இரசியா – காட்டில் மீண்டும் பிறந்தோம்

இரசியா – காட்டில் மீண்டும் பிறந்தோம்

IMG_4383இரசியாவிற்கு செல்வது என முடிவெடுத்தவுடன் செயின் பீட்டர்ஸ்பேக்கிலும் மாஸ்கோவிலும்  ஒவ்வொரு வாரம் நமது சாப்பாட்டிற்கும் தங்குமிடத்திற்கும் வேலை செய்வோம் என முடிவெடுத்தோம். 2007ம் ஆண்டு இத்தாலியில் சந்தித்த ஒரு இரசிய நண்பருடன் தொடர்பு கொண்டபோது அவர் இரண்டு இடங்களிலும் இருவரின் தொடர்பைத் தந்தார். அவர்களுடன் தொடர்பு கொண்டபோது வரலாம் என்று கூறினார்கள். ஆனால் நாட்கள் நெருங்க நெருங்க அவர்களிடமிருந்து பதில் ஒன்றும் வரவில்லை. இரசியாவைப் பற்றி வாசித்த தகவல்களில் அடிப்படையில் நாம் சிலவற்றை உறுதி செய்து கொண்டு போகவேண்டியிருந்தது. ஆகவோ ஹோட்டல் ஒன்றை செயின் பீட்டர்ஸ் பேர்க்கில் பதிவு செய்தோம். இதேநேரம் செயின்பீட்டர்ஸ் பேர்க்கிலிருந்து அலெக்ஸ் என்பர் தம்முடன் வந்து வேலை செய்யலாம் என எழுதியிருந்தார்.

IMG_4389செயின் பீட்டர்ஸ்பர்க்கில் இரண்டு நாட்கள் நின்றுவிட்டு இரசியர்களுடன் காட்டில் வாழ சென்றோம். ஆரம்பத்தில் ஒரு வாரம் நிற்பது நோக்கம். ஆனால் இப்பொழுது மூன்று இரவுகள் நிற்பதுதான் நோக்கம். இதற்காக ஒரு இடத்தில் நித்திரை கொள்கின்ற பைகளை வாடகைக்குப் பெற்றுக் கொள்ள நகரப் புகையிரதம் எடுத்து பின் ஒரளவு தூரம் நடந்து சென்றோம். போகின்ற வழியில் “மோல்” போன்ற ஒரு இடம் இருக்க அதிலிருந்த கடை ஒன்றில் மரக்கறி “பிரைட்” சோறு வாங்கிச் சாப்பிட்டோம்.

IMG_4390நித்திரை கொள்கின்ற பைகளை வாங்கும் இடத்திற்கு சென்றபோது மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அது நான்கு பக்கமும் மதில் சுவர்கள் இருக்க உள்ளே பழைய சமான்கள் இரும்புகள் விற்கின்ற மற்றும் வாகனங்கள் திருத்துகின்ற இடங்கள் போலவும் இருந்தது. நமக்கு வாடகைக்கு தருகின்ற மனிதர் நம்மை ஒதுக்குப்புறமாக இருந்த அறை ஒன்றுக்கு கூட்டிச் சென்றார். உள்ளே பெட்டிகளில் பல வகையான “காம்பிங்” சமான்கள் இருந்தன. ஒரு பெட்டிக்குள் நித்திரை கொள்கின்ற பைகள் இருந்தன. அதைப் பார்த்துவிட்டு இவற்றை எப்ப கழுவினீர்கள் எனக் கேட்டோம். மாதத்தில் ஒரு தரம் கழுவுவோம் என்றார்கள். ம்…. நமது முடிவு இங்கு தீர்மானிக்கப்பட்டது. 800 ரூபில்களைக் இரண்டு இரவுகளுக்கு கொடுத்து இருந்தவற்றில் நல்லதாக இரண்டு பைகளைப் பெற்றுக் கொண்டோம்.  மேலும் ஒரு நாள் தேவைப்பட்டால் வந்து மிகுதிப் பணத்தை தருகின்றோம் எனக் கூறினோம். பாதுகாப்புப் பணமாக 2000 ரூபில்களையும் கட்டினோம். பொருட்களை திருப்பி ஒப்படைத்தபின் தருவதாக கூறினார்கள். அவற்றைப் பெற்றுக் கொண்டு நம்மை அழைத்துச் செல்கின்ற நண்பரை சந்திக்க பக்கத்திலிருந்த தீவிற்கு செல்ல வேண்டும். இன்னும் ஒரு மணித்தியாலங்களே இருந்தன. பஸ்சில் சென்றால் மட்டுமட்டாக நேரம் இருக்கும் என்பதானால் வாடகை வாகனத்தைப் பிடித்தோம்.

