொண்டோம்.

img_7121நாம் இப்பொழுது செல்ல வேண்டிய இடம் பிரதான பஸ் நிலையம். அதற்கு எப்படிப் போவது எனக் கேட்டால் ஒருவருக்கும் ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் நாம் கேட்ட அனைவரும் நமக்கு உதவும் எண்ணத்தில் ஏதோ சொன்னார்கள். அவை எமக்கு விளங்கவில்லை. எதற்கும் முதலில் தூருக்கிப் பணத்தை வங்கியில் எடுத்துக் கொண்டோம். அதன் பின் பஸ் நிலையத்தில் நின்ற மூன்று இளம் பெண்களிடம் எவ்வாறு பிரதான பஸ் நிலையத்திற்கு செல்வது அல்லது நாம் செல்ல வேண்டிய பமாக்கடேல்(Pamukkle) நகரத்திற்கு எப்படி செல்லவது எனக் கேட்டோம். அவர்கள் எப்படியாவது எங்களுக்கு உதவ தூருதுருத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் தொலைபேசியினுடாக கூகுளின் உதவியுடன் மொழி மாற்றம் செய்து உரையாடினோம். அவர்களும் யார் யாருக்கோ எல்லாம் தொலைபேசியில் உரையாடி நமக்கு உதவ முயற்சித்தார்கள். இதே நேரம் அவர்களது பஸ் வர தம்மால் முடியாத நிலையில் கவலையுடன் சென்றார்கள். நாம் அவர்களுக்கு நன்றி கூறி வழியனுப்பினோம்.

img_7146இப்பொழுது என்ன செய்வது? எந்தப் பக்கம் செல்வது என்று தெரியவில்லை. எல்லைப் பாதுகாப்பு பரிசோதகர்களிடம் மீள சென்று விசாரிப்பதே ஊகந்தது என உணர்ந்து சென்றோம். அவர்கள் எல்லாவற்றையும் மூடிவிட்டு சென்றிருந்தார்கள். நமது அதிர்ஸ்டத்திற்கு அதன் வாசலில் கப்பலில் வேலை செய்த ஒருவர் உட்காந்திருந்தார். அவருக்கு ஒரளவு ஆங்கிலம் தெரிந்திருந்தது. நாம் செல்ல வேண்டிய இடத்திற்கான பெயரைக் குறிப்பிட்டு எந்த இடத்தில் பஸ் எடுக்க வேண்டும் என்றும் சொன்னார். இப்பொழுது ஒரளவு மனம் நிம்மதியடைந்தது. ஏனெனில் ஏற்கனவே இருட்டிவிட்டது. மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தம் குடிகளை நோக்கி அடைக்கலமாகிக் கொண்டிருந்தனர். அவர் குறிப்பிட்ட பஸ் நிலையத்திற்கு சென்றபோது ஒரு பெண் நின்றார். அவரிடம் கதைக்கலாம் என்று அருகில் சென்றால் அவர் நம்மை அல்லது என்னைக் கண்டுப் பயந்து தூரத்தில் போய் நின்றார். ஒரு பஸ் வர சாரதியிடம் இது குறிப்பிட்ட இடத்திற்கு செல்லுமா எனக் கேட்க அவரும் ஓம் என்றார். நாமும் மகிழ்ச்சியுடன் ஏறிக் கொண்டோம். அந்த பஸ்சோ எல்லா இடமும் சுற்றி சுற்றி ஓடி மலை உச்சி ஒன்றிக்கு சென்று இறுதியாக ஓட்டோகாட் (otogard) என்ற தொலைதூர பஸ் நிலையத்திற்கு வந்தது. சாரதி நம்மிடம் பணம் வாங்கவில்லை. உள்ளே வந்து நாம் செல்லவேண்டிய பமாகல்லேற்கு பஸ் இல்லாததால் அதற்கு அருகில் உள்ள நகரமான டேனிசிலிக்கு (Denizli ) இரவு 12 மணிக்கு செல்கின்ற பஸில் இரண்டு சீட்டுக்களை வாங்கினோம். அதில் ஏறினால் அதிகாலை ஆறு மணிக்கு அங்கு செல்லும். பஸ் வரும் வரை என்ன செய்வது. இப்பொழுது ஏதாவது இரவிற்குச் சாப்பிட வேண்டும். நிலையத்திற்குள் இருந்த கடையில் பனிஸ் மட்டுமே இருக்க அதில் ஒன்றை வாங்கி தேநீருடன் சாப்பிட்டோம். இதன் பின் ஷேளி குட்டித் துக்கம் போட நான் எழுதிக் கொண்டிருப்போம் என நினைத்து எழுதுகின்றேன்.

