12ம் நாள் – தான்ஜீர்: மொரக்கோவின் வாசல்

8ம் நாள் – தான்ஜீர்: மொரக்கோவின் வாசல்

IMG_0681தான்ஜீரில் பழைய ரீயாட் (Riyad) ஒன்றை தங்கும் விடுதியாக மாற்றிய இடம் ஒன்றில் தங்கினோம். மிகச் சிறிய அறை. ஒரு ஈரோ 10 டினார்கள். ஒரு கனேடியன் டொலர் 7 டினார்கள். இலங்கை இந்தியாவை விட பண மதிப்பு கூடிய நாடு. இருப்பினும் ஐரோப்பாவின் விடுதி விலைகளுக்கு சரிசமனாகவே இங்கு அறவீடுகின்றார்கள். நாம் எதிர்பார்த்ததைவிட விடுதி விலைகள் அதிகம். ஆனால் மரக்கறிகள் மிக மலிவு. சமைத்து சாப்பிட இடமில்லாதது பெரும் குறையாக இருந்தது.

IMG_0645நமது பொதிகளை வைத்துவிட்டு வெளியில் கிளம்பினோம். முதல் வேளை தொலைபேசிக்கு சிம் காட் ஒன்று வாங்குவது. இரண்டாவது இரவு உணவிற்கு மரக்கறி சாப்பாடு சாப்பிடக் கூடிய கடை ஒன்றைத் தேடுவது. வெளியில் வந்தவுடனையே வாசிலில் நின்ற விற்பனையாளர்கள் நம்மை சூழ்ந்து கொண்டார்கள். தாம் மதீனா பார்க்க கூட்டிச் செல்வதாகவும் எங்கே போகவேண்டும் எனக் கேட்டு நமது பயணத்தை தீர்மானிப்பவர்களாக இருந்தார்கள். நாம் அவர்களிடமிருந்து மெதுவாக நழுவி நமக்கு கிடைத்த மதீனா வரைபடத்தின் உதவியுடன் நடந்தோம்.

போகும் வழியில் சிறிய உணவுவிடுதி. அதன் உணவு விபரங்களைப் பார்த்தோம். தான்ஜின் என்ற உணவில் பல வகைகளும் மற்றும் முட்டைப் பொறியலில் பல வகைகளும் இதைவிட மாமிச உணவு வகைகளுக்கான விபரங்களும் இருந்தன. Tripadvisorஆல் சிபார்சு செய்யப்பட்ட விளம்பரமும் ஒட்டப்பட்டிருந்தது. சரி வேறு உணவு விடுதிகளை கண்டு பிடிக்க முடியாவிட்டால் இந்தக் கடையில் வந்து சாப்பிடுவோம் என நினைத்துக் கொண்டு சென்றோம். ஒரு வீதியில் நிறைய சனம். கடைகள் திறந்து வீதி முழுக்க பலவிதமான வியாபாரிகள் தமது பண்டங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள்.

IMG_0649எல்லாவிதமான சாப்பாடுகளும் திறந்து விற்பனைக்கு இருந்தன. எந்தவிதமான  உணவு பாதுகாப்பு விதிகளும் கடைப்பிடிக்கப்படவில்லை. ஈக்களும் மனிதர்களைப் போல உணவுப்பண்டங்களை சுற்றி குமிந்து இருந்தன. புதிதாக  வரும் ஐரோப்பியர்களுக்கு அதுவும் தற்சமயம்  ஸ்பெயினின் அழகிய நகரங்களான மலக்கா சிவிலி என்பவற்றிலிருந்து  வருபவர்களுக்கு இது ஒரு கலாசார அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் எம்மைப் போன்ற ஆசிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு அப்படி இருக்காது என நினைக்கின்றோம். நாம் கனடாவில் வாழ்ந்தபோதும் இந்த இடம் நமது ஊருக்கு வந்த ஒரு உணர்வை ஏற்படுத்தியது.