IMG_4395நாம் காட்டிற்கு புகையிரதத்தில் செல்வது நோக்கம். இருப்பினும் யாராவது மாஸ்கோவிலிருந்து வருகின்றார்களா என கேட்டபோது நண்பர் சேக்கிரோவை தொடர்புபடுத்தினார். அவர் குறிப்பிட்ட இடத்தில் சென்று காத்திருந்தபோது சொன்ன நேரத்திற்கு நண்பர் வந்தார்.. அந்த நண்பர் மிகவும் மென்மையானவர். பணிவானவர். இரண்டு குழந்தைகளின் தந்தை. நம்மை நன்றாக உபசரித்தார். ஓரிடத்தில் முகாமையாளராக வேலை செய்கின்றார். ஆங்கிலம் மிகக் குறைவாகவே தெரியும். இத்தாலியில் பல இரசிய நண்பர்களை சந்தித்திருக்கின்றேன். ஆனால் இவரைப் போல மென்மையான ஒருவரைக் கண்டதில்லை. காட்டிற்கு நண்பரின் காரில் பயணமானோம். நகரத்திலிருந்து வெளிக்கிட்டு லெனின் சதுக்கம் இருந்த தீவினுடாக சென்று ஏங்கல்சின் வீதியில் பயணித்து பின் ஒன்றரை மணித்தியாலங்கள் விரைவான வீதியில் சென்று ஒரு காட்டுப் பாதைக்குள் சென்றோம்.

IMG_4394மழை பெய்து மண் பாதை சகதியும் பள்ளமுமாக இருந்தது. சரியான பாதையில் வாகனங்கள் வருவதற்கு குறிகள் இட்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் உயர்ந்து வளர்ந்த பைன் மரங்களும் சிறிய ஆறும் ஒடுகின்ற இடத்தின் மத்தியில் பல கூடாரங்கள் அமைத்திருந்த இடத்தில் நின்றோம். மேகங்கள் கறுத்திருந்தபோதும் சிறிது வெளிச்சம் இருந்தது. மேற்கின் அடிவானத்திலிருந்த சூரியன் உயர்ந்த மரங்களின் உச்சியில் மஞ்சள் வெளிச்சத்தைப் பாச்சிக் கொண்டிருந்தது. நாம் சென்றபோது இரவு சமையல்  செய்து கொண்டிருந்தார்கள். இந்த முகாமை ஒவ்வொரு வருடமும் ஒழுங்கு செய்கின்ற அலெக்ஸ் தன்னை அறிமுகம் செய்தார். இதன்பின் ஒவ்வொரு இடங்களாக கூட்டிச் சென்று காட்டினார்.

IMG_4402கடந்த பத்து வருடங்களாக இன்னும் சிறிது தூரத்தில் வடக்கு நோக்கி செல்கின்ற காட்டில் செய்தார்களாம். ஆனால் இப்பொழுது அரசாங்கம் அந்தக் காட்டை தேசிய காடாக அறிவித்துள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே இக் காட்டை தெரிவு செய்துள்ளார்கள். வழமையாக எந்த ஒரு காட்டிற்கு அனுமதி பெறாமல் உள்ளே சென்று இருக்கலாமாம். இந்தக் காட்டிற்கும் அனுமதி ஒன்றும் பெறத் தேவையில்லை. கிழமை நாட்களில் 30 பேரளவிலும் வார இறுதி நாட்களில் 50 பேர்களுக்கு மேற்பட்டவர்களும் ஒன்று கூடி சமைத்து பின் தியானம் செய்கின்றனர்.