img_7155பஸ் சரியாக 12.20க்கு வந்து 12.30 வெளிக்கிட்டது. பெரிய பஸ். தேநீர் பனிஸ் என்பன சாப்பிடத் தந்தார்கள். நாம் சாப்பிடவில்லை. உடனையே நித்திரைகொள்ள ஆரம்பித்தோம். இரண்டு மணித்தியாலங்களின் பின்பு இன்னுமொரு நகரத்தில் நிற்பாட்டினார்கள். பலர் ஏறினார்கள். நம் நித்திரை குழம்பியது. ஒருவாறு கஸ்டப்பட்டு சிறிது நித்திரை கொண்டபோது அதிகாலை 5.30 மணிக்கு டெனிசிலி வந்துவிட்டது என பஸ்சை நிற்பாட்டினார்கள். இங்கிருந்து பாமகடேலுக்குப் போக வேண்டும். ஒருவருக்கும் ஆங்கிலம் துப்பரவாகத் தெரியாது. இருப்பினும் ஒருவாரு தட்டுத் தடுமாறி நாம் பஸ் ஏற வேண்டிய இடத்தையும் அதற்கான இலக்கத்தையும் கண்டுபிடித்தோம். நாம் நின்ற அதே கட்டிடத்தில் கீழ் மாடிக்குச் சென்றால் 76ம் இலக்கத்தில் பஸ் நிற்கும். ஏழு மணிக்குத்தான் முதலாவது பஸ் வரும். அதுவரை அங்கிருந்த கதிரைகளில் நித்திரை கொண்டோம். ஏழு மணிக்கு கரையாட்டிற்கு (Karahayit) செல்கின்ற பசில் ஏறினோம். பஸில் போகும் பொழுதே தூரத்தில் பாமாகடேல் சல்பைற் மலை தெரிந்தது. ஏழரை மணிக்கு எல்லாம் பாமாகடேலுக்கு கொண்டு வந்து விட்டார்கள். நாம் தங்க வேண்டிய இடத்தின் விலாசத்தை எந்தக் கஸ்டமும் இல்லாமல் கண்டுபிடித்தோம். சந்தியிலும் திருப்பங்களிலும் தங்குமிடத்தின் பெயர் அம்புக்குறியுடன் போடப்பட்டிருந்தது. நாம் இன்று இரவிற்குதான் பதிவு செய்திருந்தோம். அதாவது மதியம் இரண்டு மணிக்குப் பின்புதான் நமக்கு அனுமதி. இப்பொழுது உள்ளே அனுமதிக்காவிட்டால் நம் சுமைகளை வைத்துவிட்டு சுற்றுவோம் அனுமதித்தால் நித்திரை கொள்வோம் எனத் தீர்மானித்தோம். ஆனால் அவர் ஆர்வமாக வரவேற்று அனுமதித்தார். நாம் நித்திரை கொண்டு 10 மணிபோல எழும்பினோம்.

