இரசியா – இரும்புத்திரைக்குள் ஒரு பயணம்

இரசியா – கனவு பூமி- இரும்புத்திரைக்குள் ஒரு பயணம்

IMG_41551987ம் ஆண்டு உயர்தர பரிட்சை முடிந்தபின் அரசியலில் ஈடுபடுவது என முடிவு செய்து ஈரோசின் மாணவர் இயக்கமான கைசில் இணைந்தேன். இணைந்த காலத்திலிருந்து அங்கிருந்த ஆவணக் காப்பகத்திலுள்ள நூல்களை எடுத்து வாசிப்பதே எனது பிரதான செயற்பாடானது. காலை, மாலை, இரவு என தொடர்ந்து வாசித்த காலங்கள். பெரும்பாலும் இரசிய நாவல்களும் வரலாறுகளும் ஆகும். கார்ல் மார்க்சின் வரலாற்றிலிருந்து லெனினின் வரலாறுவரை கிட்டத்தட்டப் பாடமாக்கியதைப் போன்று வாசித்தேன். மார்க்சிம் கோர்க்கியி்ன் தாய் நாவலை மட்டும் மூன்று தடவைகளுக்கு மேல் வாசித்திருப்பேன். இப்படிப் பல நாவல்கள். இந்த நாவல்களில் வந்த பல மனிதர்களும் அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளும் ஆழ்மனதில் பதிவாகின. அவர்களும் அவர்களைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களும் வாழ்ந்த மண்ணும் அந்த மண்ணில் ஓடிய ஆறுகளும் உயர்ந்த மரங்களும் காடுகளும் என் கனவுலகில் ஒவ்வொரு நாளும் சஞ்சரித்தன. இதை எல்லாம் நேரில் பார்க்கச் செல்வேன் என்ற நோக்கத்தில் ஒரு நாளும் இவற்றை வாசிக்கவில்லை. நமது தமிழ் தேச விடுதலைக்கும் சமூக மாற்றத்திற்கும் எவ்வாறு இந்த அனுபவங்களையும் அறிவுகளையும் உள்வாங்கிப் பங்களிக்கலாம் என்பதே பிரதான நோக்கம். ஆனால் காலம் மாறியது. சோவியத் யூனியன் உடைந்தது. அவர்களது கடந்த காலம் தொடர்பான பல கேள்விகள் விமர்சனங்கள் எழுந்தன. நமது நாட்டு யதார்த்த அரசியலிலிருந்து நானும் ஒதுங்கிச் சென்றதுபோல அவர்களுடன் வாழ்ந்த எனது கனவுலகமும் மெல்ல மெல்ல மங்கிச் சென்றது. ஆனால் இன்று அந்தக் கனவுலகை நேரில் தரிசிக்கும் காலம் ஒன்று வந்தது கனவா நனவா என நம்பமுடியாதுள்ளது. இரசியாவின் முன்னால் லெனின்கிராட்டி (செயின் பீட்டர்பேர்க்) லிருந்து இப் பதிவை எழுதுவது கனவல்ல.  மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது.

IMG_5675நேற்றுக் காலை பின்லாந்தின் கிராமத்திலிருந்து அங்கு வாழ்ந்த பின்லாந்து பெண்ணின் காரில் ஹெல்சிங்கி நகருக்கு வந்தோம். இரசிய விசா நிலையத்தில் ஒரு பிரச்சனையுமில்லாது விசாவைப் பெற்றுக்கொண்டு இந்திய உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு மாலைவரை கணணியுடன் அந்த உணவகத்திலையே இருந்தோம். இரசிய நாட்டிற்கு செல்வதற்கு இரவு 10.30 மணிக்குதான் பஸ் உள்ளது. செயின் பீட்டர்ஸ்பேர்க் பின்லாந்திற்கு அருகில் உள்ள நகரம். இந்த நகரத்திற்கு செல்வதற்கு விமானச் சீட்டும் புகையிரதச் சீட்டும் விலை மிக அதிகமாக இருந்ததால் பஸ்சில் பயணம் செய்யத் தீர்மானித்தோம். இது மிக மலிவாக இருந்தது. இந்த மூன்றில் ஒன்றில் மலிவாகப் பயணிப்பதற்கு சில காலத்திற்கு முன்பு திட்டமிட்டு செயற்பட்டு பதிவு செய்திருந்தால் மலிவான பயணச் சீட்டுகளைப் பெற்றிருக்கலாம். ஆனால் அது சாத்தியப்படவில்லை. இரவுச் சாப்பாட்டை ஐந்து ஈரோ பீட்சாவுடன் முடித்துக் கொண்டு காம்பி (Kamppi) நிலையத்தில் போய் பஸ்சிற்காக காத்திருந்தோம்.

