இரசியா : இதயம் விதைத்த இலக்கிய(ம்)வாதிகள் – பகுதி இரண்டு

IMG_5245டொல்ஸ்டோய் இறுதியாக வாழ்ந்த வீடு மாஸ்கோவில் கோர்க்கிப் பூந்தோட்டம் இருக்கின்ற இடத்தில் உள்ள மாஸ்கோ நதிக்கு அப்பால் இருக்கின்றது. ஒரு சிறிய வீதியால் நடந்து உயர்ந்த மரங்கள் இருந்த ஒரு சோலைக்குள் செல்ல வேண்டும். அங்கு இரண்டு மாடிக் கட்டிட வீடு ஒன்று உள்ளது. நாம் உள்ளே செல்வதற்கான பணத்தைக் கட்டிவிட்டு பார்ப்பதற்குச் சென்றோம். இந்த வீட்டை புனர்நிர்மாணம் செய்யும் வரை தற்காலிகமாக சிறியதொரு வீ்ட்டைக் கட்டி வாழ்ந்தார். அந்த வீடு அந்தக் காணியின் ஓரத்தில் இருந்தது. இதைப் பார்த்துக் கொண்டு பிரதான வீட்டிற்குச் சென்றோம். ஒவ்வொரு அறையிலும் அவருடன் தொடர்புபட்ட தகவல்களை பல மொழிகளில் எழுதி வைத்திருந்தார்கள். வாசலிருந்து உள்ளே சென்றால் முதலில் இருந்தது உணவு சாப்பிடுகின்ற மேசை இருக்கின்ற அறை. IMG_5254இவரது குடும்பம் சாப்பிடுகின்றபோது எடுத்த படம் ஒன்றும் இருந்தது. சுவரின் ஒரு பக்கத்தில் அவர் பயன்படுத்திய ஜெர்மன் மணிக்கூடு ஒன்று ஆடிக் கொண்டும் சத்தம் எழுப்பிக் கொண்டுமிருந்தது. ஒரு தடவை நான் அங்கிருந்த ஜன்னல் வழியாக உயர்ந்த மரங்கள் இருந்த அவரது தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மணிக்கூட்டிலிருந்து டிக் டாக் என்ற சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. வேறு எந்த சத்தமுமில்லை. அதிசயமாக அந்தக் கணங்கள் உல்லாசப் பயணிகள் ஒருவரும் சத்தம் போடவில்லை. இக் கணங்கள் எனது உடலில் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. சில கணங்கள் அசையாது வெளியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

IMG_5249சாப்பாட்டு அறைக்கு அருகில் அவர்களது படுக்கையறை, அதற்கப்பால் கடைசி மகளின் அறை, அப்படியே கீழ் நோக்கி செல்ல சமையலறையும் அவரது மகள்மாரின் அறைகளும் வரிசையாக இருந்தன. ஒரு மகள் ஓவியங்கள் வரைவதிலும் சிலைகள் வடிப்பதிலும் சிறந்து விளங்கியதுடன் தந்தையின் எழுத்துக்களை மீள எழுதியும் பிரஞ்சு மொழியில் மொழிபெயர்த்துமுள்ளார். இவரது படைப்புகளையும் பார்த்துக் கொண்டு மீள வாசலுக்கு வந்து மேலே சென்றோம். இங்கு விருந்தினர்கள் சந்திப்பதற்கான பெரிய அறை ஒன்று இருந்தது. இங்குதான் இவர்களின் குடும்ப ஒன்று கூடல்களும் மற்றும் மார்க்சிம் கோர்க்கி, அன்டன் செக்கோவ் போன்ற படைப்பாளர்களையும் சந்திக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. IMG_5258இதன் இடது பக்கத்தில் துணைவியாரின் தனிப்பட்ட அறை இருந்தது. வலது பக்கதிலிருந்த படிக்கட்டுகளால் நடந்து செல்ல அவர் கடைசியாக எழுதிய நாவல்களின் அறையும் அவர் 67வயதில் பழகி ஓடிய சைக்கிளும் இருக்கின்றன. இதையெல்லாம் பார்த்தபோது ஏனோ மனம் கனதியாக இருந்தது. வெளியே வந்து அவர் நடந்து திரிந்த தோட்டத்தில் சிறிது நடந்தோம். அழகாகப் பராமரிக்கப்படுகின்ற உயர்ந்து வளர்ந்த மரங்கள் மற்றும் மண் பாதைகள். இவை நம் மனதை இலகுவாக்கியன.

