பயணங்கள் – இலக்குகள் – பார்வைகள் – பகுதி 1

பயணங்கள் – இலக்குகள் – பார்வைகள்

சொந்தமாக வீடு இல்லாதவர்களும், இருக்கும் வீட்டுக்கு வாடகை செலுத்த முடியாதவர்களும் வாழ்க்கை முழுவது நாடோடிகளாக திரிவதைத் தவிர வேறுவழியில்லை. அப்படியான ஒரு குடும்பதில் பிறந்தது மட்டுமல்ல என்னைப் போல “தறுதலைப் பிள்ளை” யாகவும் இருந்துவிட்டால் ஊர்சுற்றுவதைத் தவிற வேறு வழியேயில்லை… ஒரு புறம் பொருளாதார வறுமை மறுபுறம் அரசியல் வறுமை என்பவற்றால் வீடற்றவர்களாக… நடாற்றவர்களாக தமிழ் பேசும் மனிதர்கள் உலகமெல்லாம் நாடோடிகளாக சுற்றித்திரிகின்றோம். ஆனால் இவ்வாறு நாடுகளும் ஊர்களும் சுற்றித்திரிவதில் பல நன்மைகளும் உண்டு. இதன் மூலம் பரந்த ஆழமான அனுபவங்களும் அதனுடாக பல்வேறு படிப்பினைகளும் கிடைக்கின்றன. இந்த அனுபங்களும் படிப்பினைகளும் நமது வாழ்வைப் புரிந்துகொள்வதற்கு முக்கிய பங்குவகிக்கின்றன.

சிறுவயதிலிருந்து பல்வேறு பயணங்கள் செய்திருக்கின்றோம். சில பயணங்கள் குறிப்பிட்ட இலக்குகளை நோக்கியன. மற்றும் சில இலக்குகளே இல்லாமல் அதனதன் போக்கில் நடைபெறுவன. மனிதர்களின் இவ்வாறான பயணங்கள்  பெரும்பாலும் பிரக்ஞையின்மையாக நடக்கின்றவையே என்றால் மிகையல்ல. பிரக்ஞைபூர்வமான பயணங்கள் மிக அரிதாகவே நடைபெறுகின்றன. அண்மையில் பெரும்பாலும் பிரக்ஞையின்மையாகவும் சில கணங்கள் பிரக்ஞையாகவும், ஒரு இலக்கை நோக்கி மேற்கொண்ட பயணம் ஆரோக்கியமானதாக இருந்தது. அதேவேளை நமது பயணங்கள், இலக்குகள், பார்வைகள் தொடர்பான பல கேள்விகளை நமக்குள் அது எழுப்பியது. இக் கேள்விகளுக்க்கான விடையைத் தேடியபோது முக்கியமான ஒரு படிப்பினையையும் தந்தது. அதனைப் பகிர்ந்து கொள்ள விரும்பியதன் விளைவே இப்பொழுது நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கின்ற இந்தப் பதிவு.

ஒரு விமானத்தில் ஐநூறு பயணிகளில் நாமும் ஒருவராகப் பயணம் செய்கின்றோம். இவ்வளவு பயணிகளையும் பொறுப்பெடுத்தும், அவர்களுக்கு தலைமை தாங்கிக்கொண்டும் குறிப்பிட்ட இலக்கை நோக்கி அழைத்துச் செல்கின்றார் விமான ஓட்டி. ஒரு பிரச்சனையெனின் அவசரத்திற்கு ஆகாயத்தில் உதவிக்கு ஒருவரும் இல்லை. ஆனால் விமான ஓட்டி மீது கொண்ட நம்பிக்கையில் எந்தக் கவலையும் இல்லாது நாம் ஒவ்வொருவரும் விமானங்களில் பயணங்களை மேற்கொள்கின்றோம். இவ்வாறு நம்பிக்கையுடன் பயணிப்பது வெறுமனே விமான ஓட்டியின் திறன் மீது கொண்ட நம்பிக்கை மட்டுமா?

