இரசியா : இதயம் விதைத்த இலக்கிய(ம்)வாதிகள் – பகுதி ஒன்று

இரசியா : இதயம் விதைத்த இலக்கிய(ம்)வாதிகள் – பகுதி ஒன்று

படைப்(பாளிகள்)புகள் விதைத்த அன்பு!

IMG_4565இரசியாவில் நாம் கட்டிடங்களைப் பார்ப்பதற்கு அதிகம் முக்கியத்துவமளிப்பதில்லை என முடிவு செய்தோம். மாறாக மனிதர்களின் உள்ளே சென்று மேலும் பல விடயங்களை அறிவதில் ஆர்வமாக இருந்தோம். இதற்கு இரசியாவின் இதயங்களுக்குள் நூழைவதே சரியான வழி. இரசியாவில் நடந்த அரசியல் நிகழ்வுகள் (அதை முன்னெடுத்தவர்கள்) நம்மில் (அல்லது என்னில்) ஒரளவு பாதித்ததைப் ஏற்படுத்தின(னார்கள்) என்றால் மிகையல்ல. இதேபோல நம்மைப் பாதித்தவர்கள் இரசிய இலக்கியப் படைப்பாளர்களும் அவர்களது படைப்புகளும். ஆகவே இவர்களது நினைவு இல்லங்களுக்குச் செல்வோம் என்பது நமது நோக்கமாக இருந்தது..

IMG_5004முதலாவதாக செயின்பீட்டர்ஸ்பர்க்கில் இருந்த டொட்சவோட்சிகியின் இல்லத்திற்கு சென்றோம். இந்த இல்லத்தைக் கடந்த மூன்று நாற்களாக இங்கு இருந்தபோது கடந்து சென்றிருக்கின்றோம். நாம் தங்கியிருந்த இடத்திலிருந்து அரை மணித்தியால் நடை தூரத்தில்தான் இருக்கின்றது. ஆனால் சதாரணக் கட்டிடங்கள் போல இருந்தாலும் தகவல்கள் பெரும்பாலும் இரசிய மொழியில் இருந்தமையாலும் கவனிக்கத் தவறிவிட்டோம். இவர் வாழ்ந்த வீடு இருந்த வீதிக்கும் அதன் அருகில் இருக்கின்ற நகர சுரங்கப் புகையிரத நிலையத்திற்கும் இவரது பெயரையே வைத்திருக்கின்றார்கள். புகையிரத நிலையத்திற்கு அருகில் இவரது பெரிய சிலை ஒன்றும் உள்ளது. இதை எல்லாம் கடந்து இரண்டு வீதிகள் சந்திக்கும் ஒரு மூலை வீட்டை நமது தொலைபேசி கூகுள் வரைபடம் காட்டியது. கதவைத் திறந்து உள்ளே சென்றோம்.

IMG_5091வாசலில் உள்ளே செல்வதற்கான அனுமதிச் சீட்டுக்களை விற்றார்கள்.  அவரது நூல்கள் இரசிய மொழியிலும் மற்றும் அவரது முகத்தை ஓவியமாக வரைந்த ஆடைகளும் விற்பனைக்கு இருந்தன. ஒருவருக்கு 200 ரூபில்களை வழங்கி அனுமதிச் சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டு கீழ் தளத்திலிருந்து படிகளில் ஏறி முதல் தளத்திற்குச் சென்றோம். இங்கும் ஒருவர் நூல்களையும் அவரது முகம் பதிவு செய்யப்பட்ட ஆடைகளையும் விற்பனைக்கு வைத்திருந்தார். நமது அனுமதிச் சீட்டுகளை பரிசோதித்துவிட்டு அதற்கு மேலே உள்ள தளத்திற்கு செல்லச் சொன்னார்கள். இந்த அருட்காட்சியகம் தொடர்பாக பல மொழிகளில் விளக்குகின்ற தொலைபேசி போன்ற உபரணம் ஒன்றை வைத்திருந்தார்கள். நாம் மேலும் 100 ரூபில்களை வழங்கி அதையும் பெற்றுக் கொண்டு படிகளில் ஏறினோம்..

