சூரியனை நோக்கி ஒரு பயணம்!

சூரியனை நோக்கி ஒரு பயணம்!

east coast canada 353

வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் (பிரின்ஸ் எட்வேட் ஹைலன்ட்) சூரியன் எழுந்தபோது

மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பல நாடுகளினுடான ஒரு வருடத்திற்கான பயணம்.

கனடாவில் வாழ்ந்த கடந்த இருபது வருடங்களில் இந்தியா, நேபாளம், ஐரோப்பா (சுவிஸ், ஜெர்மன், இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து) மற்றும் கியூபா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு நாம் இருவரும் ஒன்றாகப் பயணம் செய்திருக்கின்றோம். இம் முறை இருவரும் ஒரு வருடத்திற்கு பயணம் செய்யத் தீர்மானித்திருக்கின்றோம். மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பயணிக்கின்றோம். ஆகவேதான் சூரியனை நோக்கிய பயணம் எனத் தலைப்பிட்டுள்ளோம். இப் பயணத்தில் சூரியனினால் நாம் எரிந்து போகலாம் அல்லது சூரியனுடன் நாம் ஒன்று கலக்கலாம். எதுவெனிலும் இது புதியதொரு அனுபவத்தை நமக்குத் தரலாம். இவ்வாறு பயணித்த பலரின் அனுபவங்கள் ஆச்சரிப்படும் வகையிலும் நம்பமுடியாத வகையிலும் அவர்களது வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இம் முறை பயண நாட்களில் ஒவ்வொரு நாளின் முடிவிலும் ஒரு மணித்தியாலங்களை ஒதுக்கிப் பயணம் தொடர்பான நமது அனுபத்தை சிறியளவிலாவது பதிவு செய்வது என முடிவு செய்திருக்கின்றோம். இது நமது பயண அனுபவத்தை அனைவருடனும் பகிர்வதற்கான ஒரு முயற்சியாகும்.

east coast canada 033 புலம் பெயர்ந்து அல்லது பெயர்க்கப்பட்டு முதலாளித்து நாடு ஒன்றில் வாழ்வது இவ்வாறான பயணங்களை மேற்கொள்வதை நமக்குச் சாத்தியப்படுத்தியுள்ளது. இவ்வாறு நாடுகளை நோக்கிப் பயணம் செய்வதற்கு நிறைய பணம் செலவாகும். ஒவ்வொருமுறையும் நாம் இவ்வாறு பயணம் செய்யும் பொழுது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கு ஆச்சரியம். இவர்களிடம் நிறைய பணம் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அல்லது எப்படி இவ்வாறு பயணிப்பது சாத்தியப்படுகின்றது எனக் கேட்பார்கள். நாம் பெரும்பான்மையான புலம் பெயர்ந்தவர்களைப்போல மத்தியதர அல்லது கீழ் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த மனிதர்கள். இந்த வர்க்க நிலையை ஒருவருக்கான வருமானத்தைக் கொண்டே அளவிடுகின்றார்கள். இந்தடிப்படையில் நாம் அதிகளவான வருமானத்தைக் கொண்டவர்கள் அல்ல. ஆகவே இவர்களின் கேள்வி நியாயமானதே. ஆனால் நாம் இதைச் சாத்தியப்படுத்த நமது வாழ்வு முறையில் சில மாற்றங்களை செய்தோம். அதுவே நம்மை இவ்வாறு பயணிப்பதைச் சாத்தியப்படுத்தி உள்ளது எனலாம்.

east coast canada 184முதலாவது பெரும்பான்மையானவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்வார்கள். குழந்தைகள் வளரும்வரை அவர்கள் எங்கும் அசைய முடியாதபடி அவர்களது வாழ்வை குறைந்தது இருபத்தைந்து வருடங்களையாவது  கட்டிப்போட்டுவிடும். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகியவுடன் அவர்கள் தம் வழியில் சென்றுவிடுவார்கள். பெற்றோருக்கு வயதுபோய்விடும். அதன்பின் பணம் இருந்தாலும் ஊர்சுற்றி அலைவதற்கான உடல் வலு பெற்றோருக்கு காணமல் போய்விடும். உண்மையில் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்ற பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு கல்வியை மட்டும் வழங்கினாலே போதும். அவர்கள் தம் வாழ்வை பார்த்துக் கொள்வார்கள். ஆனால் சில பெற்றோர்கள் தம்மை வருத்தி அதிகமாகவே செய்கின்றார்கள். இதனால் குழந்தைகள் பயனடைந்தபோதும் பெற்றோர் தமது வாழ்வை அழித்துக் கொள்கின்றார்கள் என்றால் மிகையல்ல.