பல்வேறு விமானங்கள் ஏற்கனவே இவ்வாறன பயணங்களை மேற்கொண்டு நிறுபித்ததிருக்கின்றன. இதிலிருந்து விமானத்தில் பயணிப்பதற்கான நம்பிக்கை நமக்குள் சதாரணமாக உருவாகியிருக்கலாம். அல்லது இந்த விமானத்தை தயாரித்த நிறுவனம் அந்த நம்பிக்கையை நமக்கு தந்ததினால் அதன் மீதான நம்பிக்கையை நாம் வளர்ந்திருக்கலாம். இவ்வாறு ஒரு நிறுவனத்தின் மீதான நம்பிக்கை உருவாவதற்கு அந்த விமானத்தை அணுவணுவாகவும் துல்லியமாகவும் கவனமாகவும் பொறுப்புணர்வுடனும் கட்டமைத்த தொழிலாளர்கள் காரணமாக இருக்கலாம். இத் தொழிலாளர்கள் பொறுப்பற்றும் தம்மையறியாதும் மிகச் சிறு தவறுகளை  விட்டிருப்பார்களேயானால் இந்த விமானங்கள் பறக்கும் பொழுது பழுதாகி பாரிய மனித அழிவுகளை ஏற்படுத்தலாம். அவ்வாறு நடைபெற்றுமிருக்கின்றன. ஆனால் இவ்வாறன அழிவுகளுக்கு தொழிலாளர்கள் மட்டும் காரணமல்ல. அவர்கள் மிகவும் பொறுப்புடன் தமது பங்களிப்புகள் செய்திருந்தாலும் இவ்வாறான விபத்துக்களையும் அழிவுகளையும் தடுத்து நிறுத்த முடியாதிருக்கலாம். ஏனெனில் தவறு வேறு எங்கோ நடைபெற்றிருக்கலாம். அதாவது விஞ்ஞானம், கணிதம் மற்றும் சூத்திரங்கள் என்பவற்றின் அடிப்படையில் விமானத்தை வடிவமைத்த புலமைசார்துறையினரும் ஆய்வளார்களும் இதற்கு காரணமாக இருக்கலாம். ஆகவே இவர்களது பங்களிப்பும் பொறுப்பான செயற்பாடும் மிக முக்கியமானது. இவர்கள் தவறுவிடுவார்களாயின் ஒரு விமானத்தை ஒழுங்காக கட்டமைக்கவே முடியாது போய்விடும் என்றால் மிகையல்ல. இவ்வாறன பலரின் கூட்டு முயற்சியினால்தான் பல பயணங்களை நம்பிக்கையுடன் மேற்கொண்டு நமது இலக்குகளை அடைகின்றோம்.

ஒரு இலக்கை நோக்கிய ஒரு பயணத்திலிருந்து நாம் கற்பது பல. பின்வருவது அவ்வாறு நாம் கற்ற ஒன்று இது. ஐயாயிரம் அடி உயரம் கொண்ட ஒரு மலைத் தீவின் உச்சியில் நின்றோம். இவ்வாறன தீவுகள் இயற்கையின் படைப்புகளில் மிக அரிதான ஒன்று. அந்த உச்சியிலிருந்து மலையடிவராத்தையும் அதனருகே ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கும் சமுத்திரத்தையும் இவை இரண்டையும் இணைக்கும் கரையையும் பார்த்தோம். இது ஒரு பார்வை. இப் பார்வையின் மூலம் இயற்கையின் ஒரு வகையான அழகை ரசித்ததுடன் புதியதொரு அனுவத்தையும் பெற்றோம். பின்பு கீழ் இறங்கி மலையடிவராத்தில் அதாவது கடற்கரையில் நடந்தோம். இப்பொழுது மலை உச்சி, கடற்கரை மற்றும் கடல் என்பவற்றை வேறு ஒரு தளத்திலிருந்து பார்த்தோம். இது இன்னுமொரு பார்வை. இதன் மூலம் இயற்கையின் இன்னுமொருவகையான அழகை ரசித்தோம். மீண்டும் ஒரு புதிய அனுபவத்தைப் பெற்றோம். பின் படகொன்றில் சமுத்திரம் நோக்கிப் பயணித்தோம். சமுத்திரத்தின் நடுவிலிருந்து மலையையும் அதன் உச்சியையும் கடற்கரையையும் சமுத்திரத்தையும் பார்த்தோம். மீண்டும் ஒரு புதிய பார்வை. இயற்கை அழகின் இன்னுமொரு பரிமாணம். புதிய அழகு. புதிய அனுபவம்.  பின் சிறிய விமானத்தில் ஏறி, ஆகாயத்திலிருந்து ஒரு பறவை பார்ப்பதைப்போல, பார்த்தோம். மீண்டும் ஒரு புதிய பார்வை. புதிய அனுபவம். இவ்வாறன ஒவ்வொரு பார்வைகளும் ஆச்சரியப்படும் வகையிலான பல அனுபவங்களைத் தந்தன.