IMG_5017வலது பக்கமாக இருந்த வாசலில் இலக்கம் ஒன்று என குறிக்கப்பட்டிருந்தது. நமது உபகரணத்தில் அந்த இலக்கத்தை அழுதிய போது அது அந்த அறை தொடர்பான தகவல்களை ஆங்கிலத்தில் கூறியது. அவர் பயன்படுத்திய குடைகள், கைப்பிடி, தொப்பி என்பன நம்மை வரவேற்றன. இதைக் கடந்து மற்ற அறைக்கு சென்றோம். இதுவே அவரது வாசிப்பறையும் தனது படைப்புகளை உருவாக்கிய இடமுமாகும். அவர் பயன்படுத்திய பென்சில்கள் பேனைகள் போன்ற உபகரணங்களும் அவரது குழந்தைகள் இருவது படங்களும் இருந்தன. இவர் எழுதிய கையெழுத்துப் பிரதிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மிக எளிமையான அறை.

IMG_5042அடுத்த அறை அவரது துணைவியார் அனாவினது. அவர் தனது வாழ்நாட்கள் முழுவதையும் தனது கணவருக்காகவே அர்ப்பணித்ததாக குறிப்பிடுகின்றார்கள். குழந்தைகளை வளர்ப்பது, வீட்டை நிர்வகிப்பது மட்டுமல்ல அவரது படைப்புகளின் பிரதிகளை தட்டச்சு செய்வது மீண்டும் திருத்தங்கள் செய்த பின் அவற்றைத் தட்டச்சு செய்வது, பதிப்பிடுவது, விற்பனை செய்வது என பல்முனைகளில் தனது பங்களிப்புளை அர்ப்பணித்துள்ளார். டொட்ஸ்வோஸ்கியின் மரணத்தின்பின் இவரைச் சந்தித்த டொல்ஸ்டோய் உங்களைப் போன்ற ஒரு மனைவி பல இரசிய படைப்பாளர்களுக்கு கிடைத்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் என கூறியுள்ளார். டொஸ்டோவோஸ்கியும் தனது இறுதிப் படைப்பை தனது துணைவியாருக்கே சமர்ப்பணம் செய்து அவரது பங்களிப்பை அங்கீகரித்தாக கூறுகின்றார்கள். டொஸ்டோவோஸ்கியின் மரணத்தின் பின்பு அவருடன் வாழ்ந்த நினைவுகளை ஒரு படைப்பாக துணைவியார் எழுதி வெளியீட்டுள்ளார். இது ஒரு முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகின்றது.

IMG_5033இதன் தொடர்ச்சியாக சாப்பாட்டு அறை, விருந்தினர்களை சந்திக்கின்ற அறை, மற்றும் சிறிய நூலகமும் இருந்தன. இந்த அறைகளில் இவரது குடும்பங்களின் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து வெளியேறி எதிர்புறத்திலுள்ள அறைக்குச் சென்றோம். அங்கு அவரது வாழ்வுடன் தொடர்புபட்ட அனைத்துப் படங்களும் அவை தொடர்பான தகவல்களும் அழகாகப் பதிவு செய்யப்பட்டு கண்ணாடிகளுக்குள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இவர் புரட்சிக்கு முந்திய அரசினால் கட்டாய இராணுவத்திற்கு சேர்க்கப்பட்டது அதில் அவருக்கு ஆர்வமில்லாமை மற்றும் அதிலிருந்து வெளியேறி அரச அலுவலகம் ஒன்றில் குமாஸ்தாவாக பணியாற்றியது என்பவற்றையும் அரசுக்கு எதிராகப் “பயங்கரவாத” (புரட்சிகர) நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பதற்காக சிறை வைக்கப்பட்ட தகவல்களும் நிறம்பியிருக்கின்றன.