IMG_5713பஸ் 10.20விற்கு வந்து பயணிகளை ஏற்றி சரியாக 10.30க்குப் பயணமானது. பெயர்தான் பஸ்தான். விமானத்தைப்போல இன்டநெட் இணைப்பு உட்பட அனைத்து வசதிகளும் சொகுசுகளும் இருந்தன. ஆனால் நாம் ஒன்றையும் பயன்படுத்தவில்லை. நேற்றிரவு 11.30 வரை நாமும் இன்னும் சிலருமாக நன்றாக நடனமாடி களைத்துப் போயிருந்தோம். படுத்தது பிந்தி ஏழும்பியது முந்தி. ஆகவே நித்திரை கண்ணை மயக்கியது. அயர்ந்தோம். சரியாக ஒரு 12.00 மணிபோல ராஜா மார்க்கட் என்ற இடத்தில் நின்றது. 12.30 க்கு குடிவரவளார்களின் பரிசோதனை நிலையம் என இரசிய மொழியில் சொல்லியிருக்க வேண்டும். அனைவரும் இறங்கிச் செல்ல நாமும் இறங்கிச் சென்றோம். ஏற்கனவே இரசிய குடிவரவு பரிசோதகர்கள் தொடர்பாக எதிர்மறையான தகவல்கள் பலவற்றை வாசித்ததால் தயக்கத்துடன் சென்றோம். ஒருவரும் தமது பொதிகளை கொண்டு செல்லாதது ஆச்சரியமாக இருந்தது. இந்த இடத்திலும் ராஜா என ஏதோ எழுதியிருந்தது. வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய எல்லை நகரங்களில் இருக்கின்ற குடிவரவாளர்களின் பரிசோதனை நிலையம்போல சகல வசதிகளுடன் அழகாக அமைக்கப்பட்டிருந்தது. குடிவரவு பரிசோதகர்களும் சிரித்துக்கொண்டு அனைவரது கடவுச்சீட்டுக்கும் கடகட என முத்திரை குத்தி அனுப்பினார்கள். நமக்கு நல்ல சந்தோசம். இவ்வளவு விரைவாக அனைத்தும் முடிந்து விட்டது. இரசிய குடிவரவு பரிசோதகர்கள் கடுமையானவர்கள் என்பதை இவர்கள் பொய்பித்துவிட்டார்கள் என நினைத்துக் கொண்டு பஸ்சில் ஏறி நிம்மதியாக நித்திரை கொண்டோம்.

