50 வது நாள்: ஸ்டொக்லமிலிருந்து ஹெல்சிங் நகருக்கு…

50 வது நாள்:  ஸ்டொலொக்மிலிருந்து ஹெல்சிங் நகருக்கு…
IMG_3549நாம் தங்கியிருந்த சுவீடன் கிராமத்திலிருந்து (skinnskatteberg) அங்கு சந்தித்த சுவீடன் நாட்டவருடன் அவரது காரில் ஸ்டொக்லம் (Stockholm) பயணமானோம். இவர் ஒரு பயணி. மாலை ஏறுபவர். நமக்கு கற்றுத்தந்த மொழியில் “பீத்தப்பறங்கி”. தான் ஸ்டொக்லோம் செல்வதாகவும் எம்மை ஏற்றிச்செல்வதாகவும் அவரே சொன்னார். இவர் சுவீடனில் பிறந்த போதும் அமெரிக்காவில் சில காலம் வாழ்ந்தவர். இந்தியாவிற்கு அடிக்கடி பயணம் செய்பவர். இலங்கைக்கும் இரண்டு தரம் பயணம் செய்துள்ளார். அவரை நான் சுவீடிஸ் இந்தியன் என்றே கூறுவேன். அவருடன் சுவீடனின் வாழ்க்கை மற்றும் அவரது சொந்த வாழ்க்கை தொடர்பாக உரையாடிக் கொண்டு வந்தோம். அவரது தொழில் மரவேலை.  இப்பொழுது நம்மை இறக்கவிட்டு தமது சொந்தக்காரர் ஒருவருக்கு மரங்களைப் பயன்படுத்தி வீட்டின் பின் இளைப்பாற நிழல் கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக செல்கின்றார்.

IMG_3739நாம் ஸ்டொக்லம் நகரின் மாநகர புகையிரதநிலையம் ஒன்றில் முழு நாள் கடவுச்சீட்டு ஒன்றை வாங்கிக் கொண்டு நகரின் மத்திக்கு சென்றோம். சிறந்த புகையிரத வலைப்பின்னலைக் கொண்ட நகரம். புகையிரத நிலையத்தில் வேலைசெய்வோர் நமது கேள்விகளுக்கு அலுப்புப்பாராமல் விளக்கமாக கூறி வழிகாட்டினார்கள். இந்த நாட்டில் அனைத்தும் நெருப்பு விலை. தங்குமிட விலையும் அவ்வாறே. வழமையாக இரண்டு பேர் ஒன்றாக ஹொஸ்டலில் தங்கும் செலவிற்கு ஒரு ஹொட்டலை பதிவு செய்யலாம். ஆனால் சுவிடனில் அவ்வாறும் செய்யமுடியவில்லை. ஆகவே ஒரு ஹொஸ்டலில் இரண்டு படுக்கைகளைப் பதிவு செய்தோம்.  வழமையைப் போல மதியம் 12 மணிக்குத்தான் வந்து சேர்ந்தோம்.

IMG_3741இணைய வசதி இல்லாததால் சாப்பாட்டுக் கடைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆட்களிடம் கேட்டு சென்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக ஒரு இடத்தில் இலவச இணையவசதி இருக்க அதனுடாக தேடிப்பார்த்தோம். பத்து நிமிட நடை தூரத்தில் மூன்று இந்தியன் கடைகள் இருந்தன. அங்கு சென்றால் இரண்டு கடைகள் மூடியிருந்தன. மூன்றாவது கடை திறந்திருந்த மகிழ்ச்சியில் உள்ளே சென்றால் சமைப்பவர் சென்றுவிட்டார் . மூன்று மணியாகிவிட்டது கடையை மூடுகின்றோம் என்றார்கள். வேறு வழியின்றி போகும் வழியில் தாய் உணவகம் ஒன்றில் முட்டை மரக்கறி சோற்றுப் பார்சல் ஒன்றை வாங்கினோம். மிகவும் கொஞ்ச சாப்பாடு. அரை வயிறு தான் நிறைந்தது. அதன் பிறகு ஸ்டக்லொம் மத்திய பஸ் நிலையத்தை நோக்கி நடந்தோம். வானம் இருட்டியது. மழை அடித்துப் பெய்தது. கடைகளுக்குள்ளாள் நடந்து தரிந்தோம்.