2012 - Hawai 095இரண்டாவது வீடு வாங்கிக் கொள்வார்கள். ஒருவர் வீடு வாங்குவதாக இருந்தால் அவரின் வருமானத்தின் மூன்றில் ஒரு பங்கு மாதாந்த வீட்டுக் கடனை அடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இதற்கமைய பெரும்பான்மையானவர்களால் அவர்களுக்கு கிடைக்கின்ற வருமானத்தால் வீடு வாங்க முடியாது. ஆனால் வீடு வாங்குவார்கள். பின் அதற்காக ஓடி ஓடி உழைத்து தம் வருமானத்தின் பெரும் பகுதியை வீட்டுக்கு முதலீடு செய்கின்றனர். இது இவர்களை மேலும் இறுகக் கட்டிப்போட்டுவிடும். சிலர் ஆடம்பரமான பெரிய வீடுகளை வாங்குவார்கள். இவர்களால் வேறு எதையும் நினைத்துப்பார்க்கவே முடியாது. அல்லது வேறு வருமானங்களைக் கொண்டவர்களாக வியாபாரிகளாக இருப்பார்கள்.2012 - Hawai 048

மூன்றாவது நூகர்வு கலாசாரத்திற்குள் அகப்பட்டு தமக்கும் குழந்தைகளுக்கும் விலை உயர்ந்த ஆடைகளையும் பொருட்களையும் வாகனங்களையும் வாங்குவார்கள். இக் கடன்களை அடைப்பதிலையே இவர்களின் வாழ்நாள் கழிந்துவிடும். இதனால் இவர்களின் வாழ்வு இயந்திரமயமாகி விடுகின்றது. அதேநேரம் சிலருக்கு இதுவே ஆனந்தமான வாழ்வாகவும் இருக்கின்றமையும் உண்மைதான்.  இருப்பினும் நாம் மேற்குறிப்பிட்ட காரணங்களினால் பின்வரும் சில முடிவுகளை எடுத்தோம். இது நாம் தொடர்ச்சியாக பயணம் செய்வதற்கு வசதியாகவும் உதவியாகவும் இருக்கின்றது.

east coast canada 090குழந்தைகள் அழகானவர்கள். அவர்களுடன் நேரம் கழிப்பது ஆனந்தமானது. ஆனால் குழந்தைகளை வளர்ப்பதற்கு அதிகமான பொறுப்பும் பொறுமையும் அவசியம். பல பெற்றோர்கள் தமது தெரிவுக்கு அப்பால் ஒரு சமுதாய எதிர்பார்ப்பிற்காக அல்லது  கடமைக்காக அல்லது தமது காமத்தின் விளைவாக குழந்தைகளைப் பெறுகின்றார்கள். குழந்தைகளுக்காக குழந்தைகள் பெறுவதும் அவர்களை அவர்களாக வளர்ப்பதும் ஒரு தவம். ம்!… எங்களுக்கு குழந்தைகள் இல்லை. குழந்தைகளை நாமாகப் பெறாது முடிவு எடுத்தோமா அல்லது எங்களிடம் அதற்குரிய உடல் ஆற்றல்கள் இல்லையா என்பதை நாம் இங்கு கூறவில்லை. இதற்கு காரணம் நாம் தான் வேண்டாம் என்று முடிவு எடுத்தோம் எனக் கூறினால் அதில் ஒரு கௌரவம் ஆணவம் தொங்கு நிற்கும். எங்களால் பெறமுடியாது எனக் கூறினால் எமக்கு அந்த ஆற்றல் இல்லை என்பதாக கருதப்படும். இவ்வாறன ஆற்றலின்மை உடற் குறையல்ல. இது இயல்பான ஒன்று. ஆகவே குழந்தைகள் பெற்றவர்கள்  உயர்வானவர்களோ பெற முடியாதவர்கள் தாழ்ந்தவர்களோ அல்ல. இப் பிரச்சனைகள் தொடர்பாக சமூகத்தில் காணப்படுகின்ற நோக்கு நிலைகளினால் இதற்கான காரணத்தை நாம் கூறவில்லை. இது தொடர்பாக மீராபாரதியின் பதிவொன்றை இந்த இணைப்பில் நீங்கள் வாசிக்கலாம். ஆனால் குழந்தைகள் இல்லாமை நாம் பயணிப்பதற்கு பெரும் வசதியாக இருப்பதுடன் அதற்கான சந்தர்ப்பத்தையும் இந்த வயதில் நமக்கு வழங்கியுள்ளது.