img_7169காலை சாப்பாட்டை ஒரு கடையில் சாப்பிட்டுவிட்டு உப்பு(கல்சியம் படிந்த) மலையின் உச்சியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வெள்ளைப் பளிங்கு கற்களாக கல்சியம் படிந்திருந்தன. சில இடங்களில் வாய்க்கால் வெட்டி ஊற்றிலிருந்து வரும் தண்ணீரை நகரத்திற்கு அனுப்பினார்கள். சில இடங்களில் இத் தண்ணீரை மனிதர்கள் உருவாக்கிய தண்ணீர்த் தொட்டிகளுக்கும் அனுப்பினார்கள். இயற்கையாக உருவான தொட்டிகளில் தண்ணீர் வற்றிவிட்டது. எப்பொழுதாவது மாறி மாறி தண்ணீரை இந்த தொட்டிகளுக்கும் அனுப்புவார்கள் என அறிந்தோம்.  சூடான ஊற்றுத் தண்ணீரில் அதிகளவிலான கனிமங்கள் காணப்படுகின்றன. இந்த நீர் வடிந்து மலைகளினுடாக ஓடும் பொழுது வளியுடன் (காபனீர் ஓக்சைட்டுடன்) ஏற்படும் தாக்கத்தால் அதன் சூடு குறைகின்றது. இதிலிருந்த காபன்கள் வெளியேறியவுடன் கல்சியம் காபோனேட் கற்களாகப் படிகின்றது. இவ்வாறு படியும் பொழுது அவை சிறு சிறு குளங்களை உருவாக்கிச் செல்கின்றது. இந்தக் குளங்களில் ஊற்று நீரிலிருந்து வெளிவரும் சூடு நீர் ஒரளவு நேரம் தேங்கி நிற்கின்றது. இத் தேக்கங்களிலுள்ள கல்சியம் காபோனேட்டுகள் களியாக திரள்கின்றன.

img_7272மலையின் உச்சியில் பழங்காலத்தில் ஒரு நகரம், அரண்மனை மற்றும் நாடக அரங்குகள் என்பன இருந்தன. இந்த இடங்களில் ஏற்பட்ட பூகம்பங்களாலும் படையெடுப்புகளாலும் இவை சிதைந்து விட்டன. இப்பொழுது தொல்பொருள் ஆய்வு நிலையத்தினாலும் யுனோஸ்கோவினாலும் பராமரிக்கப்படுகின்றன. மலையின் உச்சியில் கிளியோபட்ரா குளித்த சிறிய குளம் மட்டும் 35 பாகை பரனைட்டில் இன்னும் சூடாக இருக்கின்றது. இதில் குளிப்பதற்கு பணம் கட்டி அனுமதி பெறவேண்டும். எனக்கு இந்தக் காசுக்கு எதாவது சாப்பிடவே விருப்பம். மேலே இருந்த கடையில் ஒரு பெண் தூருக்கிய ரொட்டியை சுட்டு விற்றார். இந்த ரொட்டிக்குள் உருளைக்கிழங்கு, சீஸ், மற்றும் கீரை என மூன்றையும் கலந்து அல்லது தனித்தனியே உள்ளடக்கித் தருவார்கள். சுடச் சுட உண்ண சுவையான உணவு.  மேலே போகும் பொழுது ஷேளி இந்த நீர் தாங்கிகளிலுள்ள சுண்ணாம்பை தனது உடம்புகளில் பூசிக் குளித்தார். நான் கீழே இறங்கும் பொழுது பூசினேன். அகோரி மாதிரி தெரிந்தேன். சிலர் என்னுடன் படம் எடுத்துக் கொண்டார்கள். இந்த இடம் ஒரு அதிசயம் மட்டுமல்ல இரம்பியமான இடமாகவும் இருந்தது.

img_7320மாலை ஐந்தே முக்கால் போல கீழே வந்தபோது வாசிலில் நாம் தங்கியிருக்கும் ஓட்டலின் உரிமையாளர் நின்று கொண்டிருந்தார். அவர் எங்களை சூபி நிகழ்வைப் பார்க்க அழைத்துச் செல்ல வந்திருந்தார். நாம் காலையில் விபரங்களை அறிந்து சொல்லுங்கள் என்று மட்டுமே கூறியிருந்தோம். ஆனால் அவர் அனைத்தையும் உறுதி செய்துவிட்டு நம்மை அழைத்துச் செல்ல வந்திருந்தார். எனக்கு இப்படியான ஒரு இடத்திற்கு அவசரமாக செல்ல விருப்பமில்லை. ஆனால் மொழி தெரியாமையினால் அரைகுறையான தெளிவற்ற உரையாடல்கள் இவ்வாறன சந்தர்ப்பங்களை உருவாக்குகின்றன. நான் மேலைக் கழுவிவிட்டு அவருடன் காரில் புறப்பட்டோம். அருகிலிருந்த கரையாட் கிராமத்தின் வாசலில் சுபி தேவாசி நடன இடம் இருந்தது. இத பற்றி விரிவாக பின்னர் எழுதுகின்றேன்.