IMG_3743மழைவிட்டபின் ஸ்டக்லொமின் பழைய நகருக்கு பஸ் எடுத்தோம். அது ஒரு சிறிய தீவு. நடந்தும் செல்லலாம். ஆனால் நாம் களைத்துவிட்டபடியால் பஸ்சில் சென்றோம். பழைய நகரங்கள் எல்லாம் கல்லுப்பதித்த ஒடுங்கிய வீதிகளாகவே இருக்கின்றன. இதன் சின்ன மாறுதல்தான் மொரக்கோவின் மதினாக்கள். வீட்டுத் தயாரிப்பான  ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டோம். அதற்கான கோனை நமக்கு முன்னாலையே உருவாக்கினார்கள். இரண்டும் மிக சுவையாக இருந்தது. அழகான பேக்கரிகள் பல இருந்தன. ஆனால் சின்ன சின்ன பன்கள் கூட அதிகம் விலை. சுவையாக இருக்கலாம் ஆனால் அந்தளவு காசு கொடுத்து வாங்க மனமில்லை. ஆகவே மலிவான கடைகளில் அதே பன்னை வாங்கி சாப்பிட்டோம். நண்பர் யாழினி இங்கு கல்வி கற்றபோது எப்படி வாழ்ந்திருப்பார் என நினைத்துக் கொண்டோம்.

IMG_3754பின்லாந்து தீவுகளின் நாடு. ஸ்டொக்லொம் தீவுகளின் நகரம். இதன்பின் பஸ் எடுத்து பக்கத்தில் இருந்த இன்னுமொரு தீவுக்குச் சென்றோம். அதன் முடிவிடம் வரை சென்று அங்கிருந்து இன்னுமொரு பஸ்ஸை எடுத்து உட்கார்ந்தோம். ஒரு நாள் பஸ் பாஸ் (day pass) இருப்பதன் நன்மை இது. போகும் வழியில் இரண்டு இந்தியன் உணவகங்களைக் கண்டோம். இந்த பஸ் போகும் இடமெல்லாம் சென்று மீண்டும்  இந்தியன் உணவகம் இருந்த இடத்திற்கு வந்தோம். ஒரு கடையில் அதிக விலையாக இருக்க மற்றக்கடையும் விலையாக இருக்கும் என நினைத்து தவிர்க்கப் பார்த்தோம். ஆனால் கொண்டு செல்வதற்கு (take out) மலிவாக போட்டிருந்தார்கள். 8 டொலருக்கு பன்னீர் புரியாணி ஒன்றை வாங்கி வீதியிலிருந்து சாப்பிட்டோம். அதன் பின் சிறிது தூரம் நடந்து விட்டு பஸ் எடுத்து மத்திய புகையிரத நிலையத்திற்கு வந்தோம். அதிகாலையில் விமான நிலையம் செல்ல இந்த ஒரு நாள் பயணச்சீட்டில் எந்தப் புகையிரதத்தை எங்கே இருந்து எடுக்க வேண்டும் என விசாரிக்க சென்றோம்.

IMG_3752நமக்கு பின்லாந்துக்கு செல்வதற்கான விமானம் காலை 7 மணிக்கு உள்ளது. ஆகவே விமான நிலையத்தில்  ஆறு மணிக்கு முதல் நிற்க வேண்டும். இதற்கு  மராஸ்ட (Marsta) புகையிரத நிலையத்திற்கு அதிகாலை 4.45ற்கு செல்கின்ற முதல் புகையிரதத்தில் ஏறவேண்டும்.  அந்த நேரத்திற்கு பஸ் இருக்காது. ஆகவே நடந்து தான் வரவேண்டும். இப்பொழுது நாம் தங்கும் இடத்திற்கு நடந்தே சென்று பார்த்தோம். பத்து நிமிடங்கள் தேவை. இப்பொழுது சுமையில்லாமல் நடப்பதால் விரைவாக வந்துவிட்டோம். சுமையுடன் சென்றால் இன்னும் கொஞ்ம் அதிக நேரம் தேவை என நினைத்தோம். அதிகாலையில் நேரத்ததுடன் எழும்புவதற்காக இப்பொழுது படுக்கச் சென்றோம்.