east coast canada 110இரண்டாவது நாம் ஆடம்பர செலவுகளை அதிகமாக செய்வதில்லை. அதிகமான உடுப்புகளோ பொருட்களோ கொள்வனவு செய்வதில்லை. சில ஆடைகளை இருபது வருடங்களாகவும் பயன்படுத்துகின்றோம். நேம் பிரான்ட் சமான்களை வாங்குவதில்லை. வாங்கிய வீடும் சிறிய வீடு. அதை நாம் வரும்வரை Shirleyயின் தாயும் தங்கைகளும் பொறுப்பெடுக்கின்றனர். இவ்வாறு உறவினர்கள் இல்லாதவர்கள் ஒரு வருட வாடகைக்கும் விடலாம். மேலும் நமது காரையும் விற்கின்றோம். இவ்வாறான தெரிவுகளும் வாய்ப்புகளும் நாம் பயணம் செய்வதை மேலும் இலகுவாக்குகின்றன.

2012 - Hawai 1077இப் பயணம் Shirleyயின் கனவு. Shirley கனடாவிற்கு வந்ததிலிருந்து பல வேலைகளை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் பாரதியை நம்பிப் பயனில்லை என்பதை உணர்ந்து தனது வாழ்வை தானே செப்பனிட ஆரம்பித்தார். கணக்காளருக்கான தொழிற்துறைசார் சான்றிதழலை (CGA) வேலை செய்து கொண்டு படித்து முடித்தார். இதன் பயனாக அத் துறையில் 12 வருடங்களாக வேலை செய்கின்றார். கடந்த எட்டு வருடங்களாக ஒரு வங்கியில் வேலை செய்கின்றார். தனது கனவுப் பயணத்தை மேற்கொள்வதற்காக அந்த வேலையை ஒரு வருடம் விடுவதற்கு தீர்மானித்தார். அவரது அதிர்ஸ்டம் மட்டுமல்ல அவர் நல்ல ஒரு வேலையாள் என்பதை தனது வேலைக் காலங்களில் நிறுபித்ததால் ஒருவருடம் விடுமுறையாக கொடுக்க முன்வந்துள்ளனர். வந்தபின் வேலை இருந்தால் தரலாம் என உறுதி அளித்துள்ளனர். இதை நாம் எந்தளவிற்கு நம்பலாம் என்பது கேள்விக்குறியானது. இருப்பினும் இது நாம் எதிர்பார்க்காதது. எமது பயணத்திற்கு கிடைத்த நேர்மறையான முதல் ஆதரவு இது. நாம் நமது வாழ்வை முடிவு செய்ய வேண்டும். பல விடயங்கள் இதற்கு எதிராக இருந்தாலும் சில விடயங்களாவது சாதகமாகவும் பயனுள்ளதாகவும் கிடைக்கும். நமக்கு இது மகிழ்ச்சியானது மட்டமல்ல. ஊக்கம் தருவதுமாகும்.