IMG_5058ஒரு அறையில் சிறிய மேசை ஒன்றுள்ளது. அதில் இவர் குடித்ததாக கூறப்படுகின்ற சிக்கரட்டும் அதன் பெட்டிகளும் உள்ளன. இவரது குடிப்பழக்கம் இவரது மரணத்திற்கு முக்கியமான காரணமாகும். இவரது மரண நாள் அன்று இவரது மகள் புகையிலைப்பெட்டி ஒன்றின் மீது “இன்று பப்பா இறந்த நாள்” என எழுதியுள்ளமையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவரது சமாதிக்கு இந்த இடத்திலிருந்து பஸ்சில் அரை மணி்த்தியாலங்கள் பயணம் செய்யவேண்டும். அதற்கான நேரம் கிடைக்காமை வருத்தமாக இருக்கின்றது. இங்கிருந்து வெளிக்கிட்டு அனா அக்மதேவாவின் நினைவிடத்திற்கு நடந்து சென்றோம்.

IMG_4871அனா அக்மதேவா வாழ்ந்த இடம் செயின் பீட்டர்ஸ்பேர்கிலுள்ள பிரதான வீதி ஒன்றில் அமைந்துள்ள ஒரு கட்டித்தின் உள்ளாக செல்லும் பொழுது வருகின்றது. சுற்றிவர கட்டிடங்களும் நடுவில் பூந்தோட்டங்களும் உள்ள பகுதியில் ஒரத்தில் காணப்படுகின்ற சிறிய தொடர்மாடிக் கட்டிடம் இவர் வாழ்ந்த இடமாகும். பூந்தோட்டம் உயர்ந்த மரங்களைக் கொண்ட அமைதிப் பூங்காவாக இருக்கின்றது. இங்கு செம்பினால் செய்யப்பட்ட அவரது சிலை ஒன்றும் இவர் வழமையாக இருக்கின்ற மரத்திலான இருக்கை ஒன்றில் செம்பில் வடிக்கப்பட்ட கவிதையும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதை எல்லாம் பார்த்துக் கொண்டு அனுமதிச் சீட்டுப் பெறும் இடத்திற்குச் சென்றோம். ஒருவருக்கு 100 ரூபில்களைப் பெற்றுக் கொண்டு அனுமதிச் சீட்டுக்களைத் தந்தார்கள். நாம் இரண்டாவது மாடியிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்றோம்.

IMG_5166 அனா அக்மதேவாவின் மேற்குளிராடை, குடை, தொலைபேசி, முகம் பார்க்கும் நிழற் கண்ணாடி, பழைய இறங்குப் பெட்டி என்பன முதல் அறையில் நம்மை வரவேற்றன. இதை கடந்து சென்றபோது அவரது படுக்கையறை. நீண்ட காலமாக தனிமைச் சிறையில் தானாக அடைபட்டுக்கிடந்த இடம் இது. இந்தறையில் மிகக் குறைவான பொருட்களே காணப்பட்டன. ஒரு மேசையில் அவரதும் உறவினர்களினதும் சில படங்கள். இன்னுமொரு மூலையில் இருவர் மட்டும் இருந்த உரையாடக் கூடியவாறான இரண்டு கதிரைகளும் ஒரு சிறிய மேசையும் காணப்பட்டன. தன்னைச் சந்திக்க வருகின்றவர்களுடன் இருந்து உரையாடும் இடம் எனக் குறிக்கப்பட்டிருந்தது. இதற்கு அடுத்த அறையில் சிறிய நூலகம். ஒரு மேசை. அதில் அவர் பயன்படுத்திய பொருட்கள் காணப்பட்டன. சுவரில் சில படங்கள். மேசையில் அவர் வாசித்த நூல்கள். அலுமாரியில் சேகரித்த நூல்கள் காணப்பட்டன. அதனருகில் ஒரு புத்தர் சிலையும் இருந்தது. ஒரு பழங்காலத்து கமராவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகி்ல் நீண்ட இருக்கை ஒன்று. ஒவ்வொரு அறையும் ஒவ்வொறு விதமான நிறத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதற்கு அடுத்த அறை உணவு உட்கொள்கின்ற அறை. அந்த மேசையில் இவர் சேகரித்த படங்கள் கொண்ட அல்பம் ஒன்று. சுவரின் அருகில் பழைய இசை கேட்கும் உபகரணம்.