IMG_0650இரவு எட்டு மணிக்கு அனைவரும் நோன்பு திறப்பதற்கு தம்மை தயார் செய்து கொண்டிருந்தார்கள். நாம் சிம்காட் வாங்க ஒரு கடைக்கு சென்றோம். அந்த முதலாளி இளம் பொடியன். அதிசயமாக நன்றாக ஆங்கிலம் கதைத்தார். விபரங்களைக் கேட்டுவிட்டு அடுத்த நாள் காலை வருவதாக கூறி சாப்பாட்டுக் கடையை நோக்கி வந்தோம். எமக்கான தெரிவுகள் அதிகம் இருக்கவில்லை. ஆகவே மரக்கறி தான்ஜின், முட்டைப்பொறியல் மற்றும் ஒரேஞ் பானம் ஆகியவற்றைச் சொன்னோம். முட்டைப் பொறியல் மஸ்ரூம் தான் இருந்தது. நாம் அது வேண்டாம் எனக் கூறி மிளகாய் வெங்காயம் தக்காளி என்பவற்றைக் கலந்து செய்ய சொன்னோம். அவர்களும் ஏற்றுக் கொண்டு செய்து தந்தார்கள்.  கடைகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். தான்ஜின் சாப்பாட்டை மிகச் சூடாக மண் சட்டியில்  இன்னுமொரு மண் சட்டியால் மூடிபடி கொண்டுவந்தார்கள். மூடியைத்  திறந்தபோது ஆவி பறந்தது. மண் சட்டியில் மரக்கறி மற்றும் ஒலிவ் ஒயில் என்பவற்றை கலந்து  மண் சட்டி மூடியால் மூடி அவித்திருந்தார்கள். நமது நாக்குக்கு பெரிய சுவையாக இருக்கவில்லை. இனி 18 நாட்களுக்கு இதுதான் நமது உணவு என்று அப்பொழுது நாம் உணரவில்லை. ஆனாலும் முதல் நாள் என்பதால் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டோம். இவ்வாறு சாப்பாடு ஒன்றை ஓடர் செய்தால் பாணும் பயறுக் கறியும் ஒலிவ் அச்சாறும் நம்மை வரவேற்க கொண்டு வந்து வைப்பார்கள். இது இவர்களின் பண்பாட்டின் ஒரு அம்சம்.

IMG_0669தான்ஜின் வட அந்திலாந்திக்கும்  மத்தியதரைக் கடலும் சந்திக்கின்ற இடத்திலுள்ள மலைப்பிரதேசம். மெல்லிய குளிர் காற்று அடிக்க நாம் தொடர்ந்தும் நடக்காமல் சாப்பிட்டுவிட்டு அறைக்குச் சென்றோம். கொண்டு வந்த உடைகள் எல்லாம் அழுக்காகியதால் ஒவ்வொரு ஆடைகளாக கழுவி அறைக்குள் காயப்போட்டோம்.  குறைந்த எண்ணிக்கையான ஆடைகளையே கொண்டுவந்திருக்கின்றோம். நாள் முழுவதும் நடப்பதால் ஆடைகள் அழுக்காகும் வீதம் அதிகம். ஆகவே அடிக்கடி கழுவ வேண்டி ஏற்படுகின்றது. கிட்டத்தட்ட கடந்த 20 வருடங்களாக நமது ஆடைகளை இயந்திரமே கழுவியது. ஆகவே நமது ஆடைகளை கழுவுவதும் இப் பயணத்தில் புதிய ஒரு அனுபவமாக இருந்தது.

IMG_0678காலையில் தங்கிய இடத்தில் உணவு கிடைத்தது. வீச்சு ரொட்டி, கேக், ஓரேஞ் பானம்.  தேநீர். மற்றும் பாண். சாப்பிட்டுவிட்டு சிம் காட் வாங்க சென்றோம்.நேற்று மாலை உரையாடிய கடை மூடியிருந்தது.  ஆகவே இன்னுமொரு கடையில் அந்த வியாபாரிக்கு ஆங்கிலம் தெரியாதபோதும்  ஒருவாறு விளங்கப்படுத்தி வாங்கினோம். இப்படியான கடைக்காரர்கள் தமது கடைக்கு ஆட்கள் வருவதை வரவேற்பவர்களாக இருக்கவில்லை. ஏனோதானோ என்றுதான் பதிலளிப்பார்கள். நாம் சிம் காட்டின் உதவியுடன் நகரத்தின் வரைப்படத்தைப் பயன்படுத்தி அடுத்த நாள் சேவ்செவோன்  செல்வதற்கான பஸ்ஸிற்குப் பதிவு செய்ய நடந்து சென்றோம். மத்திய பஸ் நிலையத்தில் பல பதிவு செய்யும் இடங்கள் இருந்தபோதும் shirleyயின் தகவல் சேகரிப்புகள் சிடிஎம் (CTM) பஸ் நல்லம் எனக் கூறியதால் அதைப் பதிவு செய்தோம். அங்கிருந்து பத்து டினாருக்கு வாடகை வாகனம் பிடித்து  மதீனாவில் உள்ள நல்ல கடை என்று சிபார்சு செய்யப்பட்ட ஒன்றுக்கு வந்தோம். அதைத் தேடி தேடி களைத்ததபோது  இன்னுமொரு பயணி உதவி செய்தார்.