2012 - Hawai-2 214மீராபாரதி கனடாவில் கடந்த இருபது வருடங்களாக வாழ்ந்தபோதும் நிரந்தர வேலைகளை எதுவும் செய்ததில்லை. இது அவரது தெரிவு. எந்த தொழிற்துறை சார்ந்தும் தன்னை வளர்த்துக்கொள்ளவில்லை. தனது துறையில் தொழில் செய்வதாயின் அத் துறையில் மேற்படிப்பு படிக்க வேண்டும். இவ்வாறான வாய்ப்புகளை தேடினார்.. ஆனால் அவை அவரது விருப்பத்திற்கு ஏற்றவையாக இருக்கவில்லை என்பதால் அந்த முயற்சியை கைவிட்டார். மேலும் குறிப்பிட்ட தொழிற்துறையில் தேர்ச்சி பெற்றவராக வர ஒரு இடத்தில் நிரந்தரமாக குறிப்பிட்ட காலமாவது தங்கி வாழ்வதுடன் அத் துறையில் கற்றுப் பயிற்சியும் செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு இடத்தில் தன்னைக் கட்டிப்போட்டு வாழ அவருக்கு விருப்பமோ ஆர்வமோ இல்லை. மேலும் பணம் உழைப்பதற்காக மட்டும்  ஏதாவது ஒரு துறையில் விருப்பமில்லாமல் ஆர்வமில்லாமல் கல்வியைக் கற்று தொழிலை செய்யவும் விரும்பவில்லை. இதனால் அப்பப்ப கிடைக்கின்ற தொழில்களை ஒப்பந்தடிப்படையில் செய்தார். இது கஸ்டமானதுதான். ஆனால் சுதந்திரமானது. இதுவே அவர் தொடர்ச்சியாக தனியாகவும் கூட்டாகவும் பயணம் செய்வதை சாத்தியமாக்கியது. இப்பொழுது அவரது நோக்கமும் விருப்பமும் பயணம் செய்வதல்ல. அது வேறு ஒன்று. ஆனால் இந்தப் பயணத்தை சில காரணங்களுக்காகத் தொடர்கின்றார்.

2012 - Hawai 776வாழ்க்கை நிரந்தரமானதில்லை. நமது வீடுகள் சொத்துகள் நிரந்தரமானதில்லை. இதை நாம் பயணம் செய்தும் பொழுது அனுபவபூர்வமாக உணரலாம். இதுவே பயணம் நமக்கு கற்பிக்கும் கல்வி. இவ்வாறு பயணங்களை மேற்கொள்வது தொடர்பாக சிந்திப்பது என்பது ஒரு மனநிலை. பயணத்தின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் பாராட்டுவார்கள். அறியாதவர்கள் அல்லது அவசியமற்றது என நினைப்பவர்கள் நம்மை முட்டாள்கள் என்பார்கள். இந்த விடயத்தில் சமூகத்தின் பார்வையில் நாம் முட்டாளாக இருப்பதையே விரும்புகின்றோம். ஏனெனில் வாழ்வது முக்கியமானது. அதுவும் நாம் விரும்பியபடி வாழ்வது மிக முக்கியமானது. வேலைக்காக மட்டும் வாழ்வது வாழ்வல்ல.

2012 - Hawai 1660எமது பயணம் குறைந்த பணத்தில் அதிகளவிலான நாடுகளுக்குப் பயணம் செய்கின்ற வகையைச் சார்ந்தது. அதாவது ஆங்கிலத்தில் budget back bag traveler’s என்று சொல்வார்கள். இப் பயணத்திற்கான பணம் மட்டுமட்டாகத் தான் சேமித்துள்ளோம். உண்மையில் சேமித்துள்ளார் எனக் குறிப்பிடுவதே சரியானது. குறிப்பாக ஐரோப்பாவில் பயணம் செய்வது கனடாவில் வாழும் எங்களுக்கு இரட்டிப்பு செலவு. பணமாற்றம் செய்யும் பொழுது நமது பணம் அரைவாசியாகிவிடும். இதைவிட அந்த நாடுகளில் விலைவாசிகளும் உயர்வானவை. இதிலிருந்து தப்புவதற்காக இதுவரை செய்யாத வேறு சில விடயங்களை புதிதாக முயற்சிக்க உள்ளோம். உதாரணமாக http://www.wwoof.net/ மூலமாக தோட்டங்களில் உழைப்பதன் மூலம் தங்குமிடத்திற்கும் உணவிற்குமான செலவுகளை சரிசெய்து கொள்வது. சில நாடுகளில் http://www.hostelworld.com/ மூலமாக விடுதிகளில் தங்க தீர்மானித்துள்ளோம். இது ஐரோப்பாவில் பிரபல்யமானதும் மலிவானதுமாகும். ஆகவே இடம் பிடிப்பதும் கஸ்டமானது. மேலும் https://www.airbnb.ca/ இன் மூலமாக ஆடம்பர உல்லாசப் பயணத் துறை சூழல்களைத் தவிர்த்து சதாரண மனிதர்களுடன் வாழலாம். இவ்வாறான வழிமுறைகள் அந்தந்த நாட்டு சதாரண மக்களுடன் வாழ்ந்து அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதை அதிகரிக்கும். மேலும் போகின்ற வழிகளில் குறிப்பிட்ட நாடுகளுக்கான பயணச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதினுடாக குறிப்படளவு பணத்தை சேமிக்காவிட்டாலும் பயணத்தை நாம் விரும்பியபடி தீர்மானிக்கலாம் என முடிவெடுத்துள்ளோம்.