img_7179இந்த நிகழ்வு முடிய நாம் தங்கியிருந்த கிராமத்திற்கு வந்து சாப்பிட்டுவிட்டு நித்திரைக்குச் சென்றோம். அடுத்த நாட் காலை எழும்பி சாப்பிட்டோம். சாப்பாடு சரியே இல்லை. அருகிலிருந்த பேக்கரிக்கு நடந்து சென்று இரண்டு பன்களை வாங்கிக் கொண்டு கிராமத்தின் வீதிகளில் நடந்தோம். ஒரிடத்தில் ஒரு வயது போன பெண் தன்னைச் சுற்றி கத்தரிக்காய் மற்றும் பெரிய சிவத்த மிளாகாய்களை பரப்பி வைத்துக் கொண்டு அடுப்பில் சுட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் போய் என்ன செய்கின்றீர்கள் என விசாரித்தோம். மிகவும் அன்புடன் வரவேற்ற அவர் கதிரைகளை இழுத்துப் போட்டு நம்மை இருக்கச் சொன்னார். தனக்குத் தெரிந்த மொழியிலும் சைகையாலும் தான் என்ன செய்கின்றார் என்பதை விளக்கினார். இவ்வாறு இந்த மரக்கறிகளை சுட்டு பதப்படுத்தி வைத்தால் குளிர் காலத்தில் சாப்பிட பயன்படுத்தலாம் என்றார்.

img_7344மொரக்கோ வீதிகளில் எல்லாம் தோடம்பழ மரங்கள் காய்த்து குலுங்கின. கிரேக்க வீதிகளில் எல்லாம் ஒலிப் மரங்கள். துருக்கி வீதிகளில் எல்லாம் மாதுழம்பழம் மரங்கள் காய்த்துக் குலுங்குகின்றன. பார்க்க மிக அழகாக இருக்குகின்றன. இங்கு மாதுழம்பழத்தில் செய்த தேநீரும் அறிமுகமானது. நல்ல சுவையும் நறுமணமும் ொண்டது. மாதுழம்பழங்களை கண்டால் எனக்கு உடன் நினைவுக்கு வருவது வித்துவான் மாமாவின் வீடுதான். இவரது வீடு கரவெட்டி கரணவாயில் இருந்தது. சிறு வயதில் அப்பாச்சியுடன் அவரது வீட்டுக்கு வயல் வரம்புகளால் நடந்து செல்வோம். இவர் அப்பாச்சியின் சகோதரியை திருமணம் முடித்தவர். அப்பாவிற்கும் வித்துவான் மாமாவிற்கு நல்ல உறவு இருந்தால் அவரது பெயரிலையே வித்துவான் அப்பாச்சி என்றும் அழைப்போம்.  இவர்கள் கரணவாயில் இருந்த வீடு செம் மண் நிலம். கிணற்றடியில் இருந்து வரும் தண்ணீர் எல்லாம் இங்குள்ள மரங்களுக்குச் செல்லும். அங்கு பல மரங்கள் வளர்ந்து செழித்து நின்றபோதும் என் நினைவில் நிற்பது மாதுளம் பழ மரம் தான். இங்குதான் முதன் முதலாக மாதுளம் பழ மரத்தைக் கண்டேன்.