IMG_5158இந்த அறைகளைக் கடந்து சென்றபோது ஒரு நீண்ட அறை. இது சமையலறைக்குச் செல்கின்ற பகுதியை இணைத்திருந்தது. இப் பகுதியில் இவரது நூல்கள் எழுத்துப் பிரதிகள் மற்றும் சிறு சிலைகள் என்பன ஒழுங்குபடுத்தப்பட்டு காண்ணாடியால் அடைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இதனூடாக சமையலறைக்குச் செல்கின்ற சிறு ஓடையில் பழைய புத்தகங்களை அவர் கட்டிவைத்தவாறே வைத்துள்ளார்கள். இதன் அருகில் அவர் பயன்படுத்திய பழைய பொருட்கள். பெட்டிகள் அப்படியே இருக்கின்றன. இவற்றைக் கடந்து சமையலறைக்கு வந்தபோது அங்கு பயன்படுத்திய சமையற் பாத்திரங்கள், அடுப்பு, சிறிய ரேடியோ என்பவற்றிலிருந்து கை துடைத்த துணிகளைக் கூடப் பாதுகாக்கின்றனர். இவற்றை எல்லாம் பார்க்கின்றபோது அவர் எப்பொழுது பயணிப்பதற்கான தயார் நிலையில் இருந்திருக்கின்றார் என்பதை உணர முடிந்தது. தனது நண்பரிடம் ஐந்து ரூபில்கள் கடன் தரும்படி எழுதி அவரது அறையின் கதவில் ஒட்டிய துண்டு ஒன்றை இப்பவும் அப்படியே பாதுகாப்பாக வைத்திருக்கின்றார்கள். நம்பிக்கையான கனவுக்கும் சிதறுண்ட நம்பிக்கைகளுக்கும் இடையில் அலைந்த ஒரு படைப்பாளியின் சாட்சியாக இவை இருக்கின்றன. இங்கிருந்து வெளியே வந்தபோது மனதில் வெறுமையும் அவநம்பிக்கையும் சூழ்ந்திருந்தது. அதிகாரங்கள் படைப்பாளர்களை காலம் காலமாக எவ்வாறு கட்டிப் போடுகின்றது என்பது மனக் கண்ணில் படமாக ஓடியது.

IMG_5238மாஸ்கோவிலுள்ள மாயாகோவோஸ்கியின் நினைவில்லத்திற்கு மதியமளவில் சென்றோம். அது நகரத்தில் முக்கியமான ஒரு சந்தியில் இருந்தது. அந்த இடத்திற்கு சென்றபோது அதிலிருந்தவர்கள் ஏதோ கூறினார்கள். எங்களுக்கு விளங்கவில்லை. அதன் முன்னால் படிக்கட்டுகளில் இருந்த வயோதிபர்களில் ஒருவர் இது கடந்த இரண்டு வருடங்களாக முடியிருக்கின்றது என்றார். புனரமைப்பு செய்கின்றார்களாம். இவரின் பின்னால் மாயோகோவோஸ்கியின் நினைவில்லத்தில் நடந்த பழைய செய்திகள் ஒட்டப்பட்டிருந்தன. அதனைப் படம் பிடித்துக் கொண்டு திரும்பினோம். நினைவில்லத்திற்கு அருகில் கட்டிடங்களுடன் கட்டிடமாக அவரது சிலை ஒன்றும் இருந்தது. அதையும் படப்பெட்டியினுள் உள்வாங்கிக் கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பினோம்.

IMG_5370ஒரு நாள் காலை மார்க்சிம் கோர்க்கியின் நினைவிடத்திற்குப் போகலாம் என தீர்மானித்தோம். தொலைபேசியில் கூகுள் வரைபடத்தின் உதவியுடன் கிரம்ளின் செந்சதுக்கத்திலிருந்து அந்த இடத்தை நோக்கிச் செல்வதற்கான வழியைக் கண்டுபிடித்துவிட்டு அரை மணித்தியாலங்களுக்கு மேலாக நடந்தோம். அவரது வீட்டுக்கு அருகில் வந்தபோது அவரது செதுக்கிய படம் ஒன்று சுவரில் இருந்தது. ஆனால் வாசல் கதவுகள் சங்கிலிகளால் பூட்டியிருந்தன. அந்த வழியால் வந்த ஒருவரிடம் இந்த விலாசம் சரியானதா என நமது தொலைபேசி விலாசத்தையும் சுவரிலிருந்த விலாசத்தையும் சுட்டிக் காட்டினோம். அவர் இரண்டும் ஒரே விலாசம் என்றார். இணையத்திலும் இதே விலாசத்தைக் காட்டியதுடன் திறந்திருப்பதாகவும் கூறியது. சரி வீட்டைச் சுற்றிப் பார்ப்போம் என நடந்தோம். வீடு இருந்த வளவின் இன்னுமொரு மூலையில் வாசல் ஒன்று திறந்திருந்தது. அதன் வழி பயணித்தோம்.

