12வது நாள் – “ஓலா”விலிருந்து “சலாமி’ற்கு..

பயணக் குறிப்புகள்

12வது நாள் – “ஓலா”விலிருந்து “சலாமி’ற்கு..

IMG_0582நாம் பயணம் ஆரம்பித்த பின் இன்றுதான்  இருவரும் காலையில்  நேரத்திற்க்கு எழுந்து குளித்து வெளிக்கிட்டோம்.. ஏனெனில் சிவிலி (Spain-Seville)  நகரத்திலிருந்து தரிவ்வா (Spain-Tarifa) என்ற நகரத்திற்கு செல்வதற்கு  காலையிலையே பஸ் எடுக்க வேண்டும். பிளாசா நோவா (Plaza Nueva) என்ற இடத்திற்கு நடந்து சென்று டராம் (Ram) எடுத்து சென்.செபஸ்தியான் (San Sebastian) பஸ் நிலையத்தை பத்து நிமிடத்தில் (8.30 மணிக்கு) அடைந்தோம். 9.30 மணிக்குத்தான் பஸ் உள்ளது எனக் கூற அதற்கான பயணச் சீட்டை 40 ஈரோக்கள் கொடுத்து வாங்கிவிட்டு வெளியில் வந்து ஒரு கடையில் தேநீரையும் வாங்கி நேற்று வாங்கிய இனிப்பு பனிசையும் சாப்பிட்டோம். மர நிழலில் இருந்த எங்களை மெல்லிய தென்றல் காற்று வருடிச் சென்றது. அது சரி தென்றலும் காற்றும் ஒன்றா?

IMG_0583தரிவ்வாவிற்கு (Tarifa) மதியம் 12.30 மணிக்கு பஸ் வந்து சேர்ந்தது. பஸ் நிலையத்திலிருந்து துறை முகத்திற்கு 15 நிமிடங்கள் நடக்க வேண்டும். அவ்வாறு நடந்து செல்லும் வழியில் ஒரு கடையில் கடலைக் கறியும் சோறும் உள்ள படத்தைப் பார்த்தோம். அழகாக இருந்தது.  விலையும் 5 ஈரோ என்றிருந்தது. எங்களுக்கு பசியும் எடுக்க வாயும் ஊற உள்ளே சென்றோம். இன்னுமொரு பயணி ஒரு சட்டியில் பருப்பு நிறைந்திருக்க நடுவில் சோறு கொஞ்சம் இருக்க சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இப்படி நமக்குப் பரிச்சயமான முட்டை மற்றும் மரக் கறிகள் எனப் பல நம் நாட்டு வகைக் கறிகள் இருந்தன. இக் கடையின் உரிமையாளர் ஜெர்மனியில் இருந்து வந்தவர். இப்பொழுது இங்கு வசிக்கின்றார்.

நேற்று முந்தினம் மலக்காவில் சாப்பாடு கிடைக்காத அனுபவத்தினாலும் மொரோக்கோவில் இன்று நோன்பு ஆரம்பிப்பதாலும்  சாப்பிட்டு விட்டு துறைமுகத்திற்கு செல்வது எனத் தீர்மானித்தோம். பின் நமது நடைப் பயணத்தை ஆரம்பித்தோம். பலமான காற்று நம்மை எதிர் திசையில் தள்ள பலரிடம் துறை முக இடத்தை விசாரித்தபடி சென்றோம். நம்மிடம் வரைபடம் இல்லாததாலும் நமக்கு பிரஞ்சும மற்றம் ஸ்பானிய மொழி தெரியாததாலும் சைகை மொழியும் தனித் தனி சொற்களையும் பயன்படுத்தினோம். நாம் சென்ற வழியில் துறைமுகத்திற்கு அருகாமையில் பயணிகள் தகவல் மையம் இருந்தது. அதில் விசாரித்தபோது இன்று பலமான காற்று வீசுவதால் கப்பல்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளது எனக் கூறினார்கள். சில நேரம் முழு நாட்களுமே இடைநிறுத்தப்படலாம் என எச்சரித்தார்கள். இருப்பினும் துறைமுகத்திற்குச் சென்று விசாரிக்கச் சொன்னார்கள். இரண்டு கப்பல் நிறுவனங்கள் இப் போக்குவரத்துச் சேவையை செய்கின்றன எனவும் அவர்களே நிலைமையைப் பார்த்து முடிவு செய்வார்கள் என்ற மேலதிக தகவல்களையும் தந்தார்கள்.