IMG_5695இந்த நினைவிடங்களைப் பார்த்தபின்பு டொல்ஸ்டோய் பிறந்து வளர்ந்த, நீண்ட காலமாக வாழ்ந்த நினைவில்லத்திற்கு செல்ல விரும்பினோம். இது மாஸ்கோவிலிருந்து 200 கி.மீ தூரத்திலுள்ள துவா நகரத்திற்கு அருகிலுள்ளது. இந்த நகரத்திலிருந்து 20 நிமிடங்கள் வாகனம் ஒன்றில் பயணம் செய்தால் யசனாயா பொல்யானா என்ற இடத்திற்கு செல்லலாம். இரண்டு ஏரிகளைக் கடந்தபின் வருகின்ற பஸ் நிலையத்தில் இறங்கி சிறிது தூரம் உள் நோக்கி நடக்க வேண்டும். மழை நன்றாகப் பொழிந்து கொண்டிருந்தது. இம் முறை மழையை நேர்மறையாக ஏற்றுக் கொண்டு நடந்தோம். இவரது இல்லம் உல்லாசப் பயணிகளுக்கான ஒரு இடமாக இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் இரசியர்கள் மட்டும் பல நூறு பேர் வருகின்றார்கள். அந்தளவிற்கு அவர் மீது மதிப்பு வைத்திருக்கின்றார்கள். இவர்களைக் குழுவாக அழைத்துச் சென்று இரசிய மொழியில் சகல தகவல்களையும் விளக்குகின்றனர். ஆங்கிலத்தில் கேட்பதற்கு பல மாதங்களுக்கு முன்பு அனுமதி பெறவேண்டும். நாம் வாசலில் அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்றோம். IMG_5709 - Copyஇதுவரை நாம் சென்ற நினைவிடங்களில் இந்த இடத்தில் மட்டும் தான் ஒருவரைத் தவிர அனைவரும் ஏதோ கடமைக்காக செயற்படுபவர்கள் போல இருந்தார்கள். முகத்தில் சிரிப்பில்லை. ஆர்வமாகவோ அன்பாகவோ வரவேற்கும் பண்போ உதவும் பண்போ இல்லை. மிகவும் இயந்திரத்தனமாக செயற்பட்டமை அந்த இடத்தை அவமரியாதை செய்வதாக இருந்தது. மழை மனிதர்களையும் இயற்கையையும் சுத்தம் செய்ய முயற்சித்தது. இயற்கை அதை ஏற்றுக் கொண்டது. மனிதர்களாகிய நாம் நம் உடல் உள அசுத்தங்களை சுத்தம் செய்ய மறுத்தவர்களாக மழையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொண்டு நடந்தோம்.