IMG_5382வீட்டினுள்ளே வாசலில் இருந்தவர் நம்மை சிரித்த முகத்துடன் வரவேற்றார். வழமையாக இவ்வாறான நினைவில்லங்களில் 100 -350 ரூபில்களை வரை அறவிடுகின்றார்கள். இந்த நினைவில்லத்தைப் பார்ப்பதற்கு பணம் அறவிடுவதில்லை. விரும்பியதை அன்பளிப்பாக கொடுக்கலாம். ஆனால் படம் பிடிப்பதற்கு கட்டணம் உண்டு என்றார். நாம் அதற்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு வீட்டின் தளங்களைப் பாதிக்காத வகையில் பாதணிகளுக்கு பாதுகாப்பு கவசத்தை போட்டு ஒவ்வொரு அறையாக பார்வையிட்டோம். அறைகளில் இருக்கின்ற பொருட்கள் தொடர்பான விபரங்களை பல மொழிகளில் எழுதி வைத்திருக்கின்றார்கள். முதலாவது அறை அவரது உத்தியோகபூர்வ அறை. பல எழுத்துப் பிரதிகள் மற்றும் கடிதங்கள் என இருந்தன. அடுத்தது அவரது படுக்கையறை. இதைக் கடந்து சென்றபோது அவரது எழுதும் அறை. இங்கு எழுத்துப் பிரதிகள் மற்றும் அவர் பயன்படுத்திய மூக்குக்கண்ணாடி, பேனாக்கள், கலர் பென்சில்கள் எனப் பல இருந்தன. மேலும் டொல்ஸ்டோய் அன்பளிப்பாக வழங்கிய மரக் கதிரைகளும் இருந்தன.

IMG_5402இதைக் கடந்து வந்தபோது அவர் பயன்படுத்திய குளிர்கால நீளமான ஆடையை வைத்திருந்தார்கள். அடுத்த அறை அவரது நூலகம். பல நூல்கள் இருந்தன. ஆனால் அவற்றிக்கு அருகில் நாம் செல்லமுடியாது. இந்த நூல்களில் எல்லாம் அவரது குறிப்புகள் இருப்பதாக குறிபிடப்பட்டிருக்கின்றது. பெரும்பாலும் தனது சேகரிப்பிலிருந்த நூல்களை நண்பர்களுக்கும் நூலகங்களுக்கும் வழங்குவாராம். நூலகத்திற்கு அருகிலிருந்த அறையில்  நண்பர்களையும் விருந்தினர்களையும் சந்திப்பார். ஒவ்வொரு காலங்களில் சந்தித்தவர்களின் படங்களையும் வைத்திருக்கின்றார்கள். நூல்களை வாசி்ப்பது இவரது பிரதான பணி எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த வீடு இவருக்கு சொந்தமானதல்ல. தனக்குச் சொந்தமாக எதையும் வைத்திருக்க இவர் விரும்பவில்லை. ஆகவே சோவியத் அரசு இவரது இலக்கியப் பங்களிப்பை மேலும் பெருவதற்காக ஒரு வீட்டை வழங்கியிருந்தது. அந்த வீடே இது.