முழுமையாக இடை நிறுத்தினால் இங்கு தங்குவதற்கு இடம் தேட வேண்டும். ஏற்கனவே பதிவு செய்த பணம் வீணாகிவிடும் என்ற மனக் கலக்கம் நமக்குள் உருவாகியது. இவ்வாறான பயணத்தில் எவ்வாறான சந்தர்ப்பங்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம்.

IMG_0585இப்பொழுது மொரோக்கோ (Morocco- Tanger) செல்வதற்காக தரிவ்வா (Spain-Tarifa) என்ற நகரத்தில் காத்திருக்கின்றோம். இன்று காற்று அதிகமாக இருப்பதால் காலையிலிருந்து மொரோக்கோ செல்கின்ற கப்பல்கள் (Ferry) இடை நிறுத்தப்பட்டுள்ளன எனவும் மூன்று மணிக்கு காற்றின் வேகம் குறையும் பொழுது மீள ஆரம்பிப்பார்கள் என்றும் அறிவித்துள்ளார்கள். இதனால் காலையிலிருந்து பலர் குழந்தைகளுடனும் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாமும் அவர்களுடன் இணைந்து காத்திருந்தோம். பின்பு மூன்று மணிக்குச் செல்வதையும் இடைநிறுத்தி 5 மணிக்கு சாத்தியம் என அறிவித்தார்கள்.

IMG_0591இந்த இடைவெளியில் அமெரிக்காவிலிருந்த வந்த பயணிகள் இருவருடன் உரையாடினோம். ஒருவர் லெபனானைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஆனால் அமெரிக்காவில் வாழ்பவர். மற்றவர் அமெரிக்கர் (?). முதலாமவர் தானும் ஒரு பயணி எனவும் ஆனால் தொடர்ச்சியாகப் பயணம் செய்ய சாத்தியப்படவில்லை எனவும் அதேநேரம் நாம் செல்லவிருக்கின்ற பல நாடுகளுக்கு எற்கனவே பயணம் செய்திருப்பதாகவும் கூறினார். தனது பயணத்தின் போது அவுஸ்ரேலிய பயணி ஒருவர் தனக்கு கங்காரு சாவி கொழுவியை நினைவாக தந்ததாகவும் அன்றிலிருந்து தானும் சந்திக்கும் பயணிகளுக்கு நினைவுப் பொருளொன்றை அளிப்பதாகவும் கூறி சாவி கொழுவி ஒன்றைத் தந்தார்.

IMG_0593பாரதிக்கு இப் பயணத்தில் எழுதுவதற்கு நேரம் கிடைப்பது மிகவும் கஸ்டமாக இருக்கின்றது. இப்படி அருமையாக கிடைத்த இந்த நேரத்தில் இப் பதிவை எழுத ஆரம்பித்தார்.  3.30 மணிபோல்  இரண்டு கப்பல்களில் ஒன்று நான்கு மணிக்குப் புறப்பட ஆரம்பிக்கின்றது எனக் கூறினார்கள்.