நாம் நின்ற, பார்த்த இடம் ஒன்று. ஆனால் பார்த்த பார்வைகள் குறைந்தது நான்குவிதமானவை. இயற்கையான ஒரு இடத்தின்  பன்முக அழகை, பரிமாணங்களை பன்முக தளங்களிலிருந்து பன்முக பார்வைகள் மூலமாக அனுபவித்தோம். இதிலிருந்து பன்முக அறிவையும் பெறலாம் என்பதை முதன்முதலாக அனுபவபூர்வமாக உணர்ந்து புரிந்து அறிந்துகொண்டோம். இவற்றைவிட மேம்பட்ட இன்னுமொரு பன்முகப் பார்வையை இருந்த இடத்தில் இருந்து கொண்டே அனுபவிக்கலாம். இதற்கு நம் பிரக்ஞையை வளர்ப்பதைத் தவிற வேறு வழியில்லை என்கின்றனர். இவ்வாறான பிரக்ஞை மூலமான அனுபவத்தை அறிவதற்கு முதல் இன்னுமொரு அனுபவத்தையும் பகிர்வது நல்லது.

ஒரு பயணத்தை ஆரம்பிக்கும் பொழுது இலக்கு ஒன்றை பெரும்பாலும் தெரிவுசெய்து கொள்வோம். இவ்வாறு இலக்கானது நிச்சயமானதாக உறுதியானதாக இருக்கும் பொழுது அதை நோக்கிய பயணமானது நம்பிக்கையானதாகவும் விரைவானதாகவும் இருக்கின்றது. இதனால் பயணத்தின் ஒவ்வொரு கணங்களிலும் முகம் கொடுக்கின்ற தடைகள் கவனப்படுத்தப்படுவதுமில்லை. அவை தடைகளாகப் பெரிதுபடுத்தப்படுவதுமில்லை. இதனால் அவற்றின் மூலம் கிடைக்கக் கூடிய அனுபவங்களையும் அதனுடான அறிவையும் பெறுவதற்கு தவறிவிடுவின்றோம். இவ்வாறன பயணங்களை இயந்திரத்தனமாகப் பயணித்தாலும் குறிப்பிட்ட இலக்கை அடைந்துவிடலாம். ஆனால் பயணத்தின் ஒவ்வொரு கணங்களையும் அனுபவிக்காது விடுகின்றோம். இதனால் பாரிய இழப்புகள் ஏற்பட்டாலும் இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கையிருப்பதால் கணக்கெடுக்கத் தவறிவிடுகின்றோம். ஆனால் இது எப்பொழுதும் சாத்தியமில்லை. சில பயணங்களை நாம் விரைவாக கடக்க முயன்றாலும் அதன் பாதைகள் நமது ஒவ்வொரு அடிகளையும் மிக மிக அவதானமாக எடுத்து வைக்க நிர்ப்பந்திக்கின்றன. இது நிர்ப்பந்தமாக இருந்தபோதும் இயற்கையை இரசிப்பதற்கும் புதியவகை அனுபவத்தைப் பெறுவதற்கும் வாய்ப்பளிக்கின்றது. இந்த சந்தர்ப்பங்களை நாம் புரிந்துகொள்ளுமளவிற்கு பிரக்ஞை உள்ளவர்களாகவும் திறந்த மனம் கொண்டவர்களாகவும் இருக்கவேண்டியது அவசியம்.