2012 - Hawai 1599நமது பயணம் ஜூலை மாதம் முதல் வாரம் இலண்டனிற்கு செல்வதில் இருந்து ஆரம்பிக்கின்றது. அங்கு நான்கு நாட்கள் தங்கிய பின் அங்கிருந்து ஸ்பைனுக்கு செல்கின்றோம். இங்கு ஒரு வாரம் தங்கிய பின் மொரோக்கோ செல்கின்றோம். இங்கு இரண்டு அல்லது மூன்று கிழமைகள் தங்குகின்றோம். பாலைவனங்களையும் பழைமை வாய்ந்த இடங்களையும் பார்ப்பதே இதன் நோக்கம். இங்கிருந்து நோர்வேக்குப் பயணமாகின்றோம். நண்பர்களுடன் சந்திப்பும் நூல்கள் அறிமுகமும் நடைபெறலாம். இங்கு மூன்று நாட்கள் தங்கிய பின் சுவிடனுக்குப் பயணம் செய்கின்றோம். சுவிடனில் இயற்கை விவசாயம் செய்கின்ற இடத்தில் இரண்டு கிழமைகள் தங்கி வேலை செய்வதனுடாக கற்கவும் போகிறோம். இந்த இடங்களை http://www.wwoof.net/ என்ற இணையத்தளத்தில் பணம் கட்டி அங்கத்தவராக இணைந்ததனுடாகப் பெற்றுக் கொண்டோம். இவ்வாறு ஒவ்வொரு நாடுகளுக்கும் பணத்தைக் கட்டி பெறலாம். ஆனால் சில நாடுகளில் இருக்கும் நண்பர்கள் இந்த சந்தர்ப்பத்தை தாமாகவே தந்ததால் அவசியப்படவில்லை. சுவிடனிலிருந்து பின்லாந்து சென்று அங்கும் இருவாரங்கள் ஒரு இடத்தில் தங்கி வேலை செய்யப்போகின்றோம். இவ்வாறு இரஸ்சியாவில் சென் பீட்டர்ஸ்பேக் மற்றும் மொஸ்கோ ஆகிய இடங்களில் ஒவ்வொரு வாரம் தங்கி நின்று வேலை செய்யப் போகின்றோம். இந்த இடங்களில் எல்லாம் மேற்குறிப்பிட்டவாறு ஒரு நாளைக்கு ஆறு மணித்தியாலங்கள் அவர்களுக்குத் தேவையான வேலைகளுக்கு பங்களிப்பு செய்வதனுடாக நமது தங்குமிடம் மற்றும் உணவிற்கான செலவுகளை ஈடுசெய்கின்றோம். மேலும் இதனுடாக அந்த நாட்டு மக்களுடன் நெருக்கமாக பழகும் சந்தர்ப்பங்களும் கிடைக்கின்றன. வேலையில்லாத நேரங்களில் அந்த இடங்களை சுற்றிப் பார்க்கலாம். இவ்வாறு செய்வது நமது கடந்த கால பயணமுறைகளிலிருந்து மாறுபடுகின்றது.