IMG_5730மண் பாதையின் அருகில் நீர் ஏரி அல்லது குளம் அதில் வாத்துகள் நீத்திக் கொண்டிருந்தன. மழை “சோ” எனக் கொட்டிக் கொண்டிருந்தது. பாதையின் இருபுறமும் வளர்ந்து உயர்ந்திருந்த மரங்களினுடாக நடந்து சென்றோம். ஒரளவு பெரிய வீடு. ஆனால் மாளிகையல்ல. இவரது தாய் மற்றும் தந்தை வழிக் குடும்பம் சிறிய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வாசலுக்குச் சென்றவுடன் மேல் மாடிக்குச் செல்லும்படி பணிக்கப்பட்டோம். அது சாப்பாட்டு அறை. பெரிய அறையில் நீண்ட சாப்பாட்டு மேசை. சுவரில் அவரதும் அவரது முதாதையர்களின் படங்களும் வரிசையாக மாட்டப்பட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக அவரது படுக்கையறை, வாசிக்கும், எழுதும் அறைகள் மற்றும் நூலகம் என்பன “ட” பட வரிசையாக இருந்தன. கீழே இறங்கி வந்து ஒரு வழியால் சென்றால் மகள்மாரினதும் வீட்டு வேலை செய்பவர்களினதும் அறைகள். இன்னுமொரு வழியால் சென்றால் அவரது வைத்தியரினதும் மகளினதும் அறைகள். இந்த அறைகளுக்குத்தான் அவர் கடைசியாக வந்து தனது மகளிடமும் வைத்தியரிடமும் தான் “யசனாயா பொல்யானா” வைவிட்டு வெளியேறுவதாகக் கூறிச் சென்றார். மேலும் இந்த அறையிலையே போரும் சமாதானமும் என்ற படைப்பு பிறப்பதற்கான விதைகள் இளைமைக் காலத்தில் முளைத்தன எனக் குறிப்பிடுகின்றனர். சக நினைவில்லங்களைப் போலல்லாது இந்த இடத்தில் நிறைய பார்வையாளர்கள் வந்திருந்ததுடன் அவர்களுக்கு குழு குழுவாக இரசிய மொழியில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தனர். இந்த சத்தம் அந்த இடத்தின் உணர்வுகளை உள்வாங்கி செல்வதற்குத் தடையாக இருந்தது.டொல்ஸ்டோயிற்கும் அவரது துணைவியாருக்கும் இறுதிக் காலங்களில் நடைபெற்ற விவாதங்கள் ஏற்பட்ட முரண்பாடுகள் இரு பக்கத்தினருக்கும் கேட்காததைப் போல பல விடயங்களை எம்மாலும் உள்வாங்க முடியவில்லை. ஆனால் இப் படைப்பாளர்களின் துணைவியார்கள் ஒவ்வொருவரும் உயர்ந்த மனிதப் பண்பு உள்ளவர்களே என்பதற்கு அவர்களது பொறுப்பான பணிகள் சாட்சியாக இருக்கின்றன.

IMG_5734வெளியே வந்தோம். மழை நிற்பதாகத் தெரியவில்லை. நாம் நமது பயணத்தை தொடர்ந்தோம்.  விவசாயிகளின் குழந்தைகளுக்கு அவர் நடாத்திய பள்ளிக்கூடத்தையும் பார்வையிட்டுக் கொண்டு அவரது சமாதியை நோக்கி நடந்தோம். மண் பாதையின் இரு மருங்கிலும் பச்சைப் பசேல் என்ற இடம். அப்பில் தோட்டங்கள். உயர்ந்த மரங்கள். ஒரு சோலையாகக் காட்சியளித்ததது. சமாதிக்கு சிறிது தூரம் நடக்க வேண்டும். சமாதியை அடைந்தபோது நாம் நாளைந்து பேர் மட்டுமே இருந்தோம். அமைதியான இடம் இது என வழியில் குறிப்பிடப்பட்டிருந்ததால் ஒருவரும் உரையாடவில்லை. மீறி உரையாடியவர்களும் குசு குசுத்தார்கள். இறுதிச் சடங்குகள் அவரது விருப்பப்படி எந்தவிதமான சமயச் சடங்குகளும் இல்லாது நடைபெற்றுள்ளது. நாம் ஒரு மண் மேட்டில் நின்றோம். சுற்றி வர வானுயர்ந்த மரங்கள். இதன் நடுவில் பச்சையாக ஒரு சமாதி. வெறுமனே மண்ணினால் செய்து அதன்மேல் பச்சைப் புற்களை (வெட்டி வெட்டி) வளர்க்கின்றனர். அருகில் பள்ளத்தில் சிறிய அருவி. இச் சமாதி (அவரது விருப்பப்படி) அவரைப் போல எளிமையாக இருக்கின்றது.