IMG_4156பஸ் ஒரு மணிக்குப் புறப்பட்டு மீண்டும் அதிகாலை 1.30 மணிபோல நிறுத்தியது. மீண்டும் சாரதி இரசிய மொழியில் மட்டும் ஏதோ கூறினார். இம் முறை அனைவரும் தமது பொதிகளுடன் மீண்டும் இறங்கினார்கள். இப்பொழுதுதான் எங்களுக்கு உண்மை விளங்கியது. நாம் முதல் நின்ற இடத்தில் நின்றவர்கள் பின்லாந்திலிருந்து வெளியேறியதை உறுதிப்படுத்திய குடிவெளியேறிகளைப் பரிசோதிக்கும் பின்லாந்து உத்தியோகத்தர்கள் என்பதைப் புரிந்து கொண்டோம். பொதிகளுடன் சென்ற அனைவரும் ஒரு சிறிய அறையினுள் வரிசையாக நின்றோம். பலகையால் செய்யப்பட்ட நான்கு வழிகள் இருந்தன. அனைத்தும் மூடப்பட்டிருந்தன. வெளிச்சமும் பெரிதாக இருக்கவில்லை. சிறிது நேரத்தின்பின் ஒரு சிறிய பெண் ஒருவர் வயது குறைவான இளம் பெண் அல்லது அவ்வாறு தோற்றமளிக்கின்ற ஒருவர் வந்து ஒரு கதவை திறந்துவிட்டு தனக்குரிய பலகையால் அடைக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தார். சிலரது கைகளிலும் கடவுச்சீட்டுகளும் பல கடிதங்களும் இருந்தன.  நாம் மட்டுமே மண் (பிறவுன்) நிறமானவர்கள். இன்னுமொரு சீன முகச் சாயலுடைய மூவர் கொண்ட குடும்பம். மற்ற அனைவரும் “வெள்ளையர்கள்”. இருப்பினும் சிலருக்கு உடனடியாக முத்திரை குத்தி அனுப்பினார். சிலருக்கு கொஞ்சம் அதிக நேரம் எடுத்தார். சிலரது மூக்குக் கண்ணாடியை கழட்டச் சொன்னார். சிலருக்குப் போடச் சொன்னார். கடவுச் சீட்டில் எப்படி இருக்கின்றதோ அப்படி நேரிலும் குறிப்பிட்டவர் இருக்க வேண்டும் போல. இப்படியே நேரம் போனது. நாம் வரிசையில் கடைசி மனிதருக்கு கொஞ்சம் முன்னுக்கு இருந்தோம்.

IMG_4328நமக்கு முன்னுக்கு இருந்த சீன முகம் கொண்டவர்கள் குடும்பமாக சென்றார்கள். உத்தியோகத்தர் மற்றவர்களைவிட அவர்களுக்கு அதிக நேரம் எடுத்தார். நமது நேரம் வர நாமும் ஒன்றாகப் போய் நின்றோம். எங்களைப் பார்த்தார். நாம் சிரித்துக் கொண்டு கடவுச்சீட்டுகளையும் ஏற்கனவே பஸ் சாரதி தந்த குடிவரவு பத்திரங்களையும் நிரப்பிக் கொடுத்தோம். அவர் சிரிக்கக்கூடாது என்பதற்காக சிரிப்பைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டு கடவுச்சீட்டில் கண்ணாக இருந்தார். தொலைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தார். ஷேளியை அடிக்கடி பார்த்து கடவுச்சீட்டையும் பார்த்தார். எழும்பி நின்றும் பார்த்தார். ஏற்கனவே தங்குமிடம் மற்றும் அழைப்பவர்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை கொடுத்துதான் விசாவைப் பெற்றிருக்கின்றோம். இதைவிட ஷேளியின் கடவுச்சீட்டில் தலைமயிர் வளர்ந்திருக்கின்றது. விசாவிற்கு விண்ணப்பித்தபோது எடுத்த படத்தில் மொட்டைத் தலையுடன் இருக்கின்றார். இப்பொழுது தலைமயிர் கொஞ்சம் வளர்ந்தவாறு இருக்கின்றார். இவ்வாறான வேறு வேறு தோற்றங்கள் அவருக்கு சந்தேகத்தை உருவாக்கியிருக்க வேண்டும். மீண்டும் தொலைபேசியில் உரையாடிவிட்டு இறுதியாக கடவுச்சீட்டில் நாட்டிற்குள் செல்வதற்கான அனுமதி முத்திரையை குத்தினார். இப்பொழுது எனது முறை. கொஞ்சம் குறைய நேரம் எடுத்து முத்திரையை குத்தினார். எனக்கு எல்லாவற்றிலும் தலைமயிரும் தாடியும் இருப்பதால் பிரச்சனையில்லை. ஆனால் என் மண்டைக்குள் என்ன இருக்கின்றது என அவருக்குத் தெரியாது.