இரஸ்சியாவிலிருந்து ஐரோப்பாவின் வேறு நாடுகளுக்கு முக்கியமாக இத்தாலிக்குப் போய் பின் அல்லது நேராக கீரிசுக்குப் போகின்றோம். இந்தியாவைப் போல கீரிஸ் நம் கனவு நாடுகளில் ஒன்று. சோக்கிரட்டிஸ் போன்ற மாபெரும் மனிதர்கள் பிறந்து வாழ்ந்த நாடு. இங்கும் இரண்டு கிழமைகள் தங்கிய பின் இந்தியாவிற்கு குறிப்பாக காஸ்மீருக்குச் செல்கின்றோம். இங்கிருந்து நேபாளம், பூட்டான், பர்மா, தாய்லாந்து. பிலப்பைன்ஸ், வியட்னாம், கம்போடியா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து இறுதியாக மீண்டும் இந்தியாவிற்கு வந்து நமது தேனிலவு இடமான கேரளாவில் சில நாட்கள் தங்குகின்றோம். இதன்பின் 2017ம் ஆண்டு பெப்பிரவரி மாதம் இலங்கையில் பயணத்தை முடிப்பதாக திட்டம். மேற்குறிப்பிட்டவாறு நாட்களை தெரிவு செய்தற்கு குறிப்பிட்ட நாடுகளில் உல்லாசப் பயணங்கள் உச்சமாக இருக்கின்ற நாட்களை தவிர்ப்பதனுடாக நமது செலவுகளை கட்டுப்படுத்துவதும் ஒரு நோக்கமாகும். உண்மையில் நாம் இரண்டு மாதங்களுக்கு முன்பே பயணத்தை ஆரம்பித்திருந்தால் அது மிகப் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் பயணத்தைப் பிற்போட வேண்டி ஏற்பட்டது.

2012 - Hawai 2013

வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் (ஹவாய்) விழுந்த சூரியன்

இப் பதிவின் நோக்கம் நமது அனுபவங்களைப் பகிர்வதுடன் இவ்வாறு பயணம் செய்கின்ற சக நண்பர்களின் தொடர்புகளை பேணுவதும் அவர்களது அனுபவங்களை பெறுவதுமாகும். இது எமது பயணத்தை இலகுவாக்கும். வாழ்க்கை ஒரு பயணம். அதில் இவ்வாறு பயணம் செய்வது என்பது மேலதிக அனுபவமாகும். மேலும் நமது திட்டத்தை நமது நண்பர்களிடம் கூறியபோது அவர்களது வேண்டுகோளும் இவ்வாறான பதிவுகளை தொடர்ச்சியாகவும் தவறாதும் செய்யும்படி கேட்டார்கள். இதனுடாக அவர்களின் விருப்பதையும் நிறைவு செய்ய முயற்சிக்கின்றோம். நாம் நமது பயணத்தை ஆரம்பிக்கும் வரை இதுவரை நாம் செய்த பயணங்கள் தொடர்பான நமது அனுபவங்களை இந்த வலையில் பதிவு செய்ய முயற்சிப்போம். என்றும் இதனுடாகத் தொடர்பில் இருக்க முயற்சிப்போம்.
உங்கள் வாழ்த்துகளுடனும் ஆதரவுடனும் நமது பயணம் இனிதாக நடைபெறும் என நம்புகின்றோம். நமது பதிவுகள் பயணங்கள் தொடர்பான உங்கள் ஆலோசனைகள் ஆரோக்கியமான விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம்.

pinery beach 070நாம் இதுவரை சென்ற பயணங்களில் ஒரே ஒரு பயணத்தைத் தவிர மற்ற எல்லாப் பயணங்களிலும் சண்டை பிடித்து கோவித்துக் கொண்டிருப்போம். ஹாவாய்க்கு சென்ற பயணத்தில் மட்டும் பாரதி சண்டை பிடிப்பதில்லை என எடுத்த முடிவாலும் Shirleyயின் பயண முடிவுகளுடன் உடன்பட்டு பின்பற்றியமையாலும் சண்டையில்லாத கோவப்படாத ஒரு பயணமாக முடிந்தது. இந்தப் பயணமும் அவ்வாறு நடைபெறும் என நம்புகின்றோம்.
நட்புடன் Shirley & மீராபாரதி

ஒரு பயணம் தொடர்பான நமது அனுபவம் வாசிக்க இந்த இணைப்பை அழுத்தவும்.
மேலும் பல பயணங்கள் தொடர்பான பதிவுகளைப் பார்க்க இங்கே அழுத்தவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s