IMG_0674அது ஒரு பிரான்ஸ் நாட்டுக்கார பெண்ணினது கடை. கடையில் வேலை செய்பவர் மட்டுமே இருந்தார். நாம் நீண்ட நேரம் காத்திருந்தும் நம்மை வந்து ஒன்றும் கேட்கவில்லை. நமக்கோ பசிக்களை. என்ன சாப்பாடு இருக்கின்றது எனக் கேட்டோம். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. கடையில் பெரிதாக ஒன்றையும் காணவில்லை. நாம் பக்கத்துக் கடைகளில் சாப்பிட என்ன இருக்கு என்று தேடினோம். இனிப்பு பண்டங்களே இருந்தது. அதில் சிலவற்றை வாங்கி சாப்பிட்டோம். வெளியில் வந்தபோது முதல் சென்ற கடையிலிருந்து ஒரு பெண்மணி அழைத்தார். கடையின் சொந்தக்கார பெண்மணியை தொலைபேசி அழைத்து வரும்படி கூறியிருக்க வேண்டும். நாம் மரக்கறி சாப்பாடு என்ன உள்ளது எனக் கேட்டோம். அவர் இரண்டு சாப்பாடுகளை சொன்னார். நாம் விலையைக் கேட்டோம். அது பயங்கர விலையாக இருந்தது. பசித்தபோதும் அவ்வளவு காசு கொடுத்து சாப்பிட விரும்பவில்லை. சில நேரம் சாப்பாடு பிடிக்காவிட்டாது அநியாயம். என்பதால் வேண்டாம் எனக் கூறிவிட்டு சென்றோம். போகின்ற வழியில் ஒரு நுதன சாலை இருப்பதாக தொலைபேசியில் காட்டியது. அதை காட்டிய கட்டிடத்தை சுற்றி சுற்றி தேடியபோது எல்லாப் பக்கமும் மூடியிருந்தது. ஒரு வீட்டிலிருந்த ஆணிடம் கேட்டபோது அவர் வீட்டுக்கார பெண்ணை அழைத்தார். அவர் நல்ல ஆங்கிலம் கதைத்தார். இன்று அணைத்தும் மூடியுள்ளது. எல்லோரிடமும் கேட்காதீர்கள் ஏமாற்றுவார்கள் என்று எச்சரிக்கையும் செய்து அனுப்பினார். நேற்றிரவு சாப்பிட்ட கடையில் சென்று சாப்பிடுவோம் என்று வரைபடத்தின் உதவியுடன் மதீனாவினுடாக தயங்கி தயங்கி சென்று கண்டுபிடித்தோம். ஏனெனில் மதீனாவிற்கு உள்ளட்டால் வெளியே வருவது என்பது மிகப் பெரிய பிரச்சனை. இங்குதான் எங்கள் முதல் அனுபவம் ஆரம்பமாகியது.