சில பயணங்களில் இலக்குகள் என்பன கற்பனையானவையாக அல்லது நிச்சயமற்றவையாக இருக்கும். இவ்வாறன கற்பனையான நிச்சயமற்ற இலக்குகளை உறுதியாக அடைவதை நோக்கி பயணிக்கும் பொழுது பல நெருக்கடிகளை நாம் சந்திக்கலாம். பயணங்கள் இடைவழியில்  திசைதிருப்பப்படலாம். ஆகவே பிரதான நோக்கத்திலிருந்தே இப் பயணமானது சிலவேளை விலகலாம். அல்லது இடைநடுவில் பயணம் முடிந்துவிடலாம். ஆகவே இவ்வாறன  கற்பனையான இலக்குகளை நோக்கிய பயணத்தில் பயணிக்கின்ற கணங்கள் ஒவ்வொன்றும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. அதாவது நிச்சயமற்ற அல்லது உறுதியற்ற அல்லது தெளிவற்ற இலக்குகளாக இருக்கும் பொழுது பயணத்திற்கு மட்டுமே முக்கியத்துவமளிப்பது பயனுள்ளதும் ஆரோக்கியமானதுமாகும். இங்கு பயணமே இலக்காகின்றது.

இவ்வாறான பயணங்களில் ஒவ்வொரு கணங்களும் ஒவ்வொறு இலக்குகளே.  இந்த இலக்குகள் ஒவ்வொன்றையும் அடைவதற்கு முதலும் அடைந்தபின்பும் ஆரம்பத்தில் கூறியவாறு பன்முக பார்வைகள் மூலம், கடந்த கால, நிகழ் கால, எதிர்கால பயணத்தையும் இலக்குகளையும் மீள் பார்வைக்கு உட்படுத்தலாம். அதாவது ஒரு விமானத்தை வடிவமைப்பதிலும் கட்டமைப்பதிலும் எந்தளவு பொறுப்புடனும் அக்கறையுடனும் ஒவ்வொருவரும் கவனமாக செயற்படுகின்றார்களோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவத்தைக் இக் கவனிப்பு பெறுகின்றது. முக்கியமாக தெளிவற்ற ஒரு இலக்கை நோக்கி மக்களை வழிநாடாத்திச் செல்லும் பொழுது இக் கணங்களின் முக்கியத்துவம் அதிகமாகவே வலியுறுத்தப்பட வேண்டியதாகின்றது. அதாவது மக்களை விடுதலையை நோக்கி வழிநாடாத்தும் போராட்டங்கிளில் ஒவ்வொரு கணமும் முக்கியமானவை. இங்கு பயணம் தான் முக்கியத்துவம் பெறுகின்றன. இலக்கு என்பது ஒரு உந்துசக்தி மட்டுமே. மாறாக இலக்கு என்பது முடிந்த முடிவல்ல.

மேற்குறிப்பிட்ட இலக்குள்ள அல்லது இலகற்ற பயணங்களை பிரக்ஞைபூர்வமாகவும் பிரக்ஞையின்மையாகவும் மேற்கொள்ளலாம். பிரக்ஞையின்மையாக பயணத்தை மேற்கொள்ளும் பொழுது குறிப்பிட்ட இலக்குகளை விரைவாக அடைந்துவிடாலாம் அல்லது நீண்ட தூரம் விரைவாக சென்றுவிடலாம். இதனால் நாம் விரும்பிய இறுதி இலக்கை அடையலாம். ஆனால் அது நாம் விரும்பியவாறு இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. இதனால் இவ்வாறன பயணங்கள் மட்டுமல்ல இலக்கும் பயனற்றுப் போய்விடலாம். அதேவேளை நமது பயணம் பிரக்ஞையின்மையாக இருக்கும் பொழுது இன்னுமொன்றும் நடைபெறுகின்றது. நாம் பார்க்கின்ற ஒவ்வொன்றையும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட சொற்களால் நமது மனம் தீர்மானித்துவிடுகின்றது. அதாவது மரங்கள், ஆறுகள், பூக்கள், கடல், கரை, பறவைகள், மிருகங்கள் என்பவற்றுக்கு அதனது பெயர்களைக் குறித்து அவற்றைப் பொருளாக ஜடமாக மாற்றிவிடுகின்றோம். இதன் மூலம் அதன் உயிர்த்தன்மையை கொன்றுவிடுகின்றோம். மேலும் அவற்றுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு இடைவெளியை உருவாக்கிவிடுகின்றோம். இவ்வாறன நமது மனப் பழக்கமானது குறிப்பிட்ட பயணத்தின் நிகழ்காலம் தொடர்பான எந்தவிதமான அனுபவத்தையும் அறிவையும் நமக்குத் தராது. ஏனெனில் பயணத்தின் ஒவ்வொரு கணங்களிலும் அனுபவித்தவற்றை கண்டவற்றை உணர்ந்து புரிந்து  அறிந்து கொள்வதற்கு தவறிவிடுவோம். மாறாக இது நாம் பார்க்கின்ற இயற்கையை ஏற்கனவே இறந்துபோன சொற்களின் ஊடாக மீண்டும் நினைவுறுத்துவதாக மட்டுமே இருக்கும். இயற்கையின் உயிர்த்தன்மையை உண்மைத்தன்மையை அனுபவிப்பதிலிருந்து உணர்ந்துகொள்வதிலிருந்து புரிந்துகொள்வதிலிருந்து அறிந்துகொள்வதிலிருந்து நாம் வெகுதொலைவிலிருப்போம். சிலர் தாம் இவ்வாறான இயற்கையின் சத்தங்களைக் கேட்பதாக வாதிடலாம். ஆனால் இவர்கள் ஒன்றைக் கேட்பதற்கும் (hearing) அதை உள்வாங்கி (listening) உணர்வதற்குமான இடைவெளியைப் புரிந்திருப்பார்களா என்பது கேள்விக்குறியே?