IMG_5467அன்டன் செக்கோவின் நினைவு இல்லம் கார்க்கியின் நினைவில்லத்திலிருந்து மேலும் பத்து நிமிடங்கள் நடக்க வந்தது. மதிய உணவின் பின்பு மாலை நான்கு மணிபோல இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். ஒருவருக்கு 150 ரூபில்கள் அனுமதிச் சீட்டு மற்றும் படம் எடுக்க 100 ரூபில்கள் கட்டிவிட்டு உள்ளே சென்றோம். சகல நினைவிடங்களிலும் இருந்ததைப் போல அவர் பயன்படுத்திய உபகரணங்கள், பிரதிகள், நித்திரை கொண்ட, வேலை செய்த அறைகள் மற்றும் அவரது துணைவியாரின் அறை என இரண்டு மாடிகளில் இருந்தன. மேல் மாடியில் சிறிய அரங்கமும் இருந்தது. தனது காலத்தில் மேடையேற்றிய இவரது நாடகங்களின் சுவரொட்டிகளையும் வைத்திருந்தார்கள்.  இவர் ஒரு வைத்தியராக இருப்பதனால் மனிதர்களின் பல பிரச்சனைகளையும் அறியக்கூடியவராகவும் அதைக் கலைவடிமாக மாற்றக்கூடியவராகவும் இருந்துள்ளார். இவரது துணைவியாரும் இவருக்கு முக்கியமான பங்களிப்பை செய்துள்ளதுடன் ஒரு ஓவியராகவும் இருந்து தனது துணைவரின் வாழ்வின் முக்கியமான சில அம்சங்களை ஓவியமாக்கியுமுள்ளார்.

IMG_5560டொல்ஸ்டோய், அன்டன் செக்கோ மற்றும் மார்க்சிம் கார்க்கி மூவரும் சம காலத்தவர்கள். வயது வேறுபாடுகள் இருந்தபோதும்  மூவரும் ஒருவர் மீது ஒருவர் அதிகமான மதிப்புகளை வைத்திருந்தார்கள் என்பதை அறியக் கூடியதாக இருந்தது. ஒவ்வொருவரது வீட்டிலும் மற்றவர்கள் வருகைதந்த படங்கள் மற்றும் அன்பளிப்பு செய்த பொருட்களும் இருந்தன. ஒரு முறை அன்டன் செக்வோவும் டொல்ஸ்டோய் மட்டும் சந்தித்த படத்தை இவர்களது நண்பர் ஒருவர் எடுத்து அதில் மார்க்சிம் கோர்க்கியையும் நடுவில் செயற்கையாக இணைத்து வெளியிட்டுள்ளார். அந்தளவிற்கு மூவரும் சந்திக்கும் படங்கள் மிகவும் வரவேற்பை பெற்றதாகவும் நல்ல விலைக்கும் போனதாக குறிப்பிடப்படுகின்றன. இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அன்டன் செக்வோவும் டொல்ஸ்டோயும் குடும்பத்தினருடன் சந்தித்த படத்தை ஒருவர் எடுத்து அதிலிருந்த குடும்பத்தினரை அழித்துவிட்டு இவர்கள் இருவர் மட்டும் சந்தித்ததைப் போல வெளியிட்டுள்ளார். இந்தளவிற்கு இந்த இலக்கிய படைப்பாளிகளின் சந்திப்புக்கள் அன்றை இரசிய சமூகத்தில் முக்கியத்துவமுள்ளவையாக விளங்கியுள்ளன. மேலும் அவர்கள் மீது அதீத மதிப்பை இன்றும் வைத்துள்ளார்கள் என்பதை குறிப்பாக டொலஸ்டோய் வாழ்ந்த இரண்டு வீடுகளுக்குச் சென்ற போது காணக்கூடியதாக இருந்தது.IMG_5562

நாளை டொல்ஸ்டோயின் வீட்டிற்கான பயணப் பதிவுகள்.
இது தொடர்பான ஒளிப்படங்களைப் பார்க்க இங்கே அழுத்தவும்.

Advertisements

One thought on “இரசியா : இதயம் விதைத்த இலக்கிய(ம்)வாதிகள் – பகுதி ஒன்று

  1. Pingback: இரசியா: மீண்டும் பழமையை நோக்கி… | a journey towards sun/சூரியனை நோக்கி ஒரு பயணம்___

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s