IMG_4404பக்கத்தில் ஒடுகின்ற சிறிய ஆற்றில்தான் அனைவரும் குளிக்கின்றனர். இரசியாவில் பிரபல்யமாக இருக்கின்ற சூட்டு அறை ஒன்றையும் உருவாக்கியுள்ளார்கள். மலசலக் கூடம் ஒன்றை தற்காலிகமாக உருவாக்கியுள்ளார்கள். நாம் முன்பு நமது நாட்டில் அகதி வாழ்க்கையின் போது அல்லது நெருக்கடியான காலங்களில் செய்ததைப் போல ஒரு குழியை கிண்டிவிட்டு அதற்கு மேல் இரண்டு மரங்களைப் போட்டுவிட்டால் அதுதான் மலசலக்கூடம். கடந்த ஒன்டரை மாதங்களாகப் பயன்படுத்துகின்றார்கள். மணம் முக்கைப் பிழந்தது. ஆனாலும் சிறிது தூரத்தில் ஒன்றாகக் கூடி சமைத்து தியானம் செய்து ஆடிப் பாடுகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு கோடையிலும் ஒன்றரை மாதங்கள் காட்டில் வாழ்கின்றனர். எட்டு மணியளவில் ஓசோவின் உரை போடப்பட்டு இடை இடையில் நிற்பாட்டி அதை இரசிய மொழியில் மொழிபெயர்த்தார்கள். உரை முடிய அனைவரும் சாப்பிடச் சென்றோம். சில மரக்கறிகளைப் போட்டு சூப்போல ஏதோ ஒன்றை செய்திருந்தார்கள். ஒருவகையான தானிய அரிசியில் சோறு சமைத்திருந்தார்கள். கமைத்த பாத்திரங்கள் எல்லாம் கறியாக இருந்தது. நாம் கோப்பைகளை கழுவி அதில் இரண்டு சாப்பாடுகளையும் கொஞ்சம் கொஞ்சம் போட்டு சாப்பிட்டோம். கொஞ்சம் குளிராக இருந்தது. நிறைய நுளம்புகள் இருந்தன.

IMG_4406நாம் சாப்பிட்டுவிட்டு ஒவ்வொரு டென்டாக சுற்றிப் பார்த்தோம். ஒரிடத்தில் இரண்டு மனிதர்கள் தமது கொட்டிலுக்குள் நெருப்பு எரித்து குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நாமும் போய் இருந்தோம். நன்றாக இந்திய சினிமா பார்ப்பார்கள் போல. அதைப் பற்றி ஒருவர் சிரித்து சிரித்து கதைத்துக் கொண்டிருந்தார். சிறுவன் ஒருவன் நெருப்புடன் விளையாடிக் கொண்டிருந்தான். ஒன்பது மணிபோல ஆட ஆரம்பித்தார்கள். ஷேளி குளிராக இருப்பதாலும் நிறைய நுளம்புத் தொல்லையாலும் டென்டுக்குள் படுக்கச் சென்றார். நான் சிறிது நேரம் ஆடிவிட்டு படுக்கச் சென்றேன். ஆடிக் கொண்டிருந்தவர்கள் பதினொரு மணிபோல படுக்கச் சென்றார்கள். ஷேளி இரவு முழுக்க படுப்பதற்கு கஸ்டப்பட்டார். முக்கியமாக ஷேளிக்கு நித்திரை பையிலிருந்து வந்த மணம் சகிக்க முடியாமல் இருந்தது. நமக்கு கஸ்டமாக இருக்கும் என நண்பர் ஒருவர் கீழே விரிப்பதற்கு சில சமான்களையும் மேலும் இரண்டு நித்திரை பைகளையும் தந்தார். ஆனாலும் படுப்பதற்கு கஸ்டமாக இருந்தது. கடைசியாக ஷேளி எனது கைகளிலும் பின் மார்பிலும் தலையை வைத்து நித்திரையானார். நானும் நித்திரை கொண்டேன். வெளியில் நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது.