IMG_0662வெய்யில் எரி்த்தபோதும் பார்ப்பதற்கு இரண்டு இடங்கள் இருக்கின்றது என அறிந்தோம். அந்த இடத்திற்கு சென்றால் அது நாம் நேற்று மாலை சென்ற இடம். காய்ந்து போயிருந்த இடம் ஒன்றை பார்ப்பதற்கு அழகான பூந்தோம் மற்றும் நீர்த் தாடகம் என்று எழுதியிருந்தார்கள். அந்த ஏமாற்றத்தினால் இனி ஒன்றையும் பார்ப்பதில்லை எனத் தீர்மானித்து பக்கத்திருந்த மரங்கள் இருந்த சரிவொன்றில் சென்று நிழலில் இளைப்பாறினோம். ஆண்கள் மட்டுமே மர நிழல்களில் நித்திரை கொண்டோ அல்லது சுற்றிவர இருந்து உரையாடிக் கொண்டோ இருந்தார்கள். சிறிது நேரத்தின் பின் என்ன செய்வது எனத் தெரியவில்லை. மொரக்கோவின் அனைத்து நகரங்களிலும் பழைய நகரம் மதீனாவாகும். இப்பொழுது புதிய நகரம் ஒன்றையும் அமைக்கின்றார்கள். அங்கு மோல் இருக்கின்றது. அங்கு செல்வோம் என முடிவெடுத்து வாடகை வாகன சாரதியுடன் விவாதித்து பணத்தை உறுதி செய்து கொண்டு சென்றோம். அது ஒரு மூன்று மாடிக் கட்டிடம். பல கடைகள் மூடியிருந்தன. சாப்பாட்டுக் கடைகள் மட்டும் திறந்திருந்தன. சீன ஜப்பானிய உணவகம் ஒன்றிருந்தது. அவர்களிடம் மரக்கறி சாப்பாடு இருக்கின்றதா எனக் கேட்டோம். இல்லை என்றார்கள். மரக்கறிகளையும் சோற்றையும் பிரட்டி பிரைட் ரைசாக தரமுடியுமா எனக் கேட்டோம். சரி என்றார்கள். மேலும் ஒரு விண்ணப்பம் செய்தோம். மரக்கறிகளை சின்னதாக வெட்டிப் போடுங்கள் என. அதற்கும் அவர்கள் உடன்பட்டு சிறிது நேரத்தில் செய்து தந்தார்கள். நல்லதொரு சாப்பாடு சாப்பிட்ட திருப்பதியில் பல தடவைகள் நன்றி கூறிவிட்டு பக்கத்திலிருந்து கடற்கரைக்கு நடந்து சென்றோம்.

IMG_0692இப்ொழுதுதான் கடற்கரை பாதைகளை செப்பனிட்டு புனரமைக்கின்றார்கள். இப்படியே நடந்து சென்று நேற்று மாலை சென்ற தொலைபேசிக் கடைக்குச் சென்றோம். அந்த இளைஞனிடம் இன்று காலை வாங்கிய சிம்காட் நல்லதா எனக் கேட்டோம். ஏனெனில் அது ஒழுங்காக வேலை செய்யவில்லை. அவர் நல்லது என்றார். அவரிடம் இன்னுமொரு பெயரில் ஒரு சிம் காட் இருந்தது. அதை வாங்கவா எனக் கேட்க வேண்டாம் நீங்கள் வாங்கியது நல்லது என நேர்மையாக சொன்னார். இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சியை தந்தது. நாம் எதற்கும் பயன்படட்டும் என மற்ற சிம் காட்டையும் வாங்கினோம். பின்புதான் கண்டுபிடித்தோம் நாம் வைத்திருந்த ஒரு தொலைபேசியில் ஏதோ ஒரு பிரச்சனையால் ஒழுங்கா வேலை செய்யவில்லை என. இன்னுமொரு தொலைபேசி இருந்தமை நமக்கு நன்மையளித்தது.

IMG_0688அடுத்த நாள் காலை சாப்பிட்டுவிட்டு வீதிக்கு வந்து பஸ் நிலையத்திற்கு கார் பிடித்து சென்றோம். இலங்கை இந்தியாவில் இருப்பதை போல பஸ் நிலையம். பயணிகளை கூவிக் கூவி அழைத்தார்கள். சீடிஎம் பஸ்சிற்கான கட்டணம் சதாரணமாக செல்லும் வாகனங்களுக்கான கட்டணங்களை விட ஒரு மடங்கு அதிகம். சொகுசு வாகனம். அதிவிரைவாகவும் செல்லக்கூடியது. ஆனால் நமது சுமைகளை பாதுகாப்பாக பஸ்சில் வைப்பதற்கும் 5 டினார்கள் பணம் எடுப்பார்கள். நமது பயணம் மலைப்பாதைகளினுடாக செவ்செவ்வோனை நோக்கி சென்றது.

Leave a comment