ஒரு பயணத்தை பிரக்ஞைபூர்வமாக மேற்கொண்டால் நாம் குறிப்பிட்ட இலக்கை அடைவது மட்டுமல்ல, விரும்பிய இலக்கை காலம் தாழ்த்தியாவது அடையலாம். ஏனெனில் இங்கு நமது மனமானது இயற்கைக்கும் நமது அனுபவத்திற்கும் இடையில் சீனப் பெரும் சுவர் போல தடுத்துக் கொண்டிருக்காது. மேலும் இயற்கைகைப் நமக்குள் உள்வாங்கி உணர்ந்து கொள்வதற்கு நாமறிந்த சொற்கள் அவசியமற்றுப் போகின்றன. அதாவது சொற்களினுடாக அறிவதற்குப் பதிலாக உள்ளார்ந்து அனுபவபூர்வமாக புரிந்து உணர்ந்து கொள்கின்றோம். பலவிதப் பறவைகளின் குரல்கள், சல சலவென மரங்களினுடே செல்லும் காற்றின் ஓசை, கள கள வென பாயந்து செல்லும் நீரோடை, மரங்களின் உயிர்த்தன்மை, ஆர்ப்பரிக்கும் கடலலை, சமுத்திரங்களின் அடியில் சுதந்திரமாக சுற்றித்திரியும் கடற் பூக்கள், நம்மைத் தடவிச் செல்லும் முகில்கள் என ஒவ்வொன்றுடனும் நாம் ஒன்றினைந்து விடுகின்றோம். நமக்கும் அவற்றுக்குமான இடைவெளியானது மறைந்துபோய்விடுகின்றது. இந்த அனுபவம் பிரபஞ்ச உண்மைக்கு மிக நெருக்கமாக நம்மைக் கொண்டு செல்கின்றது. இதன் மூலம் இயற்கையின் அழகை மட்டுமல்ல அதன் உயிர்தன்மையையும் நமக்கு உணர்த்துகின்றது.

ஒரு தனிப்பட்ட மனிதரின் சிறிய பயணத்தில் பிரக்ஞை, பொறுப்புணர்வு, பன்முகப்பார்வைகள் இந்தளவு முக்கியத்துவம் பெருகின்றனவெனின், சமூக மாற்றத்திற்காக விடுதலைக்காக மக்களை வழிநாடாத்தி செல்வதற்கு எந்தளவு உழைப்பும் அர்ப்பணிப்பும் பொறுப்புணர்வும் பிரக்ஞையும் தேவைப்படுகின்றன என்பதைப் நாம் புரிந்து கொள்வது கஸ்டமானதல்ல. இதை இனிவரும் காலங்களிலாவது புரிந்து உணர்ந்து கொள்வோமா?

மீராபாரதி

18.05.2012

இக் கட்டுரை வட அமெரிக்காவின் ஒரு தீவான ஹாவாயின் இரண்டு தீவுகளுக்கு இரண்டு கிழமைகள் சென்றுவந்தபின் எழுதியது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s