IMG_4410காலை ஏழரை மணிபோல டைனமிக் தியான இசை சத்தம் கேட்க எழும்பினோம். காலையில் டைனமிக் தியானம் செய்வது பல வகைகளில் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. எனக்கு குறைந்தது மூன்று நாட்களுக்காவது தொடர்ந்து செய்ய வேண்டும். அல்லது உடல் நோகும். ஆகவே செய்வதை தவிர்த்தேன். நாம் இருவரும் டென்டை  விட்டு வெளியில் வந்து சிறிது தூரம் நடந்து சென்று சலம் பெய்தோம். பின் ஆற்றங்கரைக்கு வந்து முகத்தைக் கழுவினோம். தண்ணீர் குளிராக இருந்தது. கிழக்கின் அடி வானத்திலிருந்த சூரியனின் ஒளிக் கதிர்கள் மரங்களின் உச்சியில் பட்டு தண்ணீரில் தெரிந்தன. பனி தூரத்து மரங்களில் கீழ்ப் பகுதியில் படர்ந்திருந்தது. டைனமிக் முடித்து வந்தவர்கள் ஆற்றில் இறங்கி நிர்வாணமாக குளித்தார்கள். பார்ப்பதற்கு அழகாகவும் சந்தோசமாகவும் இருந்தது.

IMG_4444நாம் சமையலறையை நோக்கி சென்றோம். எரிந்த அடுப்புக்கு அருகிலிருந்து குளிர் காய்ந்தோம். ஒன்பது மணியளவில் ஓட்மில் உணவும் பானும் பட்டரும் தேநீரும் செய்து தந்தார்கள்.அதைச் சாப்பிட்டுவிட்டு அனைவருடனும் இருந்து அரைகுறை ஆங்கிலத்தில் உரையாடினோம். பின் காடுகளில் சுற்றித் திரிந்தோம். சிறுவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்தார்கள். நெருப்புடன் விளையாடினார்கள். மண்ணில் பிரண்டார்கள். மரங்களுக்குள் ஓடித் திரிந்தார்கள். ஒருவரும் அவர்களைத் தடுக்கவில்லை.  ஒன்பரை மணியளவில் நாதபிரம்மா தியானம் செய்தார்கள். நானும் பங்கெடுத்தேன். அமைதியான நல்லதொரு தியானம். நமது சக்திகளை இயற்கைக்கு வழங்கி புதிய சக்திகளைப் பெறுகின்ற தியான முறை இது. ஷேளி ஆங்கிலம் ஒரளவு உரையாடக்கூடிய இன்னுமொரு பெண்ணுடன் சுற்றித் திரிந்தார். தியானம் முடிய IMG_4476சமைப்பதற்கு ஆயத்தமானர்கள். நாமும் உருளைக் கிழங்கு கரட் மற்றும் வெங்காயம் என்பவற்றை கழுவி சுத்தம் செய்து வெட்டிக் கொடுத்தோம். பதினோரு மணிக்கு ஓசோவின் “மீண்டும் பிறத்தல்” தியானத்தை செய்ய ஆரம்பித்தார்கள். நமது குழந்தைப் பருவத்தை மீண்டும் வாழ்வது. நாம் விரும்பியதை செய்யலாம். குழந்தையாக இருக்கும் பொழுது நமக்குத் தடுக்கப்பட்டதை எல்லாம் செய்யும் சுதந்திரம் இது. சிரிக்கலாம் அழலாம். துள்ளலாம் பாடலாம். குதிக்கலாம். இவ்வாறு எதையும் ஒரு மணித்தியாலம் செய்துவிட்டு இன்னுமொரு மணித்தியாலங்கள் ஏற்பட்ட உணர்வுகள் எண்ணங்களுடன் அமைதியாக தியானத்தில் இருக்க வேண்டும். நல்லதொரு தியானம். ஒரு வகையான தெரப்பி. இரசிய காட்டில் மீண்டும் பிறந்தோம்.