IMG_4318இரசிய குடிவரவு தொடர்பான சில தகவல்களை வாசித்த போது, “நாம் எப்பொழுது இரசியாவிலிருந்து வெளியேறுவோம்” என்ற தகவலைக் கேட்பார்கள் என எழுதியிருந்தார்கள். ஆகவே இரசியாவிலிருந்து வெளியேறுவதற்கு ஏற்ப ஒரு நாளுக்கு விமானத்தை ஏற்கனவே அவசர அவசரமாக பின்லாந்திலிருந்து பதிவு செய்தோம். ஆனால் அவர் எம்மிடம் இந்தத் தகவலைக் கேட்கவில்லை. இதன் அர்த்தம் அவசியமற்றது என்பதல்ல. இது அந்த இடத்திலிருக்கின்ற குடிவரவு உத்தியோகத்தரின் மனநிலையையும் கடமையை எந்தளவு செய்கின்றார் என்பதையும் பொறுத்தது என நினைக்கின்றோம். ஆகவே வெளியேறுவதற்கான பயணச்சீட்டை வைத்திருப்பது நல்லது. இவரைக் கடந்து சென்றபோது இன்னுமொரு பெண் பரிசோதகர் தனது கைகளால் நமது பொதிகளை பரிசோதிக்கும் இடத்தில் வைக்கும்படி சைகை செய்தார். அவரும் நம்மைப் பார்த்து சிரிக்காமலிருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதையெல்லாம் கடந்து பஸ்சில் ஏறி நிம்மதிப் பெருமூச்சு விட்ட நேரம் அதிகாலை 2.45 ஆகியிருந்தது. இனி எல்லாம் முடிந்து விட்டது என நிம்மதியாக நித்திரை கொண்டோம். ஆனால் பஸ் மீண்டும் நிற்க தலையை சரிந்து சாரதியைப் பார்த்தேன். அவருக்கு அருகில் ஒரு பொலிஸ் அல்லது காவற்துறை உத்தியோக பெண் ஒருவர் நின்று சாரதியுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவரும் தனது தலையை சரித்து உள்ளே பார்த்துவிட்டு உள்ளே வந்து பயணிகளின் கடவுச் சீட்டுகளை மேலோட்டமாக பார்த்துக் கொண்டு சென்றார். சீன முகம் கொண்டவர்களினதும் நம்முடைய கடவுச் சீட்டுகளையும் மட்டுமே வாங்கி நன்றாகப் பார்த்தார். அதன்பின்பே பஸ் பயணம் ஆரம்பமானது. நாமும் நிம்மதியாக நல்ல நித்திரை கொண்டோம்.  இவ்வாறான கஸ்டங்களைத் தவிர்ப்பதற்கு புகையிரதத்தில் பயணம் செய்வது நல்லது எனக் குறிப்பிட்டிருந்தார்கள். இவ்வாறான குடிவரவு பரிசோதனைகளை புகையிரத பயணத்தின் போதே பார்த்துவிடுவார்களாம். ஆனால் நமக்கு அது வாய்க்கவில்லை.

IMG_4167அதிகாலை ஐந்தரை மணியளவில் செயின்ட் பீட்டஸ்பர்க்கிலுள்ள நதிகளைக் கடந்து பஸ் பயணித்துக் கொண்டிருந்தது. நாம் கண் விழித்துப் பார்த்தபோது சூரியனும் கீழ் வானிலிருந்து பிரகாசமாக எரிய ஆரம்பித்தது. இது நகரத்திலிருந்த உயர்ந்த முக்கோண மற்றும் உருண்டையான கோபுரங்கள் மீது  மெல்லிய மஞ்சள் நிறத்தைப் பூசி அழகு காட்டியது. ஏதோ நான் பிறந்த ஊருக்கு வந்த ஒரு உணர்வு. பஸ் நிற்கும் வரை ஆவலுடன் காத்திருந்தேன் இறங்குவதற்காக?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s