shirley-phone-turkey-1130வீதியில் காய்த்துக் குலுங்கிய மாதுளம் மரங்களைப் பார்த்துவிட்டு ஒரு வீட்டில் நின்றவர்களிடம் புடுங்கவா எனக் கேட்டோம்.  அவர் தாராளமாகப் புடுங்களாம் எனக் கூறி ஒரு பையையும் தந்தார்.  அதையும் எடுத்துக் கொண்டு மதியம் நேற்றிரவு அழைத்த ஒரு சாப்பாட்டுக் கடைக்குச் சாப்பிட சென்றோம். சாப்பிட்டு விட்டு இந்தக் கிராமத்திலிருந்து அருகிலிருந்த டெனிசிலி நகரத்திற்குச் சென்று இன்னுமொரு பஸ் எடுத்து முக்கால் மணித்தியால பயண தூரத்திலிருந்த கார்கிலி (Kaklik) கிராமத்திற்குச் சென்றோம். இந்தக் கிராமத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு குகை (cave) இருந்தது. இங்கு செல்ல பஸ் இருக்கின்றதா என ஒரு இயந்திரங்கள் பழுதுபார்க்கும் கடையில் கேட்டோம். அவர் பஸ் இல்லை நடந்து தான் செல்ல வேண்டும் எனக் கூறி தனது உதவியாளருடன் அவரது வாகனத்தில் பயணிக்கும் படி அவரது மொழியில் கூறினார். அது மிகவும் துப்பரவில்லாத குப்பையான வாகனம். ஆனால் அவசரத்திற்கு உதவினார் என்ற நன்றியுடன் ஏறி இருந்தோம். shirley-phone-turkey-1131குறிப்பிட்ட இடத்தில் இறங்கும் பொழுது சாரதிக்கு சிறிது பணம் கொடுத்தோம் வாங்க மறுத்துவிட்டார். நம்மை இறக்கிவிட்டு மீண்டும் நாம் வந்த பாதையில் அவர் சென்றபோதுதான் தெரிந்தது நம்மை இறக்கிவிடுவதற்காகதான் வந்திருக்கின்றார் என. குகையைப் பார்த்துவிட்டு மீண்டும் போகும் பொழுது அந்தக் கடைக்குச் சென்று அவருக்கு நன்றி கூறி விடைபெற்றோம். அவர் வாருங்கள் வந்து தேநீர் அருந்திவிட்டுச் செல்லுங்கள் என அழைத்தார். இருளத் தொடங்கி மழையும் பெய்ய ஆரம்பித்ததால் நாம் நன்றி கூறிவிட்டு விடைபெற்றோம்.

இரவு டெனிசிலி வந்து அங்கிருந்து பாமக்கடலே கடந்து நேற்றிரவு சென்ற கிராமத்திற்கு மீள சென்றோம். img_7782அந்தக் கிராமத்திலிருந்த சூடு தண்ணீர் ஊற்றைப் பார்த்து முகம் கால் கைகளைக் கழுவிக் கொண்டு நடந்து திரிந்தோம். அனைவரும் நம்மை அபூர்வப் பொருட்களைப் பார்ப்பதைப் போல பார்த்தார்கள். நாம் மட்டுமே நமது நிற தோலுடன் அந்த கிராமத்தில் இருந்தோம். வீதியோரத்தில் பெண் ஒருவர் சோளம் சுட்டு விற்றுக் கொண்டிருந்தார்.  அவரிடம் ஒரு சோளத்திற்கு சொன்னோம். அருகில் எச்சியைப் தூப்பிவிட்டு வாயை கையால் துடைத்துவிட்டு அதே கையால் சோளத்தைப் பிரட்டிப் போட்டார். இனி வேண்டாம் என சொல்ல முடியாது. வாங்கி சாப்பிட்டோம். இலங்கை சோளத்தைப் போல சுவையில்லாது இருந்தது. சோளத்திற்குள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து இருந்தது. சாப்பிட சுவையே இல்லை. வீசிவிட்டோம். சிறிய மாலை சந்தை கூடும் இடம் இது. ஒரு இடத்தில் நிலத்தில் இருக்கைகள் விரித்து ரொட்டி சுட்டு விற்றார்கள். ரொட்டி சாப்பிட எதாவது கறிகள் இருக்கின்றதா என மிக கஸ்டப்பட்டு விசாரித்தோம். இல்லை என்ற பதில் வந்தது. என்ன செய்வது. ரொட்டிக்குள் உருளைக்கிழங்கும் முட்டையும் போட்டு இரண்டு ரொட்களை வாங்கி சாப்பிட்டோம். நன்றாக இருந்தது. போகும் வழியில் மாதுளம்பழ பானம் இருக்க அதையும் வாங்கி குடித்தோம். இன்று இரவு இப்படியாக முடிந்தது..shirley-phone-turkey-1139

தூருக்கி: முஸ்லிம் நாடுகள் தொடர்பாக நம்மிடமிருக்கும் கற்பிதங்களை உடைக்கின்றது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s