IMG_5448நாம் தங்குமிடம் ஒரு ஹொஸ்டல். நமது அறை எட்டுக் கட்டில்கள் உள்ள இடம். பெட்சீட்க்கும் 50 குரோணா (krona) மேலதிகமாக எடுத்தார்கள். அடுத்த நாள் விமானத்திற்கான இருக்கையை உறுதி செய்துவிட்டு நித்திரை கொண்டோம். இங்கு நித்திரை கொள்ள பல நிபந்தணைகள் உள்ளன. அதில் ஒன்று  குறட்டை விடக்கூடாது என்பது. குறட்டை என்ன நாம் விரும்பி விடுகின்ற ஒன்றா? அது தானாக வருகின்றது. நம்முடன் சேர்த்து இரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் அந்த அறையில் நித்திரை கொண்டோம். ஆனால் அதிகாலை 3.45 எழும்பினோம். சத்தம் போடாமல் பின்லாந்திற்கான நமது பயணத்தை ஆரம்பித்தோம். வெளியே வந்தால் காலை ஆறு மணிபோல வெளிச்சம். புகையிரத நிலையத்திற்கு நடந்து சென்றபோது பஸ் ஒன்று வந்தது. அதில் ஏறினோம். அடுத்த தரிப்பில் இறங்க வேண்டுமாயினும் சுமையுடன் செல்லும் பொழுது இது வசதி. பஸ்ஸிலிருந்து இறங்கி புகையிரத நிலையத்தை நோக்கி சென்றபோது விமானத்தில் பணி செய்யும் பெண் ஒருவர் விரைவாக நடந்து சென்றார். அவரிடம் விமான நிலையத்திற்கான புகையிரதத்தைப் பிடிக்க எப்படி செல்ல வேண்டும் எனக் கேட்டோம். அவர் தன்னைப் பின்தொடரச் சொன்னார். அவர் ஏறிய புகையிரதததில் நாமும் ஏறினோம். அது உப்சலா (Uppsala) செல்கின்றது. விமானநிலையத்திற்கும் செல்லும் ஆனால் நாம் ஆளுக்கு 100 குரோணர் பணம் மேலதிகமாக கட்டவேண்டும். நமக்கான பயணச் சீட்டில் விமான நிலையத்திற்குப் பயணம் செய்ய அடுத்த புகையிரதத்தையே எடுத்திருக்க வேண்டும். ஆகவே அடுத்த புகையிரத நிலையத்தில் இறங்கி காத்திருந்து ஐந்து நிமிடங்களின் பின்பு அந்தப் புகையிரதத்தை எடுத்தோம். இதில் சென்றால் இடையில் ஒரு புகையிரதநிலையத்தில் இறங்கி மீண்டும் ஒரு பஸ் எடுக்க வேண்டும். அந்த பஸ் நிலையம் வயல்கள் அதைச் சுற்றிவர காடுகளும் நிறைந்த ஒரு வெளியில் இருந்தது. IMG_5446அதை நோக்கி நடந்தோம். அப்பொழுது காலை ஐந்தரை மணியாக இருந்தபோதும் ஏழு மணிபோல வெய்யில் எரித்தது. அந்த வெட்ட வெளியில் வயல்களின் மேல் பனி படர்ந்திருந்தது. உடனடியாக சேரனின், “பண்ணை வெளிகளில் பனி படர்ந்த காலை வேiளையில்” என்ற கவிதை பாடல் நினைவுக்கு வந்தது. அப் பாடலை நினைவுபடுத்திய  காட்சியை கமராவுக்குள் சிறைபிடித்தேன். எந்தளவிற்கு ஒரு பாடல் ஒரு காட்சியுடன் நம் ஆழ்மனதிற்குள் பதிந்து இருக்கின்றது…..ம்….. என்ற எண்ணங்கள் மனதில் ஓட நாம் பஸ்சில் விமான நிலையம் நோக்கிப் பயணமானோம்.

IMG_5450

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s