கடந்த பன்னிரென்டு நாட்களில் நான்கு நேர மாற்றங்களை மட்டும் எதிர்கொண்டோம். மேலும்நாம் இப் பயணத்தை  ஆரம்பித்தபின் எமது அடுத்த கண வாழ்க்கைப் பயணம் நம் கைகளில் இல்லை. பல சூழ்நிலைகளிலும் பலரது கைகளிலும் தங்கியிருக்கின்றது என்பதை ஏற்றுக்கொண்டோம்.  ஏனெனில் இன்று என்ன நடக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்த எங்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை தந்தது. அல்லது எற்கனவே பதிவு செய்த விடுதிக்கான கட்டணம் வீணாகிவிடும். மொரோக்கோ செல்வதற்கான பயணச் சீட்டை 73 ஈரோ கொடுத்து வாங்கினோம். மொரோக்கோவில் நோன்பு என்பதால் அங்கு சென்று உண்பதற்காக கை காவலாக  இரண்டு பனிஸ் வாங்கினோம். இறுதியாக ஸ்பைன் நாட்டை விட்டு நமது பயணத்தின் மூன்றாவது நாடான மொரோக்கோ செல்ல கப்பலில் எறினோம்.

IMG_0605முதன் முதலாக ஒரு சமுத்திரத்தை ஒரு கரையிலிருந்து இன்னமொரு கரைக்கு கப்பலில் கடந்தோம். ஒரு பக்கம் வட அந்திலாந்திக் சமுத்திரம். மறுபக்கம் அல்பொரன் கடல். கப்பலில் வைத்து விசா குத்தி மொரோக்கோ குடிவரவு பரிசோதகர்கள் வரவேற்றார்கள். எற்கனவே மொரோக்கோ வாகன சாரதிகள் தொடர்பாக வாசித்ததினால் நாம் கொஞ்சம் எச்சரிக்கையாகவும் உறுதியாகவும் இருந்தோம். ஒரு சாரதி நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு 100 டிராம்கள் கேட்டார். நாம் 50 டிராம்கள் தருவோம் என்றோம். எற்றுக்கொண்டார். இருப்பினும் அவர் 20 டிராமுக்கு 50 டிராம்கள் வாங்கி எம்மை மடக்கி விட்டார் என்பதை நாம் தங்கியிருந்த விடுதிக்கு வந்தபோது அறிந்து கொண்டோம்.

ஒரு சமூத்திரம் இரண்டு நாடுகளைப் பிரிக்கின்றது. இடைப்பட்ட தூரம் 20 மைல்கள் (32 கி,மீ) மட்டுமே. ஆனால் எவ்வளவு வேறுபாடுகள். வாழ்க்கைத் தர வித்தியாசங்கள். எப்படி இது சாத்தியம்? யார் காரணம்?

IMG_0626நாம் தங்கியிருந்த விடுதிக்கு மிகவும் குறுகிய பாதைகளினுடாக வந்தபோது ஒருவர் நமது காருடன் ஒடி வந்தார். நாம் காரை விட்டு இறங்கியவுடன் இதுதான் விடுதி எனக் காட்டி தான் செய்த உதவிக்காக பணம் கேட்டார். விடுதியின் வரவேற்பறையிலிருந்த பெண் எம்மை மொரோக்கோ பண்பாட்டுடன் தேநீர் தந்து வரவேற்றார்.

இதுவரை நாம் “கிராசியஸ்” சொன்னோம் இனி சில நாட்களுக்கு “சுக்கிரியா” சொல்லப் பழக வேண்டும்;.

“கிராசியஸி”லிருந்து “சுக்கிரியா”விற்கு நாமும் மெல்ல மாறினோம்.

வணக்கம் – ஓலா – சலாம்
நன்றி – கிராசியஸ் – சுக்கிரியா

மொரோக்கோ பிரன்ஞ் காலனியத்திற்கு உட்பட்டிருந்த நாடு. பிரஞ்சு மொழியை சாராளமாகப் பேசுகின்றனர். ஆனால் “பொஸ்ஸொவா” அல்லது “மசி” என்ற சொற்களை சாதாரணமாக சொல்வதில்லை.

அடுத்த பதிவில் ;முதன் முதலாக ஒரு முஸ்லிம் நாட்டில் பயணிகளாக நாம் பயணித்த அனுபவத்தைப் பகிர முயற்சிக்கின்றோம்..

10.06.2016

 

 

One thought on “12வது நாள் – “ஓலா”விலிருந்து “சலாமி’ற்கு..

Leave a comment