IMG_4482 தியானம் முடிய நமது சமான்களை அடுக்கினோம். நேற்று இரவு படுக்க கஸ்டப்பட்டதால் இன்று செல்வோம் எனத் தீர்மானித்தோம். மாஸ்கோவிலிருந்து வந்த ஜோடி ஒன்று ஒரு கிழமையாக தங்கியிருந்தார்கள். அவர்களும் இன்று புகையிரதத்தில் செல்வதாக கூறினார்கள். நாமும் காட்டுக்கால் நடந்து புகையிரதத்தில் செல்ல விரும்பினோம்.  அவர்களுடன் வருவதாக கூறினோம். இரண்டறை மணியளவில் சமைத்து முடித்திருந்தார்கள். சோறும் சூப்பும். அதைச் சாப்பிட்டுவிட்டு அனைவருக்கும் நன்றி கூறி விடை பெற்றோம். எல்லோரும் நிற்கும்படி கூறினார்கள்.

IMG_4523காடுகளுக்குள்ளால் நடந்து சென்றோம். ஜோடி ஏற்கனவே இந்தப் பாதையால் வந்தவர்கள். அவர்களுக்கு பாதை தெரிந்திருந்தது வசதியாக இருந்தது. இடையில் ஒரு ஆறு குறுக்கிட்டது. இதைக் கடப்பதற்று ஒரே ஒரு மரத்தை ஆற்றுக்கு குறுக்கால் போட்டிருந்தார்கள். அந்த மரத்துடன் ஒட்டியவாறு சிறு தடிகளை நட்டும் குறுக்காக தடிகளை கட்டி ஆணி அடித்தும் வைத்திருந்தார்கள். அதை இறுக்கிப் பிடித்து நமது பாரத்தை அதற்கு சுமத்தினால் அதையும் விழுத்தி நாமும் தண்ணீருக்குள் விழலாம். மாறாக அதை மெதுவாகப் பிடித்தும் பிடிக்காமலும் ஒற்றடியப்பாதையில் நடப்பது போல மெதுவாக நடக்க வேண்டும். நான் முதலில் சென்று பின்னால் வருபவர்களைப் படம் பிடித்தேன். நால்வரும் ஒன்றாக ஒரே நேரத்தில் வந்தால் பாலம் தாங்காது. ஒவ்வொருவராக மெதுவாக வந்து சேர்ந்தனர். இதன் பின் சிறிய பாலம் ஒன்றை மரத்தினால் கட்டியிருந்தார்கள்.  அதையும் கடந்து சிறிது தூரம் வந்தபோது புகையிரதப் பாதையைக் கண்டோம்.