IMG_5736அனைவருள்ளும் ஒரு சோகம் குடிகொள்ள அந்த இடத்தில் அமைதியாக சிறிது நேரம் இருந்து அஞ்சிலி செய்தோம். நாம் நீண்ட தூரத்திலிருந்து வந்திருந்தால் நமது நிலையைப் பார்த்து மழையும் அழுதது. அல்லது நம்முடன் சேர்ந்து அதுவும் அஞ்சலி செய்தது. பின் மெதுவாக நடந்து வாசலை அடைந்தோம். மழை கொட்டிக் கொண்டிருந்ததால் வாசலில் முன்னால் இருந்த சாப்பாட்டுக் கடையில் ஏதாவது சூடாகச் சாப்பிட்டு தேநீர் குடிக்கச் சென்றோம். அங்கு அனைத்தும் இரசிய மொழியில் இருந்தது. பரிசாரகிகளுக்கும் (நன்றி மைக்கல்) ஆங்கிலம் தெரியாது. என்ன செய்வது? அருகில் இருந்த நான்கு இளம் பெண்களிடம் ஆங்கிலம் தெரியுமா எனக் கேட்டோம். கொஞ்சம் தெரியும் எனக் கூறி உதவி செய்தனர். நாம் நமது தெரிவுகளைக் கூற நமக்கு ஏற்ற உணவுகள் என்ன இருக்கின்றது என்பதைக் கூறினார்கள். இந்த மழைக்கு தேசிக்காயும் இஞ்சியும் கலந்து தேநீர் குடித்தால் நன்றாக இருக்கும்IMG_5737 என நினைத்து அதையும் கேட்டோம். பரிசாரகிகள் வரும்வரை இருந்து நமக்கான உணவுகளை அவர்களிடம் உறுதி செய்து விட்டே அந்தப் பெண்கள் சென்றார்கள். அதுவரை அவர்களுடன் உரையாடினோம். மாஸ்கோவில் இருந்தபோதும் இப்பொழுதுதான் முதன் முறையாக வருவதாகவும் மிகவும் இரம்மியமான இடம் என்றார்கள். நாம் வேறு எங்கு சென்றோம் என விசாரித்தார்கள். டோஸ்டோவோஸ்கியின் இடத்திற்கும் சென்றோம் எனக் கூறியபோது ஒரு பெண் உணர்ச்சிவசப்பட்டு கண்களில் கண்ணீர் வராத குறையாக அவரைப்பற்றி உரையாடினார். டோல்ஸ்டோயைவிட அவரின் மீது அவருக்கு கொஞ்சம் மதிப்பு அதிகமாக இருந்தது. செயின் பீட்டர்ஸ்பேர்க்கிலுள்ள அவரது நினைவில்லத்திற்கு செல்வது தனது கனவு என்றார்.

பெரும்பாலான இரசியர்கள் மற்றும் (சோவியத் நாடுகளிலில் இருந்த) பாடசாலைகளில் இந்த இலக்கியங்களை பிடிப்பில்லாமல் படிப்புக்காக கட்டாயமாக கற்றுள்ளார்கள். கற்பிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் காலோட்டத்தில் இவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து இவர்கள் இப் படைப்பாளர்களுக்கும் அவர்களது படைப்புகளுக்கும் மதிப்பளிக்கின்றனர்.

IMG_5753நாம் சந்தித்த மற்றும் கண்ட இரசிய மக்கள் ஒரு வகையான இறுக்கமான மனிதர்கள். இதற்கு இவர்களின் மூடுண்ட கடந்த காலம் காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த மனிதர்களிடம் சிறிது நெருங்கிச் சென்று பழகினால் அவர்கள் தம் இதயம் திறந்து அன்பைப் பொழிகின்றார்கள். நாம் இன்னுமொரு இடத்தில் சந்தித்த பெண் கூறினார் இவ்வாறு இரசியர்களிடம் அன்பு பொங்கி வழிவதற்கு காரணம் இரசிய படைப்புகள் என்றார். இலக்கிய படைப்புகள் இவர்களிடம் அன்பை விதைத்துள்ளன. ஆகேதான் இந்தப் படைப்பாளர்களை இன்றும் போற்றி மரியாதை செலுத்துகின்றனர். இதுதான் இலக்கியத்தின் பணி. சிறந்த இலக்கியங்கள் காலம் கடந்தும் வாழும் என்பதற்கு இவை சான்றுகள்.

இந்த நினைவில்லங்களுக்கான பயணங்கள் மீண்டும் இவர்களது படைப்புகளை வாசிக்கத் தூண்டுகின்றன. இறுதியாக இப் படைப்பாளர்களுக்கும் இரசிய இலக்கியத்திற்கும் தந்தையான புஸ்கினின் நினைவில்லத்திற்கு மற்றும் பலரின் சமாதிகளுக்கும் செல்ல முடியாமை மனவருத்தமாக இருந்தது. இருப்பினும் இரசியாவிற்கான நமது பயணம் திருப்பதியானதாக இருந்தது.IMG_5687

இப் படைப்பாளர்களின் நினைவில்லங்களை ஒளிப்படங்களாகவும் இங்கு அழுத்துவதன் மூலம் பார்வையிடலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s