IMG_4525புகையிரதப் பாதையை அடைந்து அதனருகால் நிலையத்தை நோக்கி நடந்தோம். மாஸ்கோவிலிருந்து ஒரு புகையிரதம் வந்து நின்று நம்மைக் கடந்து சென்றது. அதிலிருந்து ஒரு பெண் இறங்கி நம்மை நோக்கி நடந்து வந்தார். தானும் காட்டுக்குள் தியானம் செய்ய செல்வதாக கூறிச் சென்றார். நாம் நால்வரும் புகையிரதத்திற்காக காத்திருந்தோம். விரல் விட்டு எண்ணக்கூடிய சில மனிதர்கள் அருகிலிருந்த கிராமத்திலிருந்து வந்து காத்திருந்தார்கள். நாம் நேற்று வாங்கி வந்த வாழைப்பழத்தில் இரண்டில் ஒன்றை நண்பர்களுக்கு கொடுத்துவிட்டு மற்றதை நாம் சாப்பிட்டோம். குறிப்பிட்ட நேரத்திற்கு புகையிரதம் வந்தது. இது மாஸ்கோவின் புற நகர்களுக்கு செல்கின்ற புகையிரதம். நீளமாக கதிரைகளைக் கொண்டவை. பெரும்பாலும் வயது போனவர்கள் களைத்துப் போய் அமைதியாக இருந்தார்கள். கடந்த எழுபது வருட கால களைப்பு அல்லது புதிய வாழ்க்கை முறையின் கஸ்டங்களை எதிர்கொள்கின்ற கவலை அவர்கள் முகங்களில் தெரிந்ததுபோல ஒரு உணர்வு. கொஞ்ச நேரத்திலையே பரிசோதகர் வந்தார். பற்றுச்சீட்டு இல்லாதவர்களுக்கு பயணச் சீட்டுகளை வழங்கினார். நமது நண்பர் நாம் வாங்குவதற்கு உதவி செய்தார். இரண்டு பெண்கள் பான் பழ வகைகளை விற்றுக் கொண்டு வந்தார்கள். வாசலில் நின்று கத்தி கூறிவிட்டு ஒவ்வொருவராக பார்த்துக் கொண்டு நம்மைக் கடந்து சென்றார்கள். சிலர் அவர்களிடம் வாங்கிச் சாப்பிட்டார்கள். நாம் முயற்சிக்கவில்லை.

IMG_4532ஒன்றரை மணித்தியாலங்களின் பின்பு புகையிரம் லெனின் சதுக்கத்திலிருந்த புகையிரத நிலையத்தில் நின்றது. நண்பர்கள் மாஸ்கோ புகையிரதம் எடுப்பதற்காக வேறு ஒரு நிலையத்திற்கு சென்றார்கள். நாம் வெளியில் வந்து தேநீர் கேக் வாங்கிக் குடித்துவிட்டு அக் கடையில் இலவசமாக இருந்த வைபையைப் பயன்படுத்தி இரவு தங்குவதற்கான ஒரு ஹோட்டலை மிகவும் கஸ்டப்பட்டு நாம் செலவு செய்யக்கூடிய பணத்திற்குள் பதிவு செய்தோம். இப்படி அன்று தங்குவதற்கு பதிவ செய்யும் பொழுது அதிகமான பணத்தைக் கொடுக்க வேண்டி வரும்.

IMG_4667லெனின் சதுக்கத்திலிருந்த லெனினின் சிலையை பார்க்கச் சென்றோம். இதுவே இரசியாவில் நாம் பார்த்த முதலாவது லெனின் சிலை. சுற்றிவர பூந்தோட்டங்களாலும் தண்ணீர் தாடகங்களாலும் நிறைந்திருந்தது. வழமையான கூட்டங்களில் கையை உயர்த்தி உரையாற்றிக் கொண்டிருந்த லெனினின் உருவம் அந்த சிலை. இவர்களின் கடந்த எழுபது வருட காலங்கள் அனைத்தும் இவ்வாறு சிலையாகவே இன்று உறைந்து போய் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இவரது சிலை தீவிற்கு அப்பால் பெரும் நிலத்திலிருந்த புரட்சிக்கு முந்திய அரசர்களின் அகலமான உயரமான குளிர்கால அரண்மணையைப் பார்த்த படி தனித்து இருந்தது. பெரும் திரளான மக்கள் இந்த அரண்மனையையும் அங்கிருக்கின்ற அரசர்களின் சிலைகளையுமே பார்க்கச் செல்கின்றனர். ம்…!IMG_4550

One thought on “இரசியா – காட்டில் மீண்டும் பிறந்தோம்

  1. Pingback: இரசியா: மீண்டும் பழமையை நோக்கி… | a journey towards sun/சூரியனை நோக்கி ஒரு பயணம